நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பைத் தொடர்ந்து, ‘தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகிவரும் எட்டப்பர்கள், கைப்புள்ள, வீர வசனம் பேசியவர்களின் அந்தர் பல்டி’ என்று தி.மு.க-வை மாணிக்கம் தாகூர் திட்டித் தீர்த்திருப்பதும், ‘நன்றி கெட்டவர்கள், முதுகு குத்திகள்’ என தி.மு.க தரப்பிலிருந்து பதிலடி கொடுத்திருப்பதுமாக தமிழக அரசியல் தடதடக்கிறது!
மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் வரும் நவம்பர் 30-ம் தேதி கூட்ட முடிவு செய்துள்ளது. இதுகுறித்தான அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘அத்தியாவசிய அரசு அலுவல்கள்’ மேற்கொள்ள இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாக’க் கூறப்பட்டுள்ளது. எனினும், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் இந்தக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக பரபர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம், டெல்லிக்குப் பயப்பட மாட்டோம் என்றெல்லாம் நேற்றுவரை வீரவசனம் பேசியவர்கள் இன்று மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்போம்’ என பதுங்குவதைக் கண்டு தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள்’ என மறைமுகமாக தி.மு.க-வை திட்டித் தீர்த்துள்ளார்.
தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதும் “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தைப் பார்க்கும்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அவர்கள் ஆதரவு அளிக்கத் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. இந்த மசோதாவுக்கு யார் ஆதரவு அளித்தாலும், அது தமிழகத்துக்கு செய்யும் துரோகம். யார் துரோகம் செய்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். திமுக ஏன் இப்படி யூடர்ன் அடிக்கிறது?” என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், ‘ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூரின் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது,
“மனநோயாளிகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால், பொதுவெளியில் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ‘ஏற்கெனவே நாங்கள் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்று எங்கள் தலைவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
அதாவது, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
அடுத்து, 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
இந்த இரண்டு கோரிக்கைகள்தான் தி.மு.க-வினுடைய கோரிக்கைகள். இந்த இரண்டுதான் பேசப்படும்; இந்த இரண்டிலும்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எங்கள் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து ஏற்கெனவே சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு இது குறித்தான மசோதா கொண்டுவந்தபோது, கட்சியின் துணைப்பொதுசெயலாளர் கனிமொழியும் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், எந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது என்பதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவரே இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், அந்தக் கட்சி இப்போது உள்ளதும் காணாமல் போய்விடும்!
போய்ச் சேருகிற இடங்களுக்கு ஏற்ற மாதிரி பேசிக்கொண்டு திரிகிற இந்த மனநோயாளிகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், அவர்கள் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; எந்த அடிப்படையும் இல்லை.
ஒரு புரிதலும் இல்லாமல், ‘நாம் உட்கார்ந்திருக்கிற இடத்தில் தி.மு.க-வைப் பேசினால் ஏதோ தினந்தோறும் கிடைப்பதில், கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் பேசுவார்களேயானால், அவர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். நாங்கள் அதற்குப் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார் காட்டமாக.




