நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைகிறது. இரண்டாம் ஆண்டின் தொடக்கவிழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு கட்சி ரீதியாகப் பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு மாவட்டத்துக்கு 20 நிர்வாகிகள் வீதம் பாஸ் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். 10 மணிக்கு விழா மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய், சிறப்பு விருந்தினர்களான அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்கள் மேடைக்கு வருகை தந்தனர்.
அதைத் தொடர்ந்து, மேடைக்கு அருகேயே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில், ‘புதிய கல்விக்கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்போடு சேர்த்து இந்த அவலங்களையும் Get Out செய்திட உறுதியேற்போம் என வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய வாசகங்களும் இடம்பெற்றிருக்கிறது. அதற்கு அருகே, ஒரு கையெழுத்துப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முதல் நபராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் கையெழுத்திட்டார்.
அவருக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த்தும் அவரைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். எனினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரஷாந்த் கிஷோர், இஒந்த பேனரில் கையெழுத்திடவில்லை.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து கிடாக்குழி மாரியம்மாள் குழுவின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியிருக்கிறது. கட்சியின் கொள்கைத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாதிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்வதுடன் அடுத்தடுத்து நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தியும், அதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் உரையாற்றுவார்கள் எனக் கூறப்படுகிறது. இறுதியில் தவெக தலைவர் விஜய் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றுவார் என சொல்லப்படுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
