30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

`ஆளுக்கொரு திசையை காட்டும் கணிப்புகள்' – தமிழக Exit Poll முடிவுகளை எப்படி புரிந்து கொள்வது?

Date:

5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பேசுபொருளாகியிருக்கின்றன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உணர்த்துவது என்ன?

அலசுவோம்..!

Exit Polls

தனியார் நிறுவனங்கள் பலவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதாகக் கூறுகின்றன.

அதிகபட்சமாக அக்னி நிறுவனம் திமுக கூட்டணி 169 தொகுதிகளையும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனம் திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகள் வரையும் வெல்லும் எனக் கணித்திருக்கின்றன.

பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், பி – மார்க், பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளும் திமுகவுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

CNN நியூஸ் 18, JVC நிறுவனங்களின் கணிப்புகள் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கின்றன. நியூஸ் 18 – 114 முதல் 124 வரையும் JVC 128 முதல் 147 வரையும் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றன.

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றன. அவர்களின் முடிவுகளின்படி தவெக 98 முதல் 120 இடங்களையும் திமுக 92 முதல் 110 இடங்களையும் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதிர்ச்சிகரமாக அதிமுகவுக்கு 22-32 வரை மட்டும் தொகுதிகள் கிடைக்கும் என்கின்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுக+, அதிமுக+, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவினாலும், தீவிரமான போட்டி திமுக, அதிமுக, தவெக இடையில்தான் என்பதே யதார்த்தம். அந்தவகையில் பார்த்தால் பிரதான போட்டியாளர்கள் மூவருக்கும் சாதகமான கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இதுதான் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

மற்ற எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தவெகவுக்குக் குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சமாக 40 சீட்டுகள் வரைக்கும் கொடுக்க, ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் 120 சீட்டுகள் வரை தவெக வெல்லும் எனக் கூறியிருக்கிறது.

இத்தனைப் பாரதூர வேறுபாடுகள் ஏற்படுவதற்கு, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுக்கும் முறையும் ஒரு காரணம் என்கிறார்கள்.

அதாவது,

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தில் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை ஒரு சிறிய மாதிரியில் கொண்டுவருவதே இதன் முதல் சவால். இதற்காக, ‘அடுக்கு சீரற்ற மாதிரி தேர்வு’ (Stratified Random Sampling) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், நகரம் மற்றும் கிராமப்புற விகிதம், சாதி மற்றும் மதப் பிரதிநிதித்துவம், கடந்த தேர்தல் வரலாறு மற்றும் புவியியல் பரவல் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தொகுதிகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்குள்ளும், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளை ‘முறைசார் சீரற்ற மாதிரி தேர்வு’ (Systematic Random Sampling) மூலம் தேர்வு செய்வார்கள். இதிலும் கிராமம்/நகரம், சாதி அமைப்பு, கடந்த வாக்குப்பதிவு சதவீதம் போன்ற அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்படும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், முக்கிய பணியே இந்த தொகுதி மற்றும் வாக்குச்சாவடி தேர்ந்தெடுக்கும் முறை தான். அதில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாகவே, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான முடிவுகள் வருவதை பார்க்க முடிகிறது.

இப்படியொரு நிலையில், குறைந்தபட்சமாக சில கருத்துக்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமெனில், பெரும்பான்மை அடிப்படையில் யோசிக்கலாம். வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கின்றன.

ஆட்சிக்கு எதிரான மனநிலையைத் தாண்டி திமுக கூட்டணி வெல்ல, அதிமுகவும் தவெகவும் பிரிக்கும் வாக்குகள் முக்கிய காரணியாக அமைவதைப் பார்க்க முடிகிறது.

Index of opposition Unity என ஒரு பதம் உண்டு. அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எந்தளவுக்கு ஒற்றுமையாக இணைந்து போராடுகின்றனவோ அந்தளவுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால், தமிழகத்தில் அப்படி ஆளுங்கட்சிக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சிகள் கைகோர்க்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆட்சியில் இருக்கும் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் அதிமுக+, தவெக, நாதக என மூன்று தரப்பினர் எதிர்க்கின்றனர். ஆக, இந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மக்களின் வாக்குகளை இந்த மூன்று பேருமே கூறு போடுகின்றன. அதிலும் அதிமுக கூட்டணியும் தவெக-வுமே திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரதானமாகப் பிரிக்கின்றன.

