15
September, 2026

A News 365Times Venture

15
Tuesday
September, 2026

A News 365Times Venture

BRICS : `வயதுக்கு வந்துவிட்டதா' பிரிக்ஸ்? `டில்லிப் பிரகடனம்' – முழு அலசல்! | மணிவண்ணன் திருமலை

Date:

டில்லியில் நடந்து முடிந்த பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு,  இந்த மாதிரி மாநாடுகளின் முடிவில் வெளியிடப்படும் ஒரு  பிரகடனம் என்ற வழக்கமான அறிக்கை மற்றும் புகைப்பட வாய்ப்புகள்,  மாநாட்டில் சைவ உணவு பற்றிய சர்ச்சை போன்ற செய்திகளுடன் முடிந்திருக்கிறது.

மத்தியக்கிழக்கில் நடந்து வரும் போர்கள், தெர்மாமீட்டரில் ஏறி இறங்கும் பாதரசம் போல டிரம்ப் நிர்வாகத்தின் மனோநிலைக்கு ஏற்றபடி ஏறி இறங்கும் சர்வதேச வர்த்தக வரிவிதிப்புகள்,  செயற்கை நுண்ணறிவின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்படுத்தும் அதிர்வுகள், பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள், தீவிரவாதம் போன்ற பல முக்கிய சமகாலப் பிரச்சனைகளையும்,  ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் கட்டமைப்பு சீர்திருத்தம் போன்ற வரலாற்று ரீதியான கோரிக்கைகளையும் இந்த மாநாடு விவாதித்திருக்கிறது.  

பிரிக்ஸ்

ஆனால் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட 11 நாடுகளும் ஆமோதித்து வெளியிட்ட 140 அம்சங்கள் கொண்ட `டில்லிப் பிரகடனம்’ இந்த முக்கிய விஷயங்களில் பலவற்றில், குறிப்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல்  பொத்தாம் பொதுவாக வெளியிட்டிருக்கும்  கருத்துக்கள் இந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே நிலவும் மாறுபட்ட கருத்துகளையே காட்டுவதாகத் தோன்றுகிறது.

இரான் போர் பற்றிய “கவலை”

இரான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் சௌதி அரேபியா என்ற மூன்று முக்கிய மத்தியக் கிழக்கு நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் (சௌதி அரேபியாவின் உறுப்பினர் அந்தஸ்து பற்றி இன்னும் சற்று நிச்சயமற்ற தன்மை இருக்கிறது என்பது வேறு விஷயம்) , டில்லிப் பிரகடனம் அமெரிக்க – இரான்  போருக்கு எந்தத் தரப்பையும்  பழி போடாமல்,  அமைதி  கோரி வேண்டுகோளை  மட்டும் வைத்திருக்கிறது.
அமெரிக்க இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குள்ளான இரான்,  தாக்குதல் நெருக்கடியிலிருந்து தப்ப, அமெரிக்காவின்  மத்தியக் கிழக்கு கூட்டாளி நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது சமீபத்திய வரலாறு.
இரானின் தாக்குதல்களுக்குள்ளான நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்டுகள்.  அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடு.  அந்த இரு நாடுகளுமே பிரிக்ஸ் அமைப்பில் சமீபத்தில் சேர்ந்த நாடுகள் என்ற நிலையில்,  அமெரிக்க – இரான் மோதல்கள் பற்றிய தீர்மானம் இரு நாடுகளையும் பாதிக்காத வண்ணம், மத்தியக் கிழக்கு போர் பற்றி “ஆழ்ந்த கவலை” தெரிவிப்பதோடு முடிந்திருக்கிறது.
இரு தரப்புகளும் உச்ச பட்ச கட்டுப்பாட்டைப் பிரயோகிக்க வேண்டும் ,  சம்பந்தப்பட்ட நாடுகளின் கருத்துகளை மதிக்கும் வகையிலான “ பல தரப்பு அணுகுமுறை” தேவை என்றெல்லாம் கூறியிருக்கிறது இந்தப் பிரகடனம்,
இரான் மீது வலுக்கட்டாயமாக ஒரு தாக்குதலை நடத்தி மத்தியக் கிழக்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய டிரம்ப் நிர்வாகத்தைப் பற்றியோ, அல்லது டிரம்ப்பை இந்தத் தாக்குதல் நடத்த உந்தியதாகக் கூறப்படும் இஸ்ரேல் பற்றியோ தீர்மானம் மூச்சுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல போரை அடுத்து,  சர்வதேச சுதந்திரக் கடல்வழிப் போக்குவரத்துக்கான ஐ.நா மன்ற வழிமுறைகளை மீறி, ஹோர்மூஸ் நீரிணையை மூடி உலகப் பொருளாதாரத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கிய இரான் நடவடிக்கையைப் பற்றியும் பிரிக்ஸ் அமைப்பின் இந்தப் பிரகடனம் வாய் திறக்கவில்லை.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாளன்று தான் அமெரிக்காவும் இரானும், ஆகஸ்டு மாத அமைதிக்குப் பின்,  தங்கள் பரஸ்பரத் தாக்குதல்களை மீண்டும் துவங்கின என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.  

