மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது
கூறைநாடு பகுதியானது பல்வேறு ஜவுளிக்கடைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், மொத்த வியாபாரம் செய்யும் பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பல்வேறு கடைகளை உள்ளடக்கிய மாவட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
கூறைநாடு பகுதியின் பேருந்து நிறுத்தத்துக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் மதுபானக்கடையால் பெரும் அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளையும் அவ்வப்போது சந்திக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்களிடையே பேசியபோது, “இந்த டாஸ்மாக்க ஒட்டுன மாறித்தான் நாங்க பஸ்க்கு வெயிட் பண்ற இடம் இருக்கு. இந்த டாஸ்மாக் இல்லாதப்ப நாங்க எல்லாம் அங்கதான் பஸ் ஏற வெயிட் பண்ணுவோம்.
எப்ப இந்த டாஸ்மாக் வந்துச்சோ, அப்போவே இந்த பஸ்ஸ்டாப் குடிகாரர்களோட இடமாகிடுச்சு. நாங்க அந்த சைடு போறதே இல்ல. அங்கேயே கொஞ்சம் தள்ளிதான் பஸ் ஏற கால்கடுக்க நின்னுட்டு இருக்குறோம்.
பஸ் வர எவ்ளோ நேரம் ஆனாலும் நின்னுட்டு தான் இருக்குணும். பக்கத்துல குடிச்சிட்டு ஒரு மாதிரியா நடந்து வருவாங்க. அதையெல்லாம் பாக்கவே ரொம்ப பயமா இருக்கும். பஸ் எல்லாமும் கொஞ்சம் தள்ளி நாங்க நிக்கிற இடத்துலதான் நிக்கும்.
சாயங்காலத்துக்கு மேல இங்க நின்னு பஸ் ஏறவே பயப்புடுவாங்க. ஏன்னா… அந்த டைம்ல இங்க நெறைய பேரு குடிச்சுட்டு பாட்டிலும் கையும்மா நிப்பாங்க. நைட் ஏழு, எட்டு மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்துல கடையில வேலை பாக்குற பெண்ணுங்க எல்லாம் வேலையை முடிச்சிட்டு பஸ் ஏற வருவாங்க.




இங்க பஸ் ஸ்டாப்ல குடிச்சுட்டு இருக்குறவங்க, அந்தப் பிள்ளைங்கள கேலி கிண்டல் பண்ணி போதையில வம்பு பண்ணுவாங்க. அதனாலேயே, பஸ் வர்ற வரைக்கும் இருக்காம, ஆட்டோ பிடிச்சு கூட கிளம்பிருவாங்க. குடிச்சிட்டு வண்டிய ரோட்ட மறிச்சு நிப்பாட்டுறது, போதையில ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்குறதுன்னு ரொம்ப அட்டகாசம் பண்ணுவாங்க.
இந்த டாஸ்மாக் கடையில இருந்து 50 மீட்டர் தூரத்துல ஹாஸ்பிடல், 500 மீட்டர்க்குள்ளேயே மசூதி, ஸ்கூல்ன்னு எல்லாமே இருக்கு. புதுசா பதவியேத்த முதல்வர் விஜய் அரசு இந்த டாஸ்மாக் கடைகள் தொடர்பா அறிவிப்பு விட்டதும், நாங்க கொஞ்சம் நிம்மதி அடைஞ்சோம்.

ஆனா, அதிர்ச்சி தர விதமா… இந்த டாஸ்மாக் கடை அந்த லிஸ்ட்ல இல்லைன்னு சொல்லிட்டாங்க. அரசாங்கம் சொன்ன மாதிரி 500 மீட்டர் தூரத்துக்குள்ளவே தான் இந்தக் கடை இருக்கு. அப்படியிருந்தும் எதுக்கு மூடலைன்னு தெரியல… உடனடியாக இந்தக் கடையை மூட அரசு நடவடிக்கை எடுக்கணும். பழைய மாதிரி பஸ் ஸ்டாப்லயே காத்திருந்து பஸ் பிடிக்குற நிலைமை ஏற்படணும்” என்றனர்.





அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பர் சுந்தர் பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய கடைவீதியில் ஒன்று கூறைநாடு. மதுபானக்கடையினால் அப்பகுதி மக்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துவருகின்றனர்.
மது போதையில் தள்ளாடியபடி செல்வோரால் இந்தப் பகுதியில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.ஐந்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் மட்டும் இந்த விபத்துகளால் இறந்துள்ளனர். முக்கியமாக பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, மதுபானக்கடையை இங்கிருந்து மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மதுபானக்கடையை புதிய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக மூட வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.




