21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' – குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

Date:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன், தி.மு.க சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தினார், ராகுல் காந்தி. பின்னர் ராகுல் காந்தி பேசுகையில், “சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த 23 தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க எனது பாரத் ஜோடோ யாத்திரையைக் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவு செய்தேன். என் யாத்திரையின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் மக்களிடம் ஒற்றுமையை விதைப்பதுதான். பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒருதாய் மக்களாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் யாத்திரையின் நோக்கமாக இருந்தது. நாங்கள் பிரிவினைவாத அரசியலை வளர்க்கும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் எதிர்த்து போராடும் அரசியலை முன்னெடுக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். அரசியல் சாசனச் சட்டம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. பல்வேறு மக்களின் மொழி, கலாசாரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஒரு மாநிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எங்களுக்கு முக்கியமானதுதான். இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் இலக்கியப் பொக்கிஷம். தமிழ்மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு. அது போன்று பஞ்சாப், உ.பி, வடகிழக்கு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பெரிய கலாசாரம், பண்பாடு, வரலாறு உண்டு. ஒரு தனிப்பட்ட மொழியின் பண்பாடோ கலாசாரமோ சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய குரலும் ஒலிக்கப்பட வேண்டும்.

குமரியின் 6 சட்டசபை தொகுதி வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி

பா.ஜ.க ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரலாறு, ஒரே பண்பாடு என அனைத்தையும் ஒற்றை அரசியலுக்குள் அடக்க நினைக்கிறது. இதுதான் எங்களுக்கும், அவர்களுக்குமான வித்தியாசம். தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும். தமிழக ஆண்களும், பெண்களும் தமிழகத்தை ஆள வேண்டும். ஒவ்வொரு மாநிலங்களும் அந்த மாநில நிர்வாகத்தை நடத்த வேண்டும். நம் அரசியல் அமைப்பும் அதைத்தான் சொல்கிறது. அரசியல் சாசனச் சட்டத்தைப் பா.ஜ.க ஏற்றுக் கொள்ளவில்லை. மாநிலக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாஜக பலவீனப்படுத்தப் பார்க்கிறது. தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டில் இருந்து ஆள வேண்டும் என நினைக்கிறோம். மணிப்பூர் அமைதியான மாநிலம். அங்கு தீயைப் பற்றவைத்து அங்கு கொளுந்துவிட்டு எரிகிறது. மணிப்பூர் சின்னாபின்னமாக்கப்பட்டதற்கு பா.ஜ.க தான் காரணம். எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறார்கள். தமிழ் மக்களிடம் அதை நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை. அதற்காகத் தமிழகத்தில் பெரிய வரலாற்றைக் கொண்ட இயக்கத்தைக் கைப்பற்றி உள்ளனர். அ.தி.மு.க தமிழக வளர்ச்சியில் பெரிய பங்காற்றி உள்ளது என்பதை மறுக்கவில்லை. அ.தி.மு.க-வைத் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இன்று அ.தி.மு.க வெற்றுக்கூடாரமாக மாறி உள்ளது. பா.ஜ.க தமிழகத்தில் நுழையும் கருவியாக அ.தி.மு.க மாறிவிட்டது. அ.தி.மு.க தற்போதைய தலைவர்கள் ஊழலில் திழைத்த காரணத்தால் மோடி அரசிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்துவிட்டனர். பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியை ஆட்டுவிப்பது போன்று, மோடி எடப்பாடி பழனிசாமியைக் கைவசப்படுத்தி ஆட்டுவிக்கிறார். வீரமான தமிழர்கள் அவர்களை ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சரணடைய மாட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ்க்கு தெரியும் என்பதால் அ.தி.மு.க மூலம் கால்பதிக்க முயல்கிறார்கள்.

