19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

'உடைக்கப்பட்ட மாயை டு போராடும் விவசாயிகள்.!' – விஜய்யின் `வெற்றி மாடல்' அரசின் 100 நாள் செயல்பாடு?

Date:

தவெக ஆட்சியமைந்து 100 நாட்களை எட்டிவிட்டது. படங்களுக்கு 100 நாட்கள் வெற்றி விழாவை கொண்டாடி பழகிய முதல்வர் விஜய், இப்போது தன்னுடைய அரசுக்கு 100 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறார்.

CM Vijay

‘நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு’ என விக்கிரவாண்டி மாநாட்டிலேயே விஜய் பேசியிருந்தார். ஆட்சியமைப்பதற்கான தேவை ஏற்பட்ட போது சொன்ன மாதிரியே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.

அரை நூற்றாண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத முன்னேற்றம் இது.

அதேமாதிரி, அமைச்சரவையில் 7 தலித்களையும் இடம்பெற செய்தார். இதுவும் அரைநூற்றாண்டு தமிழக அரசியலில் நடக்காத நிகழ்வு. இத்தனை அதிக தலித்துகளுக்கு வேறு கட்சிகள் வாய்ப்பை கொடுத்திருந்தால், வரம் கொடுப்பதற்கென வானத்திலிருந்து இறங்கி வந்த ரட்சகர்களை போல பாவித்து அதை அத்தனை விளம்பரப்படுத்தியிருப்பார்கள். ஆனால், விஜய் அரசு எந்த படோபடமும் இல்லாமல் மிக எதார்த்தமாக இதை செய்து காட்டியது.

கூட்டு அமைச்சரவை, அதில் நியாயமான தலித் பிரதிநிதித்துவம் என இரண்டையுமே தமிழகத்தில் நிகழ்த்தவே முடியாத விஷயங்கள் என கட்டமைத்து வைக்கப்பட்டிருந்த மாயையை விஜய் உடைத்திருக்கிறார்.

CM Vijay
CM Vijay

அதேமாதிரி, லஞ்சம் ஊழல் போன்ற விவகாரங்களிலும் வரவேற்கத்தக்க நல்ல மாற்றங்கள் தென்பட தொடங்கியிருக்கிறது. சுகாதாரத்துறை, மின் துறை போன்றவற்றில் பணி உயர்வுக்காகவும் பணி மாறுதலுக்காகவும் காத்திருந்தவர்களுக்கு எந்த அலைக்கழிப்பும் லஞ்சமும் இல்லாமல் அவர்களுக்குரிய இடம் கிடைத்திருக்கிறது.

பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தாரர்களை நேரில் அழைத்து திட்டங்களின் பட்ஜெட்டில் எந்த கமிஷனமும் தேவையில்லை என்றும் டெண்டர்கள் எதுவும் செட்டிங் செய்யப்படாமல் முறையாக நடக்குமென்று அமைச்சர் உறுதி கூறுகிறார். பொதுப்பணி ஒப்பந்தாரர்களும் வழக்கமான 30% கமிஷன் இந்த ஆட்சியில் பெறப்படவில்லை என்கின்றனர்.

‘யாராவது லஞ்சம் கேட்டால் உங்கள் அண்ணனின் ஆட்சி நடக்கிறது என கூறுங்கள்’ என்று முதல்வரே பிரகடனம் செய்கிறார். ஊழல், லஞ்சம் என்பதெல்லாம் ஒரு தனிமனிதனின் பிரச்னை இல்லை. அது சமூகத்தின் பிரச்னை. அதனால் ஊழலை முழுமையாக களைய முடியுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்வி. ஆனால், இந்த அரசு நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலை தடுக்க ஒரு முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. அதனை வரவேற்கலாம்.

ஆனால், செல்ல வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. இப்போதே சில அமைச்சர்களின் மீதும் அதிகாரிகளின் மீதும் கட்டிங் புகார்கள் வர ஆரம்பித்திருக்கிறது. அதையெல்லாம் முதல்வர் எப்படி கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் அவரின் க்ளீன் கவர்மெண்ட் கோஷம் எப்படியானது என்பதை மதிப்பிட முடியும்.

கடந்த ஆட்சிகளில் சட்டப்பேரவை நேரலை என்பது ஆளும் கட்சிக்கானதாக மட்டுமே இருந்தது. தற்போதைய ஆட்சியின் அவை நடவடிக்கைகள் முழுமையாக காட்டப்படுகிறது. மக்களும் அதிகளவில் பார்க்கிறார்கள். இதுவும் வரவேற்கப்பட வேண்டியது.