ஆனாலும்,  சில நேர்மறையான விஷயங்களும் நடக்காமல் இல்லை.  இரான் போர் ஆரம்பித்ததிலிருந்து முதன் முறையாக, இரானுடன் கருத்து மாறுபட்டிருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் இளவரசர் ஷேக் கலித் பின் மொகமது அல் நஹ்யான் , டில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, இரானிய அதிபர் மசூத் பெஷஸ்கியனை சந்தித்தது குறிப்பிடத்தகுந்த விஷயம்.  இரு தரப்புகளும் என்ன விவாதித்துக்கொண்டன என்பது பற்றிய விவரங்கள் அதிகம் வெளியாகவில்லை என்றாலும்,  இரான் , ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள அமெரிக்க நிலைகளைத்   தாக்கவேண்டிய நிர்ப்பந்தம் பற்றி தனது கருத்துகளைப் பரிமாறியிருக்கும் என்ற புரிதல் இருக்கிறது.

உக்ரெயின் போர் —பிரிக்ஸின் மௌனம்

மத்தியக்கிழக்கில் இரான் போர் பற்றிய இந்த மாதிரி ஒரு விளக்கெண்ணையில் பொரித்த வெண்டைக்காய்க் குழம்பு போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றால்,  2022லிருந்து நடந்து வரும் உக்ரெயின் போர் பற்றி டில்லிப் பிரகடனம் மூச்சுவிடவில்லை.
பிரிக்ஸின் நிறுவன உறுப்பினர்களில் ஒரு நாடான ரஷ்யாவே உக்ரெயின் மீது தாக்குதலை நடத்தியிருக்கும்போது,  ரஷ்யாவை கண்டித்து பிரிக்ஸ் எப்படி தீர்மானம் நிறைவேற்றும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

தேசிய இறையாண்மையைப் பற்றி டில்லிப் பிரகடனம் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறது. ஆனால் உக்ரெயின் நாட்டின் இறையாண்மை அண்டை நாடான ரஷ்யாவால் மீறப்பட்டிருக்கும் நிலையில், அது பற்றி எந்த வித வெளிப்படையான நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் விட்டிருப்பது,  பிரிக்ஸ் அமைப்பு  இந்த விஷயத்தில் நடுநிலையாகச் செயல்படவில்லை என்பதைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.  
பிரிக்ஸ் அமைப்பே மேற்குலகின்  ( குறிப்பாக அமெரிக்காவின்) சர்வதேச மேலாண்மைக்கு எதிராக உருவான உலகின் வளர்ந்துவரும் பிற பொருளாதாரங்களின் கட்டமைப்பாகப் பார்க்கப்பட்டுவரும் நிலையில்,  அமெரிக்காவின் கேந்திர எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவின் பெரும் ஆதிக்கத்திலிருக்கும் இந்த அமைப்பு உக்ரெயின் விவகாரத்தில் வேறு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு பிரேஸிலின் ரியோ டி ஜெனைரோவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலாவது உக்ரெயின் பற்றி பெயரளவில் ஒரு தீர்மானம் போடப்பட்டது , இந்த ஆண்டு டில்லி உச்சி மாநாட்டில் அதுவும் இல்லை என்பது பிரிக்ஸ் அமைப்பின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என்று பகுப்பாய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.

