12
February, 2025

A News 365Times Venture

12
Wednesday
February, 2025

A News 365Times Venture

US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

Date:

அமெரிக்க அதிபர்களிலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர், ட்ரம்ப். தனது முந்தைய பதவி காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கடும் வரிகளை விதித்தார், அவர். பதிலுக்கு அந்த நாடுகளும் அமெரிக்கா மீது பதில் வரி விதித்தன. இந்த மோதலால் இரண்டு பக்கத்திலும் மக்கள் பாதிப்படைந்தனர்.

இந்த சூழலில்தான் இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கிறார், ட்ரம்ப். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஃபென்டனயில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், சட்டவிரோதமாக குடியேறுவதை தடுப்பதற்கும் விரைவில் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. அதாவது கனடா, மெக்சிகோவிலிருந்து வரும் பொருள்களுக்கு 25% வரியும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10% வரியும் விதிக்கப்படும்” என அறிவித்தார்.

அமெரிக்கா

கனடா, சீனா அறிக்கை..

“இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். கனடா நிச்சயம் பதிலடி கொடுக்கும்” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.

இதேபோல், “தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என சீனாவும் அறிவித்திருந்தது.

ஆனாலும் தனது முடிவிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், “கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% வரியும் விதிக்கப்படவுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஃபென்டனயில் போதைப்பொருளை அமெரிக்காவுக்குள் அனுப்புகிறார்கள். இதில் ஏற்பட்ட பாதிப்பினால் கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்திருக்கிறார்கள். எனவே, இதை தடுக்கும் வகையில்தான் வரிவிதிப்பு நடவடிக்கையை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்” என்றார்.

சட்டவிரோதமான குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல்..

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள், “அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும். இதனால் அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் ட்ரம்ப் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதேபோல் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை, எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றில் அமெரிக்காவுக்கு போதுமான அளவுக்கு ஒத்துழைப்பை கனடா வழங்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அமெரிக்கா எதிர்பார்க்கும் ஒத்துழைப்புக்களை கனடா கொடுக்கும் வரையில் அந்த நாட்டின் மீதான வரி விதிப்புகள் தொடரும்” என்றனர்.

கனடா தேசியக் கொடி

“இது அமெரிக்காவின் பிரச்னை; சீனா பொறுப்பாகாது..”

இதற்கு சீனாவின் வர்த்தக அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதன் அறிக்கையில், “சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறும் வகையில் இருக்கிறது. எனவே இதற்கான எதிர் நடவடிக்கைகள் விரைவில் உறுதியாக எடுக்கப்படும். மேலும் ஃபென்டனயில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவது அந்த நாட்டின் பிரச்னை. அதற்கு சீனா பொறுப்பாகாது” என தெரிவித்திருக்கிறது.

இதேபோல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “பல்வேறு அமெரிக்க பொருட்களுக்கு 25% வரிகள் விதிக்கப்படுகிறது” என அறிவித்திருக்கிறார். இதேபோல் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், “மெக்சிகோவுக்கு எதிரான வரிவிதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா கைவிட வேண்டும். எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை…

மேலும் இந்த வரிவிதிப்பு நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்ச்சை வெடித்திருக்கிறது. Ford Motor, General Motors, Stellantis நிறுவனங்களை உள்ளடக்கிய அமெரிக்கன் ஆட்டோமோட்டிவ் பாலிசி கவுன்சில், “ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் போட்டித்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதேநேரத்தில் அமெரிக்க தொழிலாளர்களின் முதலீட்டை முடக்கும் வகையில் இருக்கிறது” என கவலை தெரிவித்துள்ளது. இது, ‘புதிய வர்த்தகப் போரைத் தூண்டி, உலகப் பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும்’ என்கிறார்கள் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள். இந்த சூழலில் விரைவில் இந்தியா மீதும் வரி யுத்தத்தை ட்ரம்ப் தொடங்கக்கூடும் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்தியா என்ன செய்யப்போகிறது?

