16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

Date:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். மகளிர் அமைப்புகள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.

அருள் விக்னேஷ்

இதோ இப்போது தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் உறுதியாக நடவடிக்கை எடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய முதல்வர் விஜய் இன்னமும் வாய் திறக்கவில்லை.

முதல்வர் விஜய்க்கு பொதுவாகவே வெளியில் பேசும் வழக்கம் கிடையாது. ஊடகங்களை அருகிலேயே சேர்க்கமாட்டார். அவரது கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பேசுவார். இது அவரது பழக்கம். ஆனால், இந்த விஷயத்திலும் அதே பாணியை பின்பற்றுவது ஏற்புடையதாக இல்லை. இந்த சுபாவம் அவர் பேசிய அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கே எதிராக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக ஆளும் திமுக அரசின் மீது விஜய் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் பெரும் குற்றச்சாட்டாக முன்வைத்தார். ஒன்று, சட்டம் ஒழுங்கு பிரச்னை. இன்னொன்று பெண்கள் பாதுகாப்பு.

TVK Vijay
TVK Vijay

திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பில் சுணங்கவே மாட்டோம். பெண்கள் பாதுகாப்புக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படும் என விஜய் பேசினார். பதவியேற்பு விழாவிலும் பெண்கள் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம் என்றார். ஆட்சியமைத்த சில நாட்களிலேயே ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என ஒரு திட்டத்தை அறிவித்து, அதை தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் கூறி விஜய் பெருமிதப்படுகிறார்.

சட்டமன்றத்தில் பேசும் போது கூட, ‘என்னுடைய அம்மாக்கள் அக்காக்கள் தங்கைகளைப் பற்றி யாராவது அவதூறாக பேசினால், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம்’ என ஆவேசமாக சூளுரைத்தார். பெண்கள் பாதுகாப்பையும் பெண்களின் கண்ணியத்தையும் பிரதானமாக பேசியிருக்கிறார். அவர் ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாதிரியான சம்பவம் நடக்கும் போது, அதில் விஜய் துரிதமாக நடவடிக்கை எடுப்பார் என நம்புவது அடிப்படையான எதிர்பார்ப்பு. ஆனால், விஜய் அதற்கு தயாராகவே இல்லை. உடனே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நியாயமான விசாரணையைத்தான் அனைவரும் கோருகின்றனர்.

ஆனால், விஜய்க்கு பதிலாக பேசும் தவெக அமைச்சர்களோ கோக்குமாக்கான லாஜிக்குகளை முன்வைக்கின்றனர். ஒரு அமைச்சர், ‘கலெக்டர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்’ என்கிறார். பெண்கள் மீதான தொல்லை சார்ந்த பிரச்னைகளில் பெண்கள் தாமாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டுமென கூறுவதே அபத்தம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தயக்கம் இருக்கும்பட்சத்தில் அவர்களின் கண்ணியம் குறையாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு புகார் அளிக்க நம்பிக்கை கொடுத்து விசாரணையை தொடங்க வேண்டும். அதைவிடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தால்தான் நடவடிக்கை என்பது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலே.

இன்னொரு அமைச்சர், ‘அப்படி எந்த விஷயமும் நடக்கவே இல்லை. எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர்’ எனப் பேசியிருப்பதோடு அவர் இப்படி செய்யவில்லையா இவர் அப்படி செய்யவில்லையா என குற்றத்துக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார். விசாரணை எதுவும் நடக்காத சூழலில் அதற்குள்ளாக எப்படி முடிவுரை எழுத முடிகிறது?

TVK Vijay - விஜய்
TVK Vijay – விஜய்

தவெக எம்.எல்.ஏ தவறே செய்யாதபட்சத்தில் தனியார் ரெசார்ட்டில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஏன் அவரை தனியாக அழைத்து கண்டித்தார்? முதல்வர் அருள் விக்னேஷை கடுமையாக கண்டித்ததாக அத்தனை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதற்கு தவெக கட்சி சார்பில் எந்த மறுப்பும் வெளியாகவில்லையே . முதல்வர் அழைத்து கண்டித்தது உண்மையெனில், இந்த விவகாரத்தை நான்கு சுவருக்குள் யாருக்கும் தெரியாமல் கண்டித்தால் மட்டும் போதுமென முதல்வர் நினைக்கிறாரா?

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தை தவெக கையாளும் விதம் மற்ற எம்.எல்.ஏக்களுக்கு என்ன மாதிரியான செய்தியை எடுத்து சொல்லுமென விஜய் யோசித்ததை போன்றே இல்லை. ‘பெண்கள் பாதுகாப்பில் சமரசமே இல்லை’ எனக் கூறிய முதல்வரின் இந்த மௌனம் கள்ள மௌனமாகவே பார்க்கப்படும். 234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டியிடுகிறேன் என்றார். மக்களும் விஜய்யின் முகத்துக்காகதான் 108 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தார்கள். ஆக, இப்போதைய பிரச்னைகளுக்கான தார்மீக பொறுப்பையும் விஜய்தான் ஏற்க வேண்டும். விமர்சனங்களுக்கு விஜய்யும்தான் பதில் சொல்ல வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விஷயத்தில் மக்கள் எதிர்பார்ப்பது முதல்வர் விஜய்யின் வெளிப்படையான பதில் மட்டுமே.

மௌனம் கலையுங்கள் விஜய்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' – கனிமொழி

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக...

'தமிழகத்தில் மோசமான ஆட்சி; விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது.!' – மு.க ஸ்டாலின் பேச்சு

சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற திமுக...

`ஆட்டம் போடலாம்னு நினைச்சா.!' – விஜய் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கிறார்களா தவெகவினர்?

இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி அறுபதாண்டு தமிழக அரசியலை மாற்றி ஆட்சி...