டிரம்பின் இறக்குமதித் தீர்வைகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தடாலடித் தீர்வை விதிப்புகள் பற்றி பிரிக்ஸ் அமைப்பின் தீர்மானம் நேரடியாக அமெரிக்காவின் பெயரையோ டிரம்ப்பின் பெயரையோ பயன்படுத்தாமல் விமர்சித்திருக்கிறது.
இதுவும் வியப்புக்குரிய ஒன்றுதான்.  பிரிக்ஸ் அமைப்பில் அமெரிக்காவின் இந்த இறக்குமதித் தீர்வை நடவடிக்கைகளுக்கு பதிலுக்கு பதில் என்ற ரீதியில் ஈடு கொடுத்த ஒரே நாடு சீனாதான்.  அதன் தொழில் மற்றும் பொருளாதர பலம் அதை இந்த நிலை எடுக்கும் நிலையில்  வைத்தது.  ஆனால் 25 சதவீத இறக்குமதி வரி அதன் பின்னர் மேலும் கூடுதலாக 25 சதவீத தீர்வை என்றெல்லாம் இந்தியா மீது டிரம்ப் வரி விதித்தார்.  பிரேசிலுக்கு எதிராகவும் இதே போன்ற கடும் தீர்வைகளை விதித்தார். ரஷ்யா உக்ரெயின் போர் துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்குலகின் பல தடைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

இந்த நிலையில் பிரிக்ஸின் உச்சி மாநாட்டின் தீர்மானம் அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல் பொதுவாக “ சர்வதேச சட்டத்துக்கு எதிரான”  “ ஒரு தலைபட்சமான பொருளாதாரத் தடைகள்” மனித உரிமைகள் மீது தாக்கம் செலுத்துபவை, அவை கண்டிக்கப்படவேண்டியவை என்று மட்டும் கூறி, இது மாதிரியான சட்ட விரோத நடவடிக்கைகள் அகற்றப்படவேண்டும் என்று கோரியிருக்கிறது.  அமெரிக்காவை இன்னும் நேரடியாக விமர்சிக்க பிரிக்ஸ் அமைப்பு தயங்குவது இந்தியா,  சௌதி அரேபியா, எமிரேட்டுகள் போன்ற பல நாடுகள் இன்னும் அமெரிக்காவின் சார்பு நிலையில் இருந்தும் செல்வாக்கில் இருந்தும் முழுவதுமாக வெளிவரவில்லை என்பதைக் காட்டுவதாகவே விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேலை விமர்சிக்கும் பிரிக்ஸ்

உக்ரெயின் விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பின் தீர்மானம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும்,  மேற்கு ஆசியாவின் மற்றொரு எரியும் பிரச்சனையான காஸா தாக்குதல்கள் குறித்து இந்த அமைப்பு சற்று வியப்புக்குரிய அளவில் இஸ்ரேலை விமர்சிக்கும் தொனியுடன் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான நெதன்யாகுவின் கடும்போக்கு ராணுவ நடவடிக்கைகளால் பெரும் அழிவுக்குள்ளாகியிருக்கும் காஸா நிலப்பரப்பின் மீது நடந்த தாக்குதல்களை அடுத்து  2025 அக்டோபரில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
அதே சமயம், பாலத்தீனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண 1967 எல்லைகள் அடிப்படையில்  பாலத்தீன சுதந்திரம் , சுதந்திரப் பாலத்தீனத்துக்கு கிழக்கு ஜெருசலேம் தலைநகரம், இரு நாட்டுத் தீர்வு என்பதை மீண்டும் இந்தப் பிரகடனம் சொல்லியிருப்பது இஸ்ரேலுக்கு உவப்பாயிருக்காது.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

