16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

“தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு'' – முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

Date:

மும்பை தாராவியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் நீண்ட இழுபறிக்கு பிறகு தீவிரம் அடைந்திருக்கிறது.

மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கிறது. தாராவி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வரக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் வீடு கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பட்னாவிஸ்

ஆனால் வீடு பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்கு முன்பு வரை தாராவியில் குடிசை கட்டி வசிப்பவர்களுக்கு 350 சதுர அடியில் இலவச வீடு வழங்கப்படும். ஆனால் அதன் பிறகு கட்டப்பட்ட குடிசைகள் மற்றும், மாலாக்கள் எனப்படும் மாடியில் வசிப்பவர்களுக்கும் வீடு கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வந்தது.

இதையடுத்து 2022ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு வரையிலான குடிசைகள் மற்றும் மாடி வீடுகளுக்கும் வாடகை வீடு திட்டத்தில் வீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற மின் கட்டண ரசீது, விற்பனை ஒப்பந்த நகல், ஆதார் கார்டு, கீழ் தளத்தில் வசிப்பவர்களிடைருந்து பெறப்பட்ட பிரமாணபத்திரம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராவி குடிசைவாசிகளிடம் இருக்கும் ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவேகத்தில் நடந்து வருகிறது. இது வரை 55 ஆயிரம் குடிசைகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளது.

தாராவியில் இன்னும் சில இடங்களில் கணக்கெடுப்பு நடத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாராவி கும்பர்வாடாவில் இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது பகுதியில் கணக்கெடுப்பு நடத்த இது வரை அனுமதிக்கவில்லை.

தாராவி குடிசை

மாஸ்டர் பிளான்

தாராவியில் ஒரு புறம் குடிசைகள் கணக்கெடுப்பு, ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடந்தாலும் மற்றொரு புறம் தாராவியில் செயல்படுத்தப்பட இருக்கும் மாஸ்டர் பிளான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்தார். இதில் துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் கலந்து கொண்டார்.

இதனை பெற்றுக்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”வீடு பெற தகுதிகள் மாறுபட்டு இருந்தாலும், இந்த திட்டத்தில் தாராவி பூர்வீக குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். தாராவியின் வணிக அடையாளத்தையும் அதன் தனித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் .

இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேவையான ஒருங்கிணைப்பை வழங்கவேண்டும். உள்ளூர் மக்களின் நம்பிக்கை பெற்று அவர்களின் உணர்வுகளை பாதுகாப்பதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். தாராவி மாஸ்டர் பிளானை ஆய்வு செய்த முதல்வர் தலைமையிலான குழு அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

இதன் படி தாராவியில் இலவச வீடு பெறும் மக்களுக்கு இரண்டு கழிவறை வசதியுடன் கூடிய 350 சதுர அடி வீடு வழங்கப்படும்.

தாராவியில் மொத்தம் 600 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 296 ஏக்கர் நிலம் மட்டும் குடிசை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தாராவியில் உள்ள நிலத்தில் 60 சதவீத நிலம் மும்பை மாநகராட்சிக்கு சொந்தமாகும்.

வழக்கமாக குடிசை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பில்டர்கள் நிலத்தின் மதிப்பில் 25 சதவீத தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

ஆனால் தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்தில் அரசுக்கு செலுத்தவேண்டிய அனைத்து கட்டணத்தையும் அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மும்பை மாநகராட்சியிடம் இருக்கும் நிலத்தின் மூலம் மாநகராட்சிக்கு எந்த வித வருவாயும் கிடைக்காது. இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு தாராவிக்கு வெளியில் வீடு கட்டிக்கொடுக்கப்பட இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி – பரபர மே.வங்க தேர்தல் களம்!

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை...

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...