CM Vijay
CM Vijay

அரசைப் பற்றி சில எதிர்மறையான விஷயங்களும் இருக்கவே செய்கிறது. 200 யூனிட் மின்சாரம் இலவசமென்பதை தனது முதல் கையெழுத்தாக இட்டார் விஜய். ஆனால், இன்று அந்தத் திட்டம்தான் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மின் கட்டணம் அதிகமாக வருவதாக நுகர்வோர்கள் பலரும் புகாரளிக்கின்றனர். ‘கட்டண உயர்வு எதுவும் இல்லை’ என ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார்களே ஒழிய, மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் குழப்பத்துக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.

சட்டம் ஒழுங்கு விஷயத்தை பேசி பேசிதான் விஜய் ஆட்சிக்கே வந்தார். ஆனால், கோவை மாணவனின் கொலை வழக்கில் அமைச்சர்களே மாறி மாறி பேசுகின்றனர். சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மாணவர் கோஷ்டி மோதலால் இறந்தார் என்கிறார். வெளியே அமைச்சர் வன்னிஅரசு போதைப்பொருளை தட்டிக் கேட்டதால் மாணவர் கொல்லப்பட்டதாக பதிவிட்டிருக்கிறார்.

எந்த அமைச்சர் சொல்வதுதான் உண்மை?

விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி என அறிவித்துவிட்டு இப்போது அதற்கு எக்கச்சக்க வரைமுறைகளை வைத்து விவசாயிகளை அதற்குள்ளாக வீதியை நோக்கி தள்ளிவிட்டனர். விவசாயிகளின் உயிர் ஆதார பிரச்னையான காவிரி நதி நீர் விவகாரத்தில் மாநிலத்தின் ஒருமித்த குரலாக தனி ஆவர்த்தனம் நடத்த நினைத்து பின் வாங்கியது தான் நடந்தது.

100 நாட்கள் வரப்போகிறது என்பதற்காக போஸ்டர் ஒட்டுவதற்காக அவசர அவசரமாக 1 லட்சம் கோடி முதலீடு என மூதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டியதன் தேவை என்ன?

அதேமாதிரி, க்ளீன் கவர்மெண்ட் கொடுக்கிறேன் என உறுதியளித்துவிட்டு அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் ‘வாஷிங் மெஷின்’ மாடலும் ரசிக்கும்படி இல்லை.

பதவியேற்கும் போதே ‘என்னை தவிர எந்த பவர் செண்டரும் இங்கே கிடையாது’ என முதல்வர் கூறினார். ஆனால், ஜான் ஒரு பவர் செண்டர், விஷ்ணு ரெட்டி ஒரு பவர் செண்டர், ஜெகதீஸ் ஒரு பவர் செண்டர் இன்னும் வெளியில் தெரியாமல் நிழலில் சிலர் என நிறைய பவர் செண்டர்கள் இந்த ஆட்சியிலும் உருவாகியிருக்கிறார்கள் என்பதை முழுமையாக மறுக்க முடியாது.

CM Vijay
CM Vijay

5 ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை 100 நாட்களின் செயல்பாடுகளை வைத்து அளவிட முடியாது. ஆனால், 100 நாட்களில் ஒரு அரசின் திசைவழிப் போக்கை உணர முடியும்.

அந்த வகையில் இந்த அரசு ஊழல் ஒழிப்பையும் லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தையும் பிரதானப்படுத்துகிறது. ஆனால், லஞ்சத்தை ஒழிக்கிறேன் என்பதை மட்டுமே மோட்டோவாக வைத்திருக்கும் கட்சிகளும் அரசுகளும் குறுகிய காலத்திலேயே அம்பலப்பட்டு நின்றிருக்கின்றன. மிகப்பெரிய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி.

ஊழல் ஒழிப்பு என்பதை கடந்து ஒரு அரசு சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் என்ன மாதிரியான உறுதியான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்காலம் அமையும்.

ஒரு பெருந்திரளான கூட்டத்தை இந்த அரசு அரசியலை நோக்கி திருப்பியிருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகளை லட்சக்கணக்கான இளைஞர்கள் உற்றுநோக்குகிறார்கள். தவெகவை ஆதரித்த அவர்கள்தான் இந்த அரசின் கண்காணிப்பாளர்களும் கூட. மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள் என்கிற சுரத்தையோடு இந்த அரசு செயல்பட்டாலே லாவகமாக வண்டியை ஓட்டிவிடலாம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகமலை: "6000 குடும்பங்களின் வாழ்வாதாரம்; விரைந்து நடவடிக்கை வேண்டும்" – அரசுக்கு விசிக வலியுறுத்தல்

மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள்...

தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில்

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில்...

‘வெள்ளைக் கொடி காட்டுங்கள்’ ஈரானிடம் ட்ரம்ப் கேட்கிறார்; ஆனால், ஓமனுடன் புது பிளானில் ஈரான்!

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம்...

Iran War: அமெரிக்கா முன் மூன்றே வழிகள்; மூன்றுமே சிக்கல்தான்! – தவிக்கும் ட்ரம்ப் | முழு அலசல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம்,...