ராகுல் காந்தி

நாங்கள் கூட்டணி வைத்துள்ள தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். சில நாட்களுக்கு முன் மோடி நாடாளுமன்றத்தில் ஆபத்தான காரியத்தைச் செய்தார். மகளிருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கப் போவதாக நாட்டு மக்களிடம் சொன்னார். நாட்டின் தேர்தல் கட்டுமானத்தைச் சிதைப்பதுதான் அவர் மனதில் இருந்த சதித்திட்டம். இட ஒதுக்கீட்டுக்குப் பின்னால் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அனைத்து தொகுதிகளையும் மாற்றி அமைக்க முயன்றார். அவர் தென் மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க நினைத்தார். அவரது உண்மையான நோக்கம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான். மோடி தேச விரோதச் செயலைச் செய்ய நினைக்கிறார். ஒன்றுபட்ட இந்தியாவைச் சிதைக்க நினைக்கிறார். அதனால்தான் அதை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இனி எந்தக் காலத்திலும் சரி, இந்தியாவைச் சிதைக்க முயன்றால் ஒவ்வொரு முறையும் தோற்கடிப்போம். தமிழ்நாடு இந்தியாவுக்கு முற்போக்கு பார்வையைத் தந்துள்ளது. உங்கள் அரசியல் வரலாற்றுப்பூர்வமாகச் சமூகநீதியில் கால்பதித்துள்ளது. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம், பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் மிக மகிழ்ச்சியாகச் சொல்கிறேன். தி.மு.க-வும் ஸ்டாலினும் இந்தப் பணிகளை இன்னும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்.

ராகுல் காந்தி பிரசார கூட்டம்

கடந்த 5 ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவுத் திட்டம், 1.31 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். எங்கள் கூட்டணி தொடர்ந்து செய்யும். ஆயிரத்தை 2000 ரூபாயாக உயர்த்தித் தருவோம். மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் 2000 ரூபாய் பெறுவார்கள். முதன்முறையாகச் சொத்து வாங்கும் பெண்களுக்கு முழுமையான பத்திரப்பதிவு கட்டணச் சலுகை உண்டு. அரசு காலிப்பணியிடங்கள் 300 நாள்களில் நிரப்பப்படும். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சதியை முழுமையாக முறியடிப்போம். தமிழ்நாட்டுக்கு வரும்போது நான் காமராஜரை நன்றியோடு நினைப்பேன். அவர் ஆட்சியில் கல்விக்காக, உயர்கல்வியை வளர்த்தெடுக்க, தமிழக வளர்ச்சிக்காகச் செய்தவற்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் நாட்டை ஒற்றுமைப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரையை இங்கிருந்து தொடங்கினேன். நாட்டின் ஒற்றுமையை உருகுலைக்கும் கொடும் செயலாகச் சிறுபான்மையினரைத் தாக்குகிறார்கள், சிதைக்கிறார்கள். சிறுபான்மையினர் வரலாற்றில் முதன்முறையாகப் பாதுகாப்பற்ற வாழ்க்கை வாழ்வதாக அச்ச உணர்வை அடைந்துள்ளனர். கிறிஸ்தவராக, இஸ்லாமியராக, சீக்கியராக, பழங்குடியினராக இருப்பவர்களின் உரிமைகளைப் பறித்து, வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள். சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் மீது வன்முறையை ஏவிப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். இந்தியாவில் வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது, அன்பால், ஒற்றுமையால் நிறைந்த நாடு. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சித்தாந்தங்களில் வித்தியாசம் உள்ளது. இறுதியில் காங்கிரஸ் தத்துவம்தான் வெற்றிபெறும் என்று பா.ஜ.க.-வுக்கும் தெரியும். காங்கிரஸ் இறுதியில் வெல்லும் என்பது பிரதமரின் மனதுக்குத் தெரியும். உங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். அன்புக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். தமிழர்களுக்கும் தெரியும். எனக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவை அனைவரும் அறிவார்கள். அது அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு. அனைவரும் என் பாட்டி இந்திரா மீதும், தந்தை ராஜீவ் காந்தி மீதும் பாசம் கொண்டுள்ளீர்கள். என்மீதும் பாசம் கொட்டுகிறீர்கள். அந்த அன்பை நான் போற்றி வருகிறேன். தமிழக மக்கள் மீதான என் அன்பு அடிப்படையான மாறாத அன்பு. நான் தமிழனாகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழ் பண்பாடு, கலசாரத்தைப் பாதுகாக்க நினைக்கிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் – சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை...

உங்கள் குரல்..!

Source link

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும்...