பாலத்தீன சிவிலியன்கள் காஸா நிலப்பரப்பிலிருந்தோ அல்லது ஆக்ரமிக்கப்பட்ட மற்ற பாலத்த்தீன நிலப்பரப்புகளிலிருந்தோ கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எதிராகவும் பிரிக்ஸ் அமைப்பு இந்த டில்லிப் பிரகடனம் மூலம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
காஸா நிலப்பரப்பு குறித்த தீர்மானங்களில் இஸ்ரேலை நேரடியாகக்  குறிப்பிடாவிட்டாலும்,  தீர்மானங்களின் ஒட்டுமொத்த தொனி இஸ்ரேலுக்குக் கவலையளிக்கும்.
ஆனால்,  இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல் பற்றிய தீர்மானத்தில்,லெபனானின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பின் மீதான தொடர்ச்சியான மீறல்களைக் கண்டிப்பதாக கூறும் டில்லிப் பிரகடனம் ,  இஸ்ரேல்,  லெபனான் பகுதிகளில் ஆக்மிரத்திருக்கும் தனது படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று நேரடியாகவே கூறுகிறது.

மோதல்கள் , போர்கள் பற்றிய பிரிக்ஸின் தீர்மானங்களில் பிரதிபலிக்கும் அதன் உள் அமைப்பு அழுத்தம்,  மற்ற உலகப்பிரச்சனைகளைப் பற்றி பேசுகையில் அவ்வளவாகத் தெரியவில்லை.
பருவ நிலை மாற்றம் குறித்த தீர்மானத்தில்,  Global South எனப்படும் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலேய நாடுகள் அல்லாத ) காலனியத்தால் பாதிக்கப்பட்ட , சர்வதேச அரசியலில் செல்வாக்கு குறைந்த நாடுகளின் குரலாக பிரிக்ஸ் ஒலிக்கிறது.  
உலகின் அனைத்து நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் இந்த புவி எதிர்நோக்கும், புவி வெப்பமடைதல் பிரச்சனையை எதிர்கொள்ள , அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஆனால் வெவ்வேறு அளவிலான பங்கு ( common but differentiated responsibilities) உண்டு என்பதை தீர்மானம் வலியுறுத்துகிறது.  இதன் பொருள் என்னவென்றால், பருவ நிலை மாற்றத்துக்கான காரணிகள் 19, 20ம் நூற்றாண்டுகளில் பெருந்தொழில் வளர்ச்சி கண்ட மேற்குலக நாடுகளுக்கு, இந்த விஷயத்தில் அதிகப் பங்கும், அதன் விளைவாக பொறுப்பும் உண்டு என்பதுதான் .  

