10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

POCSO சட்டம்: குழந்தைகளைக் காக்கும் சட்டக் கேடயம்! சட்டம் சொல்வது என்ன? – 13

Date:

இரவு நேரத்தில் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே, “அந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை வெளியே?”, “எதற்காக அந்த இடத்துக்குப் போனாய்?”, “ஏன் அவருடன் சென்றாய்?”, “ஏன் அந்த உடையை அணிந்தாய்?” என்று கேள்விகள் அணிவகுக்கின்றன.

ஆனால், அந்தக் குற்றத்தைச் செய்தவரைப் பார்த்து, “எதற்காக இந்தக் குற்றத்தைச் செய்தாய்?” என்று கேட்பவர்கள் எத்தனை பேர்?

பாதிக்கப்பட்டவரின் உடையோ, நேரமோ, இடமோ பாலியல் வன்கொடுமைக்கான நியாயம் கிடையாது. குற்றம் செய்தவர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம், 2012. பாலியல் தொல்லை, பாலியல் தாக்குதல், ஊடுருவும் பாலியல் தாக்குதல் மற்றும் குழந்தைகளை ஆபாச நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இந்தச் சட்டம் வரையறுத்துத் தண்டனை வழங்குகிறது

*குழந்தைகளுக்குத் தனிச் சட்டம் ஏன்?*

குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததைச் சொல்லப் பயப்படலாம். என்ன நடந்தது என்றே புரியாமல் இருக்கலாம். சில நேரங்களில், குற்றம் செய்தவர் குழந்தைக்குத் தெரிந்தவராகவோ, நம்பிக்கைக்குரியவராகவோ இருக்கலாம்.

இதைக் கருத்தில் கொண்டுதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தெளிவாக வரையறுத்து, புகார் அளிப்பது முதல் விசாரணை, மருத்துவப் பரிசோதனை, நீதிமன்ற விசாரணை வரை குழந்தைக்கு ஏற்ற பாதுகாப்புகளை POCSO சட்டம் வழங்குகிறது.

*ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்!*

“பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானா இந்தச் சட்டம்?” என்று நினைக்க வேண்டாம். POCSO சட்டத்தின் பிரிவு 2(1)(d)-ன்படி, 18 வயது நிறைவடையாத ஒவ்வொருவரும் குழந்தைதான். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை உண்டு.

சட்டம் சொல்வது என்ன

*என்னென்ன குற்றங்கள்? என்ன தண்டனை?*

குற்றத்தின் தன்மையைப் பொறுத்து POCSO சட்டம் வெவ்வேறு தண்டனைகளை வழங்குகிறது.

குழந்தையிடம் பாலியல் தொல்லை கொடுப்பது, பாலியல் தாக்குதல் நடத்துவது, பாலியல் வன்கொடுமை செய்வது, குழந்தைகளை ஆபாசப் படங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவது போன்ற ஆபாச நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது எனக் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப POCSO சட்டம் தண்டனை வழங்குகிறது.

குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்தால், பிரிவு 12-ன்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கலாம். பாலியல் தாக்குதலுக்கு (பிரிவுகள் 7, 8) குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.

ஊடுருவும் வகையிலான பாலியல் வன்கொடுமைக்கு (பிரிவுகள் 3, 4) குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை உண்டு. குழந்தை 16 வயதுக்குக் குறைவானவராக இருந்தால், குறைந்தபட்சத் தண்டனை 20 ஆண்டுகள். இந்தத் தண்டனை ஆயுள் சிறைத்தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.

குற்றம் செய்தவர் உறவினராகவோ, ஆசிரியராகவோ, காவல்துறை அதிகாரியாகவோ இருப்பது போன்ற பிரிவு 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான சூழ்நிலைகளில், ஊடுருவும் வகையிலான பாலியல் தாக்குதல், தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதலாகக் கருதப்படும். இதற்கு (பிரிவுகள் 5, 6) குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை முதல், குற்றவாளியின் இயற்கையான வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை வரை விதிக்கப்படலாம்.

அதேபோல், பிரிவு 9-ல் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான சூழ்நிலைகளில், ஊடுருவல் இல்லாத பாலியல் தாக்குதல் நடந்தால், அது தீவிரமான பாலியல் தாக்குதலாகக் கருதப்படும். இதற்கு (பிரிவுகள் 9, 10) குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கலாம்.

*குழந்தையின் கண்ணியமும் முக்கியம்!*

ஒரு குழந்தைக்கு எதிராகப் பாலியல் குற்றம் நடந்தால், “குடும்ப மானம் போய்விடும்” என்று புகார் கொடுக்காமல் இருப்பது பிரச்னையைத் தீர்க்காது. குற்றம் குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது முக்கியம்.

POCSO சட்டத்தின் பிரிவு 19-ன்படி, குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் நடந்துள்ளது என்ற தகவல் தெரிந்தாலோ, அத்தகைய குற்றம் நடக்கக்கூடும் என்ற அச்சம் இருந்தாலோ, யார் வேண்டுமானாலும் (குழந்தை உட்பட) சிறார் காவல் பிரிவு (Special Juvenile Police Unit) அல்லது உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்தக் கடமையை மீறுவது தொடர்பாக பிரிவு 21-ல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு மட்டும் இந்தத் தண்டனைப் பொருந்தாது. ஒரு நிறுவனம் அல்லது நிறுவனத்தின் பொறுப்பாளர், தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர் தொடர்பான குற்றத்தைத் தெரிவிக்கத் தவறினால், அவருக்கும் தனியாகத் தண்டனை விதிக்கப்படலாம்.

அதேபோல், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், புகைப்படம், முகவரி அல்லது குழந்தையை அடையாளம் காண உதவும் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. பிரிவு 23-ன்படி, குழந்தையின் அடையாளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தும் எந்தத் தகவலையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இதில் குழந்தையின் பள்ளி, வசிக்கும் பகுதி, குடும்ப விவரங்கள் உள்ளிட்ட அடையாளம் காண உதவும் தகவல்களும் அடங்கும். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சட்டம் சொல்வது என்ன
சட்டம் சொல்வது என்ன

Nipun Saxena v. Union of India வழக்கிலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பது சட்டத்தின் கடமை மட்டுமல்ல; சமூகத்தின் பொறுப்பும்கூட.

புகார் அளிப்பது முதல் நீதிமன்ற விசாரணை வரை, குழந்தைக்கு ஏற்ற நடைமுறைகளையும் சட்டம் உறுதி செய்கிறது. குழந்தையின் வாக்குமூலம், முடிந்தவரை குழந்தை வசிக்கும் இடத்திலேயே, காவல்துறை சீருடையில் இல்லாமல் பதிவு செய்யப்பட வேண்டும். குழந்தையை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக் கூடாது. மருத்துவப் பரிசோதனையும் குழந்தையின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும். நீதிமன்ற விசாரணையின்போதும் குழந்தைக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கான பாதுகாப்புகள் சட்டத்தில் உள்ளன.

*தண்டனை மட்டுமல்ல… குழந்தையின் மனநலமும் முக்கியம்!*

Sumit Shakya v. State of NCT of Delhi வழக்கில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு விசாரணை நீதிபதி ராஜனி ரங்கா எழுதிய கடிதத்தில், “உன் குழந்தைப் பருவத்தைத் திருப்பித் தர முடியாது. ஆனால், இனி பள்ளிக்குச் செல், நண்பர்களுடன் பழகு, சிரி, விளையாடு, கனவு காண்” என்ற நம்பிக்கையூட்டும் செய்தி இடம்பெற்றிருந்தது.

அந்தக் கடிதத்தை குழந்தையின் குடும்பத்திடம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. “குற்றவாளிக்குத் தண்டனை கிடைப்பதோடு, பாதிக்கப்பட்ட குழந்தை மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வதும் முக்கியம் என்பதை இந்த வழக்கு உணர்த்துகிறது”

“நீ ஏன் அங்கே போனாய்?”, “ஏன் முன்பே சொல்லவில்லை?” என்று குறை சொல்லாதீர்கள். குழந்தை சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்; நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள். குழந்தையைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று, நம்பகமான பெரியவரின் உதவியுடன் உரிய அதிகாரிகளை அணுகுங்கள். குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாத்து, தேவையான மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளையும் பெற்றுத் தாருங்கள். குழந்தையின் விவரங்களை மற்றவர்களிடம் பகிர்வதையும் தவிருங்கள்.

*குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது சட்டத்தின் வேலை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கூட. குழந்தையைக் குறை சொல்லாதீர்கள்… குற்றம் செய்தவரைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!*

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" – அண்ணாமலை

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ...

ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் விஜய்?" – இபிஎஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது...

கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்...

'அட்டாக் பரந்தாமன்' லைப்ரரி மேட்டரை விட்றாதீங்க! – தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு புது அசைன்மெண்ட்!

சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்'...