26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை

Date:

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி வெறிச்சோடிப் போய்க்கிடக்கும் சூழலில், புதுக்கோட்டை திலகர் திடல் அருகில் இயங்கி வரும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இதற்கு முற்றிலும் விதிவிலக்காகத் திகழ்கிறது.

சிறந்த கல்வித் தரம், மாணவிகளுக்கான பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் காரணமாக, புதுக்கோட்டை திலகர் திடல் அருகில் இயங்கி வரும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்களும் மாணவிகளும் ஆண்டுதோறும் போட்டி போட்டுக்கொண்டு வருகை தருகின்றனர்.

ஆனால், அலை அலையாய் வரும் மாணவிகளுக்கு இடமளிக்க முடியாமலும், சேர்க்கை வழங்க இயலாமலும் பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு கல்வியாண்டிலும் திணறி வருகிறது. காரணம் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமைதான்.

900 மாணவிகள்… ஆனால் வெறும் 3 கழிப்பறைகள்

“பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது 900-க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இத்தனை மாணவிகளின் பயன்பாட்டிற்காக பள்ளியிலிருப்பது வெறும் 3 கழிப்பறைகள் மட்டுமே.

முற்பகல், மதியம் மற்றும் பிற்பகல் வேளைகளில் வழங்கப்படும் 15 நிமிட இடைவேளைக்குள் 900 மாணவிகளும் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது. நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தும் வாய்ப்புக் கிடைக்காமல், மணி அடித்ததும் அவசர அவசரமாக வகுப்பறைக்கு ஓட வேண்டிய மன உளைச்சலுக்கு மாணவிகள் ஆளாகின்றனர்.

புதுக்கோட்டை – பள்ளி

பராமரிப்பின்மை & சுகாதாரச் சீர்கேடு

இருக்கின்ற மூன்று கழிப்பறைகளின் நிலைமையும் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. கழிப்பறைக் கதவுகள் உடைந்தும், பூட்டுகள் இல்லாமலும் பராமரிப்பின்றிப் பாழடைந்து கிடக்கின்றன. முறையான தண்ணீர் வசதியோ, தூய்மைப் பணியோ இன்றிச் சுகாதாரமற்ற சூழலே நிலவுகிறது.

இதன் காரணமாக, பல மாணவிகள் வேறு வழியின்றி நாள் முழுவதும் சிறுநீரை அடக்கிக் கொண்டு, மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகே இயற்கை உபாதையைக் கழிக்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அரசின் அலட்சியமே காரணம்!

ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால், பெற்றோர்களும் மாணவிகளாகவே விரும்பி வந்து சேரும் ஒரு தரமான அரசுப் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகளோ அல்லது கழிப்பறை போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகளோ கூடச் செய்து தராமல் இருப்பது அரசின் அப்பட்டமான அலட்சியமே எனச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு

இந்தத் துயர நிலைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி மாணவிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை – பள்ளி

அந்த மனுவில் மாணவிகள் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதாவது:

“900 மாணவிகளுக்கு 3 கழிப்பறைகள் மட்டுமே இருப்பது எங்களுக்குக் கொடுக்கப்படும் மாபெரும் தண்டனை. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்கள், எங்களை உங்களது சொந்தக் குழந்தைகளாகக் கருத வேண்டும்.

உடனடியாக பழைய கழிப்பறைகளைச் சீரமைத்துப் புதிய கதவுகள் அமைத்துத் தர வேண்டும். அத்துடன் மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறைகளையும் வகுப்பறைகளையும் கட்டித் தந்து எங்களின் சுகாதாரத்தையும் கல்வியையும் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்தும், அடிப்படை வசதிகளின்றித் தவிக்கும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் இந்தக் கண்ணீர் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய...

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...