பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், மீனவர்களை தாக்கி சிறைபிடித்துச் செல்வதையும் இலங்கை கடற்படையினர் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை அரசு, அவற்றை நீதிமன்றத்தின் மூலம் நாட்டுடமையாக்கி ஏலம் விடும் செயலில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு பிடிபட்ட படகுகளில் 67 படகுகளை ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை கடற் தொழில் அமைச்சகம் செய்து வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற 42 மீனவர்களையும், 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த செயல் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதும் மீனவர்களை அதிர்ச்சுக்குள்ளாக்கி உள்ளது. இதையடுத்து கடந்த 3 நாள்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் தங்கள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க தங்கச்சிமடத்தில் நேற்று கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். இதில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தர வலியுறுத்தியும், இந்திய – இலங்கை மீனவர்களிடையே சுமுகமான முறையில் மீன்பிடி தொழில் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவும், இலங்கை அரசால் விதிக்கப்பட்ட அபராத தொகையினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர்களும் பங்கேற்கும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த கட்டமாக மாநில அளவில் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.