இந்த அம்சம் திமுக கூட்டணிக்கு மிக சாதகமாகிவிடுகிறது. பீப்புள்ஸ் பல்ஸ் முடிவுகளில் இதை தெளிவாக உணர முடிகிறது. அந்த முடிவுகளின்படி திமுக கூட்டணி 38.4% வாக்குகளையும் அதிமுக கூட்டணி 31.5% வாக்குகளையும் தவெக 23.6% வாக்குகளையும் வாங்குகின்றன. ஆக, அதிமுக கூட்டணியும் தவெகவும் பிரிக்கும் வாக்குகளே திமுக கூட்டணிக்குச் சாதகமாகிறது.

அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக நியூஸ் 18, JVC நிறுவனங்களின் முடிவு இருக்கிறது. அதிலும் நியூஸ் 18 நிறுவனத்தின் கணிப்பு போட்டி கடுமையாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. இதிலும் சில கணிப்புகளை சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதாவது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சிறுபான்மையினர்களின் வாக்குகள் எப்போது பலம் சேர்க்கும். இம்முறை அதில் தவெக வாக்குகளை பிரிப்பதால், அதிமுகவும் களம் சாதகமாக அமையலாம் என்கிறார்கள் சிலர்.

அதாவது, இந்த தேர்தல் முடிவுகளை கொண்டு பல்வேறு தியரிகள் சொல்லப்படுகிறது.

அவுட் ஆப் தி பாக்ஸாக தவெக ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் கூறியிருக்கிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. அதில், அதிமுகவுக்கு 22 முதல் 32 இடங்களுடன் மூன்றாம் இடமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக கூட்டணி இத்தனை மோசமாக பெர்பார்ம் செய்யும் என்பதும் யதார்த்தமாக இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவின் வரலாற்றிலேயே 1989, 1996 தேர்தலில் மட்டுமே இதை விட மோசமாக பெர்பார்ம் செய்திருக்கின்றன.

ஒரு முறை கட்சி உடைந்திருந்தது, இன்னொரு முறை பெரும் எதிர்ப்பு அலை. அவற்றை தவிர மற்ற எல்லா சமயங்களிலும் அதிமுக ஓரளவுக்கு நல்ல பெர்பார்மென்ஸையே செய்திருக்கிறது.

TVK Vijay
TVK Vijay

இந்தத் தேர்தலிலும் அதிமுகவோடு பாமக கூட்டணியில் இருக்கிறது. பாமகவுடனான கூட்டு வடமாவட்டங்களில் அதிமுகவுக்குக் கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைக் கொடுக்கலாம். அதேமாதிரி, கொங்கு மண்டலமும் அதிமுகவுக்கு வலுவான பகுதி.

இந்த இரண்டு பிராந்தியங்களில் ஓரளவுக்கு பெர்பார்ம் செய்தாலே ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்பைத் தாண்டி விட முடியும்.

அதேமாதிரி, சென்னையில் தவெகவுக்குக் கிடைக்கும் சதவீதத்தையும் சீட்டுகளையும் வைத்துக் கொண்டு மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான அக்கட்சியின் பலத்தை அளவிட முடியாது.

இதே ஆக்சிஸ் மை இந்தியா 2024 இல் பாஜக 300+ சீட்களை வெல்லும் என்றது. ஆனால், பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மையே கிடைக்கவில்லை.

எனினும் அனைத்து கணிப்புகளிலும் ஒரு விஷயம் மட்டும், தெளிவாகிறது, விஜயின் தவெக ஏற்படுத்தி இருக்கும் தாக்கம், வெற்றி தோல்விகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் தெரிகிறது.

EXIT POLL
EXIT POLL

இதேமாதிரி எல்லா நிறுவனங்களுக்குமே அவர்களின் கணிப்புகள் தவறிப்போன ட்ராக் ரெக்கார்டுகளும் இருக்கின்றன. ஆக, இவை எதுவுமே முடிவை அறுதியிட்டு கூறும் கருத்துக்கணிப்புகள் அல்ல. முடிவுகளின் போக்கை ஓரளவுக்கு முன்கூட்டியே காட்டுகின்றன, அவ்வளவுதான்.

இன்னும் 4 நாட்கள்தான், பொறுத்திருந்து ஒரிஜினல் ரிசல்ட்டையும் பார்த்துவிடுவோம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளம்: "தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை"- பினராயி விஜயன் அரசை விமர்சித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

கேரள மாநில ராணுவ நலன் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் முதன்மைச்...

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...

Assam: சிக்கலில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா; முன் ஜாமீன் மறுக்கும் நீதிமன்றம்; என்ன பிரச்னை?

இந்த மாதத் தொடக்கத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா...