நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்த ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் சி.இ.ஓ-வுமான ஸ்ரீதர் வேம்பு, “ஸ்ரீ தர்மேந்திர பிரதான் நான் அறிந்த மிகச்சிறந்த மக்கள் பணியாளர்களில் ஒருவர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து அவருடன் நான் பலமுறை விவாதித்துள்ளேன். அவர் சுயநலமின்றி நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதியவர். அவர் ராஜினாமா செய்ததைக் கண்டு நான் மனவருத்தம் அடைகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அரசுக்குச் சாதகமான ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜோஹோ நிறுவனத்தின் தொழில் மற்றும் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்காகவே, அவர் மத்திய அரசுக்கும் அதன் அமைச்சருக்கும் ஆதரவாகப் பேசுகிறார் என்றும், அரசுக்குச் சாதகமாக நடப்பதாகவும் பல பயனர்கள் விமர்சித்திருந்தனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீதர் வேம்பு ஒரு புதிய விளக்கப் பதிவை வெளியிட்டார். அதில், “எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 90 சதவீதம் இந்தியாவிற்கு வெளியிலிருந்தே வருகிறது.

அது கடுமையான உலகளாவியப் போட்டியில் ஈட்டப்பட்டது. அரசின் ஒப்பந்தங்கள் மூலம் எங்களுக்கு வெறும் 2 சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அரசுடன் பணியாற்றும்போது கூட, வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளோம்.
மேலும், எங்கள் பகுதியில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் நாங்களும் ஒன்று. இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்தபோது கேரள ஸ்டார்ட்அப் மிஷனுக்கு ஆலோசனை வழங்கி, அங்குள்ள பல ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தேன்.
அதேபோல், தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் ஒரு சிறப்பான புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவரது முயற்சியை ஆதரிக்கிறேனே தவிர, அரசியல் சித்தாந்தத்திற்காக அல்ல. நான் நமது நாட்டை நேசிக்கிறேன், என் மனதில் தோன்றுவதைப் பேசுகிறேன்.
தாக்குதல்களுக்கோ அல்லது மிரட்டல்களுக்கோ நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். இதுபோன்ற தாக்குதல்கள் எங்களை மேலும் வலுப்படுத்தி, பெரிய வெற்றிகளை அடையவே உதவும்” எனக் குறிப்பிட்டிருக்கிரார்.