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

சர்வதேச அரசியலில் மற்றொரு வரலாற்று ரீதியான பிரச்சனை ஐ.நா மன்ற சீர்திருத்தம்,  மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் சீர்திருத்தம்.  இந்த விஷயத்தில் இந்தியா தொடர்ந்து ஐநா மன்றத்தில் பாதுகாப்புக் கவுன்சில் தற்போதைய மாறியுள்ள உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இல்லை,  எனவே பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்தி,  மேலும் புதிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.
இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், இந்தியாவை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்குவதற்கு இடைஞ்சலாக இருப்பது சீனாதான் என்ற கருத்து இருக்கிறது.  ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக உள்ள ஒரே ஆசிய நாடு தற்போது சீனாதான் என்ற நிலை, சீனாவுக்கு ஆசிய கண்டத்தில் ஒரு பெரும் செல்வாக்கைத் தருகிறது.  சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை,  பாகிஸ்தானுடன் சீனா காட்டும் நெருக்கம் போன்றவையும் கூடுதல்காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
சரி,  சீனாவின் நிலைப்பாட்டையும் மீறி ஐநா மன்ற சீர்திருத்தங்களை முன்னெடுக்க பாதுகாப்புக் கவுன்சிலின் பிற நாடுகள் முனையுமா என்பதும் கேள்விக்குறியே.  
மற்ற பன்னாட்டு நிறுவனங்களான,  சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் மேலாண்மையிலும் சீர்திருத்தங்கள் வேண்டும் , அதன் தலைமைப்பொறுப்புகளில் மாற்றம் தேவை என்றெல்லாம் தீர்மானம் கூறுகிறது.  “உலகத் தெற்கு” நாடுகள் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் முடிவுகள் எடுக்கும் நிலையில் முன்னேறிய நாடுகள் இருக்கின்றன.  விதிமுறைகளை உருவாக்குபவர்கள் என்ற நிலைக்கு அந்த நாடுகள் மாற பிரிக்ஸ் உதவும் என்றும் பிரிக்ஸ் பிரகடனம் முன்மொழிகிறது.

அது போல பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் முன்னேறும் நாடுகளுக்குத் தரும் நிதி உதவி என்பது, அந்த நாடுகளின் உள் நாட்டு அரசியல் பொருளாதார நிலைமைகளில் சீர்திருத்தம் வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தரப்படுவதைத் தவிர்க்க என்று உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி ( New Development Bank) சீனாவின் பெரும் முதலீட்டுடனும்,  ஓரளவு ரஷ்யா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க முதலீட்டுடனும் நிறுவப்பட்டு பத்தாண்டுகள் ஆகின்றன. இதன் செயல்பாடு பற்றி டில்லிப் பிரகடனம் பெருமிதம் கொண்டாலும் இன்னும் இதன் தாக்கம் முழுமையாக உணரப்படும் அளவுக்கு வேகம் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
உச்சி மாநாட்டின் தீர்மானங்கள் பல உலகத் தெற்கு நாடுகளின் செவிகளுக்கு தேனாக ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.  ஆனால் இந்த பிரகடனங்கள் வெற்றுக் கோஷங்களாக மட்டும் நின்றுவிடாமல் செயலாக்கம் பெறுவதற்கு இந்த அமைப்பில் இருக்கும் வல்லரசுகளான சீனாவும் ரஷ்யாவும் உண்மையில் உதவுமா, அல்லது இந்த கோஷங்களை அமெரிக்க எதிர்ப்பு அரசியலுக்கு மட்டும் பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுக்குமா என்பதைப் பொறுத்தே பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் உண்மையில் உலகத் தெற்கு நாடுகளுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பது இருக்கிறது.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

2006ல் தொடங்கப்பட்டு 2009ல் முதல் உச்சி மாநாடு கண்ட பிரிக்ஸ் அமைப்பு , 18வது மாநாட்டில் “வயதுக்கு வந்துவிட்டது” ( come of age) என்று கூறியிருக்கிறார் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்த ஆண்டு சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.  பிரிக்ஸ் அமைப்பின் சர்வதேச ஆளுமை முதிர்ச்சியைக் குறிக்கும் சொல்லாடலாக அதைக் கருதலாம்.  ஆனால் சிக்கலான உலகப் பிரச்சனைகளில் செல்வாக்கை செலுத்தும் ஆளுமையை பிரிக்ஸ் அமைப்பு அடைந்துவிட்டதா என்பதை , அதன் குரல் சர்வதேச உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே அளவிட முடியும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Stalin: "ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்" – திமுக முப்பெரும் விழாவை ஒத்திவைப்பதாக துரைமுருகன் அறிவிப்பு

இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற இருந்தது.ஆனால்,...

ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த 'வினை'; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது....

நெல்லை: "முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?" – நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார்...

திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை...