2026 சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு வர உள்ள வேளையில், தமிழக அரசியல் களம் மெல்ல மெல்ல சுடுபிடித்து வருகிறது. ஒருபக்கம் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக தி.மு.க-வின் தீவிர எதிர்ப்பு, மறுபுறம் `2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் இன்றைக்கும், என்றைக்குமே கூட்டணி கிடையாது. எங்கள் நிலைப்பாடு தொடரும்” எனக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேசிய அதே அ.தி.மு.க தலைமை, “எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க-தான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை. ஓட்டுக்கள் சிதறாமல் ஒருங்கிணைந்து தி.மு.கவை வீழ்த்துவது தான் அ.தி.மு.கவின் தலையாய கடமை. ஆறு மாதத்திற்கு பிறகுதான் கூட்டணி குறித்துக் கூற முடியும்.” எனக் கூட்டணி கணக்குகளையும் தொடங்கிவிட்டன.
அதே நேரம் பாஜக, ‘டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது நடத்திய விசாரணை வலையைப் போல தமிழ்நாட்டிலும் விசாரணை படலத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறது’ என குற்றச்சாட்டுகள் வலம் வர தொடங்குகிறது. இந்த நிலையில்தான் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தின், செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தியதைப் போல, மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அவர் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் சேகர் ரெட்டிக்கு கூடுதல் சலுகைகள் காட்டப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், 21 டிசம்பர் 2016 தமிழக வரலாற்றில் முதல் முறையாக தலைமைச் செயலக அலுவலகத்தில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.
அப்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், `தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இது மாநிலத்திற்கே தலைகுனிவு” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு மாநில தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்தப்பட வேண்டுமென்றால், அது குறித்து முன்கூட்டியே முதல்வருக்கு அதிகாரிகள் உரிய தகவலை அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது, தேசத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் அப்போதே கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை நுழைந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “TASMAC தலைமை அலுவலகத்தில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் தி.மு.க-வினருடன் தொடர்புள்ள சாராய நிறுவனங்கள், அமைச்சர் தியாகி பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்துள்ளது. ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால் கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் தான் பதில் என்பதை இந்த சோதனைகள் உணர்த்தும்.
விஞ்ஞான ஊழலை நிறுவனமயமாக்கி, தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை வரும் வெட்கக்கேடான நிலைக்கு, ஸ்டாலின் மாடல் அரசு தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை முடக்கி, மக்களை நேரடியாக பாதிக்கின்ற தி.மு.க-வின் ஊழல் ஆட்சியில், அதுவும், ஊழல் புகாரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிணையில் வருவதையெல்லாம் தியாகமாக கருதும் இந்த ஊழல் திலகங்களின் ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?

10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் வாங்கிய கடன்கள், மக்கள் நலத் திட்டங்களாக தமிழ்நாடெங்கும் மிளிர, 3 ஆண்டுகளில் திமுக ஆட்சி வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனோ, இத்தகைய ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! இவர்களுக்கான பதிலை 2026 களம் சொல்லும்!” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
