ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிசினஸ் பெண் என அறியப்பட்ட இவரது மறுபக்கம் இப்போது உலகையே அதிர வைத்துள்ளது.
யார் இந்த ஷமிம்?
2013-ம் ஆண்டு ஈரானை விட்டு வெளியேறி அமெரிக்கா வந்த ஷமிம், 2016-ம் ஆண்டு அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையைப் பெற்றார்.
கடந்த சனிக்கிழமை இரவு, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இவர் கைதானபோதுதான் இவரது ‘நிழல் உலக’ வேலைகள் வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.
ஆயுத பேரத்தின் பின்னணி
ஓமன் நாட்டில் ‘அட்லஸ் இன்டர்நேஷனல் பிசினஸ்’ என்ற ஒரு போலி நிறுவனத்தை இவர் நடத்தி வந்திருக்கிறார். இதன் மூலம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ‘மொஹாஜர்-6’ (Mohajer-6) வகை போர் ட்ரோன்களை சுமார் 70 மில்லியன் டாலர் மதிப்பிற்கு பேரம் பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி, உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூடான் நாட்டிற்கு சுமார் 55,000 வெடிகுண்டு ஃபியூஸ்களை (Bomb Fuses) கடத்தவும் இவர் உதவியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மிரட்டலா? விசுவாசமா?
ஈரான் உளவுத்துறைக்கும், இவருக்கும் இடையே 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நேரடித் தொடர்பு இருந்ததைத் தொலைபேசி ஆவணங்கள் உறுதி செய்துள்ளன.
2020-ம் ஆண்டில் ஷமிமின் தந்தைவழிச் சொத்துக்களை ஈரான் அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அந்தச் சொத்துக்களை மீட்க வேண்டுமானால், அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தொடங்கி ஈரான் அரசுக்கு உளவு வேலை பார்க்க வேண்டும் என ஈரான் உளவுத்துறை இவரை ‘அசைன்மென்ட்’ கொடுத்து அனுப்பியதாகத் தெரிகிறது.
அதற்கு ஷமிமும், “ஈரானுக்கு உள்ளேயே இருப்பதைவிட, வெளியில் இருந்து உங்களுக்கு வேலை செய்வதுதான் பயனுள்ளதாகஇருக்கும்” என சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

அரசியல் பரபரப்பு
ஒருபுறம் இந்த அதிரடி கைது அரங்கேற, மறுபுறம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுவருகிறது.
மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பாகிஸ்தான் செல்லவிருக்கும் சூழலில், இந்த ஆயுதக் கடத்தல் விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது.
கடத்தல் குறித்து கேட்கும்போது ஷமிம், ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என மறுத்து வருகிறார். ஆனால், அமெரிக்க உளவுத்துறை கையில் இருக்கும் ஆதாரங்களோ இவரை விடாமல் துரத்துகின்றன.




