26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

பரந்தூர்: "நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.!"- பூவுலகின் நண்பர்கள்

Date:

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், “பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளைக் கைவிட்டதாக தமிழ் நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம்.

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் போரடிய மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தத் தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வர் விஜய்

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைக்கும் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இத்திட்டத்தை நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

நாங்கள் முன்பே எங்களது அறிக்கைகளில் கூறியபடி பூவுலகின் நண்பர்கள் விமான நிலையத் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பரந்தூர் விமான நிலையத்தின் திட்ட அமைவிடமானது சூழலியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்கிற காரணத்தால்தான் அத்திட்டத்தை எதிர்த்து வந்தோம்.

இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்படுத்தத் திட்டமிட்டிருந்த 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலத்தில் 2682.62 ஏக்கர் WETLANDS (வேளாண் நிலம்+நீர்நிலை) ஆகும்.

பரந்தூர் விமான நிலையத்திற்காக சாத்தியக் கூறு அறிக்கையை ஆய்வுக்குட்படுத்திய உவகை ஆராய்ச்சி அறக்கட்டளை பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பது சென்னைக்கான வெள்ள அபாயத்தை அதிகரிக்கவல்லது எனத் தெரிவித்தது.

விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள நிலத்தில் 63.81 விழுக்காடு நன்செய் மற்றும் புன்செய் விவசாய நிலங்களாகும், இதுதவிர 26.54 விழுக்காடு நிலத்தில் குளம், குட்டை மற்றும் ஏரி போன்ற நீராதாரங்கள் அமைந்துள்ளதாக உவகை அறிக்கை குறிப்பிட்டது.

மேலும், கேசவரம் அணைக்கட்டுப் பகுதி பகுதியிலிருந்து வரும் நீரை கூவம் ஆறு, கூவம் ஏரி மற்றும் பல்வேறு ஏரிகளுடன் இணைக்கும் இயற்கை வடிகால் ஒன்றும், பாலாறு அணைக்கட்டில் தொடங்கி அடையாறு ஆற்றுப்படுகையில் உள்ள திருப்பெரும்புதூர் ஏரிக்கு நீரை கொண்டு சேர்க்கும் 42 கி.மீ நீளமுள்ள கம்பன் கால்வாயின் பெரும்பகுதியும் திட்ட அமைவிடத்தில் உள்ளன.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பெருமழை பாதிப்பு ஏற்படும்போது இத்திட்ட அமைவிடத்தில் உள்ள வேளாண் நிலங்களும் நீர்நிலைகளுமே பெருமளவிலான நீரைத் தக்க வைக்கிறது. இப்பகுதியைக் கான்க்ரீட்டால் மூடிவிட்டால் வெள்ள நீரின் பாதிப்பை சென்னைதான் எதிர்கொள்ள வேண்டிவரும்.

சென்னை வெள்ளம் -  2015
சென்னை வெள்ளம் – 2015

வெள்ள பாதிப்பிற்கு அடுத்ததாக இத்திட்டத்தை நாங்கள் எதிர்க்க மற்றொரு காரணம் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம். 07.07.2025 அன்று மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தத்திற்கு இடையேயான தொடர்பை விளக்கும் ’Urban Growth and Thermal Stress: A Decadal Assessment of Built-Up Area and Climate Interactions in Tamil Nadu’ எனும் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பலவேறு அதிர்ச்சியளிக்கக்கூடிய தரவுகளைக் கொண்டிருந்தது.

நகரமயமாக்கல் மற்றும் உயர்ந்த வெப்ப நிலைகளுக்கு இடையிலான தொடர்பானது குறிப்பாக இயற்கையாக அமைந்த நீர்நிலைகள் சுருங்கிவிட்ட அல்லது முற்றிலும் மறைந்துவிட்ட பகுதிகளில் அதிகம் காணப்பட்டுள்ளது.

