18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி; பரபரப்பாகும் `கோவளம்' மீட்டிங் – உன்னிப்பாக கவனிக்கும் வேலுமணி & கோ

Date:

அ.தி.மு.க-வுக்குள் வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியிருக்கிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிப்பெற்றதற்கு எடப்பாடியின் சொந்த செல்வாக்குத்தான் காரணம்” என்று பேசவும், “அப்படியானால், மீதமுள்ள 181 தொகுதிகளில் தோற்றுவிட்டோமே… எடப்பாடி செல்லாக்காசாகிவிட்டாரா…” என்று காரமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சி.வி.சண்முகம்.
த.வெ.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அந்த ஆர்ப்பாட்டத்தில் வேலுமணி, சண்முகம் ஆதரவாளர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. இருதரப்புக்கும் இடையே உட்கட்சிப் பூசல் கொளுந்துவிட்டு எரியும் நிலையில்தான், தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு, சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. மாநாடுக்கு தலைமைப் பொறுப்பேற்று நடத்திட, இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார். கோவளத்திலுள்ள தாஜ் ஹோட்டலில் அவருக்காக அறைகள் புக் செய்யப்பட்டுள்ள சூழலில், அந்த ஹோட்டலில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார் அமித் ஷா.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ‘களம் வேறு விதமாக இருக்கிறது. பிரிந்தவர்களை ஒன்றிணைத்து தேர்தலைச் சந்தியுங்கள்…’ என்று அமித் ஷா சொன்ன ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ‘150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்றுவிடுவோம்’ என்று தனக்கு வந்த ரிப்போர்ட்டை ஆதாரமாகக் காட்டினார் எடப்பாடி.

ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட அ.தி.மு.க-வால் பெற முடியவில்லை. 27 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரேயொரு தொகுதியில் மட்டும்தான் பா.ஜ.க-வால் வெற்றிப்பெற முடிந்தது. இதையெல்லாம் அமித் ஷா துளியும் ரசிக்கவில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி சென்றிருந்த வேலுமணி தரப்பினர், தமிழக அரசியல் சூழல் குறித்து அமித் ஷாவுடனும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடனும் விவாதித்திருக்கிறார்கள். ‘பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கப்பட வேண்டும். பிரிந்திருக்கும் சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். தங்களின் கோரிக்கையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்பதையும் டெல்லிக்கு தெளிவுப்படுத்தினர்.

அமித் ஷா

அப்படியான சூழலில்தான், திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் சென்னை வந்தார் அமித் ஷா. அவரை விமானநிலையத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்றபோது, முகம் கொடுத்துப் பேசவில்லை. ‘கோவளத்தில் சந்திக்கும்போது விரிவாகப் பேசலாம்’ என்றுவிட்டு நகர்ந்துவிட்டார். இந்தநிலையில்தான், கோவளத்தில் எடப்பாடி – அமித் ஷா சந்திப்பு நடைபெறப் போகிறது. அ.தி.மு.க-வின் எதிர்காலம் குறித்து விரிவாக எடப்பாடியுடன் பேசவிருக்கிறார் அமித் ஷா.

த.வெ.க-வுடன் காங்கிரஸ் அணிசேர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்து வரும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட ஆயத்தமாகிறார்கள். தி.மு.க-வுடன் கூட்டணிக்கான முயற்சியை டெல்லி செய்துவந்தாலும், அது எப்போது சாத்தியப்படுமென தெரியவில்லை. இன்றைய சூழலில், அ.தி.மு.க-வை விட்டால் பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை. ஆகவே, 2029 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பலமான அ.தி.மு.க அவசியமென கருதுகிறார் அமித் ஷா. இதுகுறித்தெல்லாம் எடப்பாடியுடனான சந்திப்பில் பேசப்படவிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

அதேசமயம், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் சந்திக்கவிருக்கிறார் அமித் ஷா. தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் விவாதிக்கவிருக்கிறார். சென்னையிலிருந்து டெல்லி புறப்படுவதற்கு முன்பாக, அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் ஒரு தெளிவை உருவாக்கிவிட முயல்கிறார் அமித் ஷா. எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியின் எதிர்காலமும் இருக்கிறது” என்றனர் விரிவாக.
அமித் ஷாவின் இரண்டு நாள் பயணத்தில், அ.தி.மு.க-வின் உட்கட்சி பூசலுக்கு ஒரு தெளிவு கிடைத்துவிடுமென நம்புகின்றன அ.தி.மு.க வட்டாரங்கள். ஆனால், கட்சியிலிருந்து பிரிந்து சென்ற யாரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத எடப்பாடி, அமித் ஷாவின் வார்த்தைகளுக்கு எந்தளவுக்குக் கட்டுப்படுவாரென தெரியவில்லை. நடப்பதையெல்லாம் எஸ்.பி.வேலுமணி தரப்பு உன்னிப்போடு கவனித்து வருகிறது. அமிஷ் ஷாவின் சென்னை வருகைக்குப் பிறகு, வேலுமணி தரப்பிலிருந்து சில அதிரடி நகர்வுகள் நடைபெறலாம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Iran War: அமெரிக்கா முன் மூன்றே வழிகள்; மூன்றுமே சிக்கல்தான்! – தவிக்கும் ட்ரம்ப் | முழு அலசல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம்,...

நெருங்கும் காலக்கெடு, UK விசா கிடைக்காத தமிழக மாணவர்கள் – கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம்

கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத்...

"ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை" – முதன்முறையாக ட்ரம்ப் பேச்சு

‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு...

"விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயில்"- கேரள முதல்வர் பெருமிதம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி,...