திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறாத ஒரு புதிய கட்சியுடன் தாங்கள் இணைந்து விட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில், இது இந்திய அரசியலில் ஒரு புதிய அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் இதேபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது திரிணமூல் எம்.பி.க்களின் இந்த திடீர் முடிவு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உள்ள ஒரு சர்ச்சைக்குரிய விதியை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. இந்த எம்.பி.க்களின் முயற்சி வெற்றி பெறுமா என்பது, அரசியல் கணக்குகளை விட, உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத ஒரு சட்டக் கேள்வியைப் பொறுத்தே அமையும்:
ஒரு குழுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே ஒரு இணைப்பை அறிவிக்க முடியுமா, அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா?
கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன?
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிக்காலத்தில் தங்கள் கட்சிகளை மாற்றி ஆட்சிகளைக் கவிழ்ப்பதைத் தடுக்கும் நோக்கில், 1985-ஆம் ஆண்டு 52-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் சேர்க்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாமாக முன்வந்து தனது கட்சி உறுப்பினர் பதவியைத் துறந்தாலோ அல்லது கட்சியின் உத்தரவை (கொறடா உத்தரவு) மீறி நாடாளுமன்றத்தில் வாக்களித்தாலோ, அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ஆரம்பத்தில் இந்தச் சட்டத்தில் இரண்டு விதிவிலக்குகள் இருந்தன. முதலாவது “பிளவு” (Split). ஒரு கட்சியின் சட்டமன்றக் குழுவில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஆனால், இந்த விதிமுறை தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், 2003-ஆம் ஆண்டில் 91-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது.
தற்போது “இணைப்பு” (Merger) என்ற ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உள்ளது. பத்தாவது அட்டவணையின் 4-வது பத்தியின்படி, ஒரு அரசியல் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைந்தால், மற்றும் அந்த இணைப்பை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்குத் தகுதி நீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதாவது, கட்சியின் இணைப்பு முடிவு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் ஆகிய இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
20 எம்.பி.க்களும், அதிகம் அறியப்படாத கட்சியும்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்து, பாஜக முதன்முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்குள் அதிருப்தி வெடித்தது. கட்சியின் கொறடா பதவியிலிருந்து நீக்கப்பட்ட ககோலி கோஷ் தஸ்திதார், இந்த அதிருப்தி குழுவின் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார்.
அவருடன் முன்னாள் மக்களவைக் குழுத் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், துணைத் தலைவர் சதாப்தி ராய் மற்றும் நடிகர்களான தீபக் அதிகாரி, சாயோனி கோஷ், ஜூன் மலியா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பிரசுன் பானர்ஜி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை, 19 அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து தங்கள் கடிதங்களைக் கொடுத்தனர். 20-வது எம்.பி.யான ரச்சனா பானர்ஜி, மலேசியாவிலிருந்து தனது ஒப்புதல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர்கள் அனைவரும், 2022-ல் பதிவு செய்யப்பட்டு, 2023-ல் கடைசியாகத் தேர்தலில் போட்டியிட்டு, தற்போது எந்த மட்டத்திலும் ஒரு இடத்தைக் கூட வெல்லாத “நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா” (NCPI) என்ற கட்சியுடன் தாங்கள் இணைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த இணைப்பு அங்கீகரிக்கப்பட்டால், மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் பலம் 28-லிருந்து 8 ஆகக் குறையும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பலம் 294-லிருந்து 314 ஆக உயரும். இது மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 46 இடங்கள் குறைவாக இருந்தாலும், மாநிலங்களவையில் இந்த இலக்கை எட்ட கூட்டணிக்கு வெறும் 8 இடங்களே தேவைப்படும்.
திரிணமூல் காங்கிரஸின் எதிர்வினை!
மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் உடனடியாக தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி, சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “பத்தாவது அட்டவணையின் கீழ் பிளவுக்கு இப்போது அனுமதி இல்லை. திரிணமூல் காங்கிரஸ் ஒரே, பிரிக்க முடியாத கட்சியாகவே உள்ளது” என்று வாதிட்டார்.
2023-ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, சட்டமன்றக் குழு ஒருபோதும் அரசியல் கட்சியிலிருந்து தனித்துச் செயல்பட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞரும், சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல், “திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாக ஒரு கட்சியுடன் இணைய முடியாது; திரிணமூல் காங்கிரஸ் கட்சி அப்படி ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே அது சாத்தியம். அவர்களைத் தகுதி நீக்கம் செய்யுங்கள்,” என்று கடுமையாகக் கூறியுள்ளார்.

சட்டப் போராட்டம்
பத்தாவது அட்டவணையின் 4-வது பத்தி, அரசியல் கட்சியின் இணைப்பு முடிவையும் குறிப்பிடுகிறதா அல்லது சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மட்டும் போதுமா என்பதுதான் தற்போதைய முக்கிய சட்டக் கேள்வி.
2023 மகாராஷ்டிர வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சியும், சட்டமன்றக் கட்சியும் வேறு வேறு என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை அரசியல் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியது. இந்தத் தீர்ப்பின்படி பார்த்தால், எம்.பி.க்கள் தாங்களாகவே ஒரு இணைப்பை அறிவிக்க முடியாது.
இருப்பினும், 2022-ல் கோவா கட்சித் தாவல் வழக்கில், பம்பாய் உயர் நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வேறு கட்சியில் இணைந்ததையே “இணைப்பாக” ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு (கிரிஷ் சோடங்கர் எதிர் கோவா சபாநாயகர்) தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு, இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான சட்ட நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகரின் பங்கு
தற்போதைக்கு, இந்த 20 எம்.பி.க்களின் எதிர்காலம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் கைகளில்தான் உள்ளது. அவர் கையெழுத்துக்களைச் சரிபார்த்து, இணைப்பு கோரிக்கை குறித்து முடிவெடுப்பார். ஒரு சபாநாயகர் தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கக் காலக்கெடு எதுவும் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை, இந்த எம்.பி.க்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள்.
2003-ல் “பிளவு” விதி நீக்கப்பட்டதன் நோக்கம் சட்டத்தைக் கடுமையாக்குவது என்றால், தற்போது “இணைப்பு” விதி, திட்டமிடப்பட்ட கட்சித் தாவல்களுக்கான புதிய வழியாக மாறி வருகிறது.!




