தஞ்சை பேராவூரணியில், தி.மு.க சார்பில் சமீபத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘வைத்திலிங்கத்தை நம் கட்சியினர் யாரும் திட்டாதீங்க… அவர் நம்ம ஆளு… எப்போ வேண்டுமானாலும் நம் பக்கம் வந்துடுவார்’ என்று பேசியிருந்தார். தற்போது ஓ.பி.எஸ் அணியில், இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் வைத்திலிங்கம். பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், அமலாக்கத்துறை அவரது 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியதால், ஓ.பி.எஸ்-மீதும் டெல்லிமீதும் ஏக கடுப்பில் இருக்கிறது வைத்திலிங்கம் தரப்பு.
இதனாலேயே, ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு வைத்திலிங்கம் சார்பில் எவ்வித எதிர்ப்போ, மறுப்போ கொடுக்கப்படவில்லை. வைத்திலிங்கத்தின் இந்த அழுத்தமான மௌனத்துக்குப் பின்னால், பல அரசியல் முடிச்சுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் வைத்தியின் ஆதரவாளர்கள்!
குறள் மாவட்டத்தில் கோலாச்சிய, வைணவக் கடவுள் பெயர்கொண்ட மாவட்டப் புள்ளியைப் பதவியிலிருந்து தூக்கியது சூரியக் கட்சித் தலைமை. இதன் பின்னணியை விசாரித்தால், ‘மாவட்டப் புள்ளியின் குடும்ப உறவுகளின் அட்ராசிட்டிதான் காரணம்’ என்கிறார்கள். மாவட்ட எல்லையைத் தாண்டி, அண்டை மாவட்டம் வரையில் சகல துறைகளிலும் வசூலில் ஈடுபட்டார்களாம் மாவட்டப் புள்ளியின் உறவுகள். இதனால், சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்திருக்கிறது. அது குறித்த தகவலை, தொகுதிப் பொறுப்பாளர்கள் சிலர் தலைமைக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதையடுத்துதான், மாவட்டப் புள்ளியைத் தூக்கியடித்ததாம் சூரியக் கட்சித் தலைமை. இதனால், தன் பதவிப் பறிப்புக்குக் காரணமான பொறுப்பாளர்கள்மீது ஏக கடுப்பில் இருக்கிறாராம் மாவட்டப் புள்ளி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பிப்ரவரி 25 முதல் மார்ச் 1-ம் தேதி வரை, அனைத்துத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகிறது அ.தி.மு.க. அதன்படி, ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான தேனியில், மார்ச் 1-ம் நடக்கும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவிருக்கிறாராம். இதற்கான ஏற்பாட்டைச் செய்ததே, ஓ.பி.எஸ்-மீது தீராப்பகையில் இருக்கும் ‘சன்ரைஸ்’ புள்ளிதானாம். இணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு பல்வேறு வகையில் முயற்சி நடந்துவரும் இந்தச் சமயத்தில், அதை மொத்தமாகக் கலைத்துவிடக் கங்கணம் கட்டியிருக்கிறாராம் ‘சன்ரைஸ்’ புள்ளி. அதன்படிதான், ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடியைவைத்துக் கூட்டம் போட்டு, விரிசலை மேலும் அதிகப்படுத்த பிளான் செய்திருக்கிறாராம். இது, இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சீனியர்கள் தரப்பைக் கடும் டென்ஷனாக்கியிருக்கிறதாம்!
குயின் மாவட்ட மாண்புமிகுவுக்கு இது சிக்கல் காலம்போல. அந்த அளவுக்கு அவரைச் சுழன்றடிக்கின்றன சர்ச்சைகள். மாண்புமிகுவின் வாரிசுக்கு நெருங்கிய தோழரான ‘இனிப்பு’ புள்ளிதான், இருவரின் வரவு செலவுகளையும் கவனித்துவந்திருக்கிறார். அவர்மீது ஏகப்பட்ட மோசடிப் புகார்கள் வந்தவண்ணம் இருக்கவே, கட்சியிலிருந்து கட்டம்கட்டியது சூரியக் கட்சி.
அதைத் தொடர்ந்து அரசியல்ரீதியாகத் தன்னைத் தற்காத்துக்கொள்ள, மலர்க் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார் அந்த ‘இனிப்பு’ புள்ளி. ஏற்கெனவே, மாண்புமிகு விவகாரங்களைக் கிளறிக்கொண்டிருக்கும் மலர்க் கட்சியினருக்கு இது ரொம்பவே தோதாகிவிட்டதாம். ‘தங்களின் ரகசியங்களை ‘இனிப்பு’ புள்ளி, எதிர்முகாமில் சொல்லிவிடுவாரோ…’ என்று பதற்றத்தில் இருக்கிறார்களாம் மாண்புமிகுவும், அவருடைய வாரிசும்!
மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, பூத் கமிட்டிகளையும் அமைக்கத் தீவிரம் காட்டிவருகிறது த.வெ.க. இந்த நிலையில், த.வெ.க-வுக்கு ஆதரவுக்கரம் நீட்ட விரும்பும் கட்சிகளை அரவணைக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறதாம் த.வெ.க தலைமை. அந்த வகையில் முதல் போணியாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தஃபா, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். இப்படி, ஆதரவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மாற்றுக் கட்சியிலிருந்து த.வெ.க-வுக்கு வர நினைக்கும் புள்ளிகளை, ஃபில்டர் செய்தே இணைக்க உத்தரவிட்டிருக்கிறதாம் கட்சித் தலைமை. அதன்படி, மார்ச் மாதத்திலிருந்தே அடிக்கடி ‘இணைப்பு நிகழ்ச்சி’ நடக்கும் என்கிறார்கள் பனையூர் புள்ளிகள்!