கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இதில் சில மாணவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கும் தேர்வாகியிருந்தனர். ஆனால், இங்கிலாந்து அரசு சமீபத்தில் மாற்றிய விசா நடவடிக்கைகளால், இந்த மாணவர்களுக்கு விசா கிடைக்கவில்லை.
இந்தப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கான கடைசித் தேதியும் நெருங்குகிறது.
இதனால், இந்தப் பிரச்னையை உடனே தீர்க்குமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது…
“தமிழ்நாடு அரசின் ‘அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்’ கீழ் தேர்வான மாணவர்கள், UK மாணவர் விசா பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து உங்களின் அவசரக் கவனத்திற்குக் கொண்டுவரவே இக்கடிதம்.
இத்திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலத் தேர்வு செய்யப்பட்டனர்.
சிக்கல் என்ன?
இருப்பினும், கடந்த 2026 ஏப்ரல் 17 அன்று ‘UK விசா மற்றும் குடிவரவுத் துறை’ (UKVI) கொண்டுவந்த மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி ஆதரவுக் கடிதங்கள் விசா வழங்க ஏற்புடையதாகக் கருதப்படவில்லை எனத் தெரிகிறது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கடந்த ஜூலை கடைசி வாரத்தில் நிதி ஆதரவுக் கடிதங்கள் வழங்கப்பட்ட போதிலும், விசா தொடர்பான இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.


அபாயம்!
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்ட பிறகும், இதுவரை எவ்விதத் தெளிவான தீர்வும் எட்டப்படவில்லை.
பல்கலைக்கழகங்களில் சேருவதற்கும் பதிவு செய்வதற்குமான கெடு வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2026-க்குள் முடிவடைவதால், நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
மேலும் தாமதம் ஏற்பட்டால், மாணவர்களின் தவறு எதுவுமே இல்லாத நிலையில், அவர்கள் தங்களது சேர்க்கையையும் மதிப்புமிக்க கல்வி வாய்ப்புகளையும் இழக்கும் அபாயம் ஏற்படும்.
நடவடிக்கை வேண்டும்
எனவே, இந்த மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் நிதி ஆதரவை ஏற்றுக்கொள்வது குறித்துத் தெளிவான விளக்கத்தைப் பெற, மத்திய அமைச்சகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக UK அரசு மற்றும் UK விசா மற்றும் குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், நிர்வாக அல்லது நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக எந்தவொரு மாணவரும் தனது வெளிநாட்டுப் படிப்பு வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விஷயத்தை அமைச்சகத்தின் கனிவான பரிசீலனைக்கும், தேவையான உரிய நடவடிக்கைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.”