இதை சமீபத்தில் ட்ரம்ப் அளித்த பேட்டியும் உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அப்போது பேசிய ட்ரம்ப், “சீனா, இந்தியா, பிரேசில் ஆகியவை அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. இப்படி அமெரிக்காவிற்கு பாதிப்பு செய்யும் நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படும். இது எங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால் அவர்கள் அடிப்படையில் தங்கள் நாட்டை நல்லதாக்க விரும்புகிறார்கள். சீனா, இந்தியா, பிரேசில் ஒரு மிகப்பெரிய கட்டண தயாரிப்பாளராக உள்ளது. எனவே, அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கப் போவதால் இனியும் அப்படி நடக்க விடமாட்டோம். நமது கஜானாவில் பணம் வரப்போகிறது. இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் மிகவும் பணக்கார நாடக இருக்கும். இதன் மூலம் மிகவும் நியாயமான அமைப்பை அமெரிக்கா நிறுவும்” என தெரிவித்திருந்தார். எனவேதான் இந்த அச்சம் நிலவுகிறது. எனவே இதை தடுக்க இந்தியா என்ன செய்யப்போகிறது?

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள், “இந்தியாவை கடுமையாக ட்ரம்ப் விமர்சனம் செய்தாலும் சீனா அளவுக்கு வரிவிதிக்க வாய்ப்பு குறைவுதான். ஒரே நேரத்தில் இரண்டு மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளை பகைத்துக்கொள்ள மாட்டார். மேலும், இந்தியாவின் வரி விதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளில் தற்போதே கவனம் செலுத்தி வருகிறது. அதாவது பட்ஜெட் அறிவிப்பில், “உயர்தர மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பாகங்கள் மீதான சுங்க வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளது. இது அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன், டெஸ்லா, ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிகிறது.

டெஸ்லா சைபர் ட்ரக்

அமெரிக்க வரி விதிப்பில் இந்தியா தப்பிக்குமா?

அதாவது தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், “1,600 சிசி வரையிலான எஞ்சின் திறன் கொண்ட, முற்றிலும் கட்டமைக்கப்பட்ட (CBU) யூனிட்களாக இறக்குமதி செய்யப்படும் உயர்தர மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரி 10% குறைக்கப்படும்” என்றார். மேலும் அரை-நாக் டவுன் (SKD) கருவிகளுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், முற்றிலும் நாக் டவுன் (CKD) யூனிட்டுகளுக்கு முன்பு 15 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், இப்போது 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதன் மூலம் இந்தியாவிற்குள் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் இறக்குமதியை அதிகரிக்கும். இதன் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருக்கும் பிரச்னை ஓரளவிற்கு குறையும்.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்ட்டர் S

இதேபோல் 40,000 டாலருக்கு மேல் விலையுள்ள சொகுசு கார்களுக்கான கட்டண விகிதம் முன்பு விதிக்கப்பட்ட 125 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான அடிப்படை சுங்க வரிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை டெஸ்லா போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். முன்னதாக கடந்த ஏப்ரலில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், பிரதமர் மோடியைச் சந்திக்க திட்டமிட்டார். இதன் மூலம் எலோன் மஸ்க் முதலீடு செய்வார் என்கிற ஊகங்கள் கிளம்பியது. பிறகு தனது பயணத்தை ரத்து செய்யதது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன்(Representational Image)

மேலும் மொபைல் போன் பேட்டரி தயாரிப்பில் உள்ள 28 பொருள்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்கள் மற்றும் துணைக்கருவிகளின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க உதவும், குறிப்பாக இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறுவதற்கு சூழல் உருவாகி வருகிறது. இந்த இறக்குமதி வரி குறைப்பால் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் பெரிதும் பயனடையும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் வரி விதிப்பிலிருந்து எளிதாக இந்தியா தப்பித்துவிடும்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Freebies: “இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை" – சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

தேர்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் வழக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று விமர்சித்திருக்கிறது.இந்தியாவில், தேர்தல்...

“தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் தொல்லை..'' -உங்கள் பகுதியில் நடந்தது என்ன? – #கருத்துக்களம்

நன்றியுள்ளப் பிராணியாக கொண்டாடப்படும் நாய், பலரின் செல்லப் பிரணியாகவும் வளர்ந்து வருகிறது....

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" – உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம்,...