தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
மத்திய அமைச்சரின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் குரலெழுப்பப்பட்டது. ஆளும் கட்சி மட்டுமல்லாமல் எதிர்கட்சியும் பிற அரசியல் அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மும்மொழிக்கொள்கையை ஏற்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடனும், அச்சுறுத்தலை பயன்படுத்தியும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஒரு மாநிலம் ஆய்வு செய்வது மிகவும் பொருத்தமற்றது.
காலத்தால் அழியாத தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் உலக அளவில் மேம்படுத்தவும் பிரபலப்படுத்தவும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர… https://t.co/UQtRgoONTm— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 21, 2025
மேலும், மும்மொழிக் கொள்கை நாட்டில் கல்வியின் முதுகெலும்பாக செயல்படுவதாகவும், அதனை சரியாக பின்பற்றாததாலேயே ஆங்கிலத்தை நம்பியிருக்க வேண்டியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Udhayanidhi Stalin செய்தியாளர் சந்திப்பு
இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்வது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், “நமக்கான கல்வி நிதியை நாம் கேட்டிருக்கிறோம். இந்த ஆண்டு புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாடு என்றைக்குமே மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாக கூறியபிறகு, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? மொழிப்போருக்காக பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. இது (இரு மொழிக் கொள்கை) நம் கல்வி உரிமை, இங்கு யார் அரசியல் செய்கிறார்கள் எனப் பார்த்துக்கொள்ளுங்கள்” எனப் பேசினார்.
வரும் பிப்ரவரி 25ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி போராட்டம் நடத்த உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில், அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர்கள் குறித்து பேச விருப்பமில்லை எனத் தெரிவித்துச் சென்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.