கடந்த சில ஆண்டுகளாகவே, கனடா தங்கள் நாட்டில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், ‘இனி கனடாவின் எல்லை அதிகாரிகளே விசா மீது முடிவுகளை எடுக்கலாம்’ என்று தற்போது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது கனடா அரசு.
புதிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி, எலக்ட்ரானிக் பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation) அல்லது தற்காலிக குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள் கனடாவில் இருக்கலாமா… இருக்கக் கூடாதா என்று கனடா எல்லை அதிகாரிகள் முடிவு செய்யலாம். ஒருவேளை இவற்றை வைத்திருக்கும் அந்த நபரின் மீது அதிகாரிகளுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அவர்களது விசாவை அதிகரிகளே ரத்து செய்ய முடியும் அல்லது நிராகரிக்க முடியும்.
இந்த நடைமுறையினால் பணி விசா, ஸ்டூடண்ட் விசா போன்ற ஆவணங்களையும் அதிகாரிகள் ரத்து செய்யலாம். மேலும், ‘விசா முடிந்தும் கூட இந்த நபர் கனடாவில் இருந்து கிளம்பமாட்டார்’ என்ற சந்தேகம் எழுந்தால், அதிகாரிகள் தாராளமாக இந்த நடவடிக்கையை எடுக்கலாம். இந்த ரத்து குறிப்பிட்ட அந்த நபர் கனடாவிற்குள் நுழையும்போது அல்லது அவர்கள் அங்கே இருக்கும்போது கூட செய்யப்படலாம். இந்த முடிவு முழுக்க முழுக்க அதிகாரிகளை சார்ந்ததே.
நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பே அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு விட்டால் அவர்கள் அப்படியே திரும்பிவிட வேண்டும். ஒருவேளை ஏற்கெனவே குடியிருப்பவர்களின் விசா ரத்து செய்யப்பட்டால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் கனடா நாட்டில் இருந்து கிளம்பிவிட வேண்டும்.
இந்த முடிவு நிச்சயம் இந்தியர்களை பெரிதும் பாதிக்கும். காரணம், அதிக இந்தியர்கள் படிக்கும், வேலை செய்யும் வெளிநாடுகளில் கனடா முக்கியமான நாடு ஆகும். மேலும், கனடாவிற்கு இந்தியர்கள் அதிகம் சுற்றுலா கூட செல்கிறார்கள். இந்த நடவடிக்கைகளால் இந்த இரண்டுமே அதிகம் பாதிக்கப்படும்.
இந்த நடைமுறை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.