பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் 31 வார கர்ப்பமாக இருந்தார். இந்த கர்ப்பம் தன் கல்வியை பாதிப்பதோடு, மனதளவில் பெரும் சிக்கலையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. எனவே,தனது கர்ப்பத்தை மருத்துவ ரீதியாகக் கலைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இப்போது கர்ப்பத்தைக் கலைத்தால், அந்தச் சிறுமிக்கும் கருவுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவ ரீதியாகக் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான சட்டபூர்வமான 24 வார கால வரம்பைக் கடந்துவிட்ட பிறகே இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. கர்ப்பத்தின் பிந்தைய கட்டங்களில் செய்யப்படும் கருக்கலைப்புகள் அதிகப்படியான ஆபத்துகளைக் கொண்டுள்ளன.” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சிறுமியைப் பிரசவிக்கக் கட்டாயப்படுத்துவது அவளது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். ஒரு பெண்ணின் இனப்பெருக்கச் சார்ந்த உரிமைக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் அக்குழந்தையின் உளவியல் ரீதியான துயரத்தையும், அவள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற உண்மையையும் கருத்தில் கொள்கிறது. எனவே, கர்ப்பத்தைத் தொடருமாறு அவளைக் கட்டாயப்படுத்துவது, கண்ணியத்துடன் வாழ்வதற்கான அவளது உரிமைக்கு எதிரான நேரடித் தாக்குதலாகும்.” எனத் தெரிவித்து, கர்பத்தைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி இன்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் பாட்டி, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்களின் கருத்தை மேற்கோள் காட்டி, “இப்போது கருவைக் கலைத்தால் பிறக்கும் குழந்தை உயிருடன் இருக்கும், ஆனால் அது கடுமையான உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த நேரத்தில் கருக்கலைப்பு செய்வது அந்தச் சிறுமியின் உயிருக்கும், எதிர்கால ஆரோக்கியத்திற்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, அதை அரசிடமோ அல்லது தத்தெடுப்பு மையத்திலோ ஒப்படைப்பதுதான் அந்தப் பெண்ணுக்கு இருக்கும் ஒரே வழி. இதுவே குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பானது. எனவே, இன்னும் குழந்தை முழுமையாக வளர்ந்து பிறப்பதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது.”என வாதிட்டார்.
இந்த வாதத்துக்குப் பிறகு பேசிய நீதிபதிகள், “முதலில் நீதிமன்றத்தின் கருக்கலைப்பு உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ மட்டுமே இதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும். பெண்கள் தங்கள் உடல்கள் மீதான உரிமைக்கான போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடிய இந்தத் தருணத்தில், தனிப்பட்ட விருப்பங்களை, குறிப்பாக அந்தச் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பங்களை, அரசு மதிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் தரிக்கும்போது, அந்த கருவை கலைக்க காலவரையறை இருக்கக்கூடாது. சட்டம் இயல்பானதாகவும், மாறிவரும் காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்த சிறுமி அனுபவித்த வேதனையை எதனாலும் ஈடுசெய்ய முடியாது. எனவே, குடிமக்களின் உரிமைக்கும், அவர்களின் வேதனைக்கும் மரியாதை கொடுங்கள், அம்மையாரே. நாங்கள் தனி நபர்களின் உரிமையை, தேர்வை மதிக்கிறோம். ஒர் அரசாக நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.
ஒருவேளை இந்தக் கருவை கலைத்தால் ஏற்படவிருக்கும் சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகள் குறித்த தரவுகளைப் பெற்றோரிடம் காட்டுங்கள். அவர்கள் அந்தக் கருவை வைத்துக்கொள்ள விரும்பினால், அப்படியே ஆகட்டும். ஆனால் தங்கள் குழந்தையின் மனநலம் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் நினைத்தால்… அவர்கள் எடுக்கும் முடிவை அனுமதிக்க வேண்டும். அப்போதும் எதிர்த்து மனுதாக்கல் செய்யாதீர்கள். ஏனென்றால் இது ஒரு குழந்தைக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு… பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுவும், ஆழ்ந்த மன உளைச்சலும் இருக்கும். பிற்காலத்தில் அவளது திருமண வாழ்க்கை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே நீங்களே சொல்லுங்கள்… அவளுக்கு இந்த வலி பெரிதா அல்லது இந்த வலி பெரிதா?

ஒவ்வொரு நிமிடமும் அவள் அந்தக் கருவைச் சுமந்துகொண்டிருக்கிறாள்! பாதிக்கப்பட்டவர் ஒரு வயது வந்த பெண்ணாக இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கலாம். ஆனால் இது, 15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட ஒரு தேவையற்ற கர்ப்பமாகும். அவள் தனக்கான லட்சியங்களையும், கனவுகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய பருவம்… ஆனால் நாம் அவளை ஒரு தாயாக மாறச் சொல்கிறோமா? அவள் ஏற்கனவே அளவற்ற வலியையும், அவமானத்தையும் அனுபவித்துவிட்டாள்…
எனவே, ஒரு மனநல மருத்துவரையும், ஆலோசகரையும் அந்தக் குடும்பம் சந்திக்கட்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர்… அவர்களால் அந்தக் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இறுதியாக பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் தரிக்கும்போது, காலவரையறை இருக்கக்கூடாது. எனவே, அதற்கேற்றவாறு சட்டங்களை மாற்றுங்கள்.” எனக் குறிப்பிட்டு, அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.