குன்றத்தூர், சோழவரம் மற்றும் திருப்பெரும்புதூர் போன்ற வட்டாரங்களில் இருந்து கிடைத்த கள அளவிலான சான்றுகள், பாரம்பரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் மேற்பரப்பு நீர்நிலைகள் மறைந்து வருவதால் உள்ளூர் வெப்பமயமாதல் போக்கு அதிகரிப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்நீர்நிலைகள் அழிக்கப்பட்டதால் இயற்கையான வெப்ப ஒழுங்குபடுத்திகளாக அவற்றால் செயல்பட முடியவில்லை. இதனால் நகர்ப்புற சூழலின் வெப்பம் அதிகரித்து நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை மோசமாக்குகிறது என்கிறது இவ்வறிக்கை.

பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும். பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்படவுள்ள 2172.73 எக்டர் நிலத்தில் 576.74 எக்டர் அதாவது 26.54% நீர்நிலையாகும். வேளாண் நிலங்களுடன் சேர்த்தால் மொத்த திட்டப்பகுதியில் 90% ஈர நிலமாகும்.

நீர்நிலைகளை அழித்து நகரத்தை விரிவாக்கிக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியதால்தான் திருப்பெரும்புதூரில் வெப்பநிலை அதிகரித்ததாக இவ்வறிக்கை கூறுகிறது. அதே திருப்பெரும்புதூரில்தான் பரந்தூர் விமான நிலையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பெரும்புதூர், குன்றத்தூர், பூந்தமல்லி, மீஞ்சூர் ஆகிய பகுதிகள் முக்கியமான வெப்பக் குவிப்பு மண்டலங்களாக மாறியிருப்பதால் இப்பகுதிகளில் வெப்பத்தைக் குறைக்கத் தவகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இவ்வாய்வு வலியுறுத்துகிறது.

வெப்பத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறிய இடங்களில் நிலப்பயன்பாட்டை மாற்றுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இதுபோன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டித்தான் புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் முடிவை நாங்கள் எதிர்த்தோம். தற்போது விமான நிலையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட்டுள்ளது.

ஆனால், நேற்று இவ்விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பதிலளித்துப் பேசிய தொழிதுறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள் மக்களைப் பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி இப்பகுதியில் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

இம்முடிவும் சூழல் தாக்கங்களை அதிகரிக்கக் கூடியதே ஆகும். குறிப்பிட்ட திட்ட அமைவிடத்தின் நிலப்பயன்பாட்டை வேறெந்த திட்டங்களுக்காக மாற்றினாலும் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒன்றுதான். ஆகவே, கீழ்காணும் கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கிறோம்.

தமிழ் நாடு அரசின் திட்டக் குழு வெளியிட்ட அறிக்கையைக் கருத்தில் கொண்டு கையகப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலப்பயன்பாட்டை மாற்றாமல் இருப்பதற்கான உரிய வழிகளை ஆராய்ந்து இவ்விவகாரத்தில் தக்க முடிவெடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம்.

பரந்தூர்
பரந்தூர்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது குறித்து தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம், 1997-ன் பகுதி 2ன் கீழ் பிரிவு 4(1) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“Provided that if before actual possession of such land is taken by, or on behalf of the Government, it appears for the Government, that the land is no more required for the purpose of this Act, the Government, may, by notice published in the Tamil Nadu Government Gazette, withdraw the land from acquisition. On the publica-tion of such notice the land shall revest with retrospective effect in the person from whom it was divested on the issue of order under sub-section (1) of section 3, subject to such encumbrances, if any, as may be subsisting at that time:

Provided further that the owner and other persons interested shall be entitled to payment of an amount as determined in accordance with the provisions of section 7 for the damage, if any, suffered by them in consequence of the acquisition proceedings.”

குறிப்பிட்ட இச்சரத்தைத் தீர ஆராய்ந்து நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கான வழிகளை அரசு பரிசீலிக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையத்திற்காகவே சட்டமன்றத்தில் அவசர அவசரமாக இயற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023ஐ ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய...

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி வெறிச்சோடிப் போய்க்கிடக்கும்...

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...