14
July, 2026

A News 365Times Venture

14
Tuesday
July, 2026

A News 365Times Venture

“விஜய்யைப் பார்க்கப்போனதே கொலைக் குற்றமாகிவிடுமா என்ன?” – கரூர் எம்.பி ஜோதிமணி காட்டம்

Date:

“கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் வழங்கிய பணி ஆணை என்பது, வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும்தானே?”

“கரூரில் நிகழ்ந்த அந்தக் கொடூர, துயர் நிகழ்வில் பலியானவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள எளிய விளிம்புநிலை மக்கள். அன்றைய விபத்தில் இறந்துபோனவர்கள்தான் அவரவர் குடும்பப் பொறுப்பைச் சுமந்து வந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

குழந்தையை இழந்தவர்கள், தாயை இழந்தவர்கள், அண்ணனை இழந்தவர்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

விஜய்

தாங்கள் விரும்புகிற தலைவரைப் பார்ப்பதற்காக, ஓர் அரசியல் கூட்டத்துக்குப் போன இடத்தில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இறந்துபோனவர்கள் யாரும் கொலைக்குற்றம் செய்யவில்லை. இப்படியொரு கொடிய நிகழ்வு அங்கே நடைபெறும் என்று யாருக்குமே தெரியாது. எனவே பலியான அந்த நபர்களின் குடும்பத்தினரை நாம் கருணைப் பார்வையோடுதான் அணுக வேண்டியிருக்கிறது.

இந்த எளிய மனிதர்களுக்கு உதவுவதால், வழக்கு விசாரணையே பாதிக்கும் என்று பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், ஏற்கெனவே சம்பவம் நிகழ்ந்து விசாரணை நடைபெற்றபோதே பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு கண்காணிப்புக் குழுவிடமும் சி.பி.ஐ விசாரணையிலும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே இந்த நிகழ்வால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லமுடியாது.”

“இதுபோன்ற நலத்திட்ட உதவிகள், பிறழ் சாட்சிகளை உருவாக்கிவிடாது என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?”

“30 வருடங்களாக நான் அரசியலில் இருக்கிறேன். இவ்வளவு நாட்களில் இப்படியொரு துயர் நிகழ்ந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. பாதிக்கப்பட்ட அந்த மக்களையும் எனக்கு நன்றாகத் தெரியும். பணி ஆணையை வாங்க வருகிற மக்கள், அந்தப் பணி ஆணையைப் பார்த்த உடனேயே அழுகிறார்கள்.

எவ்வளவு பெரிய இழப்பின் மூலம் இந்தப் பணி ஆணை வந்திருக்கிறது என்பதையறிந்து அழுகிற அவர்களுக்கு, இழப்புதான் பெரிதாகத் தெரியும். மற்றபடி இந்தப் பணி ஆணைக்காக, வழக்கின் சாட்சியத்தையே மாற்றிப் பேசிவிடுவார்கள் என நாம் சொல்வது, அந்த மக்களின் வலியை, துயரை நாம் குறைத்து மதிப்பிடுவதாகத்தான் பார்க்கிறேன்; அரசியல் ரீதியாக கொச்சையான குற்றச்சாட்டாகவே பார்க்கிறேன்”

“பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 32 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், கூடுதலாக அரசுப் பணி ஆணையும் வழங்கியிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?”

“மனித இழப்புக்கு முன், பணமோ அரசுப் பணியோ இழப்பீடு ஆகாது. வழங்கப்பட்டிருக்கும் அந்த அரசுப்பணியும்கூட சம்பந்தப்பட்டவர்களின் கல்வித்தகுதி, அனுபவத்தைக் கருத்திற்கொண்ட மிக மிக எளிய பணிகள்தாம். துறை சார்ந்த இயக்குநர் அல்லது செயலாளர் போன்ற பெரிய பதவிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான அந்த எளியப் பணியைக் கொடுப்பதன் மூலமாக அந்த மக்களிடையே செல்வாக்கு செலுத்திவிட முடியும் என்றோ அல்லது இதில் விதிமீறல் நிகழ்ந்துவிட்டது என்றோ சொல்லிவிட முடியாது.”

ஜோதிமணி
ஜோதிமணி

“ஏற்கெனவே அரசுப் பணியின்போது இறந்தவர்களின் குடும்பத்தினரும்கூட இந்த எளிய பணிகளுக்காகத்தானே காத்திருக்கிறார்கள்…?”

“பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல… கடன் வாங்கிப் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கும்கூட பணி வழங்க வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமை என்பதை நான் மறுக்கவில்லை. கரூர் கொடுந்துயரம் என்பது நமது நாடு மட்டுமன்றி, உலகையே உலுக்கிய விவகாரம்.

தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில், சம்பவத்தன்று இறந்துபோனவர்களைக் கண்முன்னே பார்க்க வேண்டி எனக்கு நேர்ந்த துர்பாக்கியம், இனி யாருக்கும் நேரக்கூடாது.

இத்தனை வலிமிகுந்த துயரின்போது, ஒரு முதல்வரே வந்து ‘உங்கள் இழப்புக்கு என்னால் ஈடு செய்யமுடியாது. அதேசமயம் நான் என்றைக்கும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். உங்கள் வேதனையில் நானும் பங்கெடுத்துக்கொள்வேன்’ என்று சொல்கிறார்.

இந்தச் சூழலில் அவரை நாம் முதலமைச்சராகவோ அல்லது த.வெ.க தலைவர் என்றோ ஒரு தனி நபராகப் பார்க்காமல், அரசின் ஒரு பிரதிநிதியாக மட்டும் பார்த்தாலே போதும்”

“கடந்த ஆட்சியில் கள்ளச்சாராய இறப்புகளுக்கான நிவாரணத் தொகை குறித்து கேள்வி எழுப்பியவர்களே, இன்றைக்கு ‘நடிகரைப் பார்க்க வந்து இறந்துபோனவர்களுக்கான நிவாரணத் தொகை கொடுக்கலாமா…’ என்றும் கேள்வி எழுப்புகிறார்களே?”

மக்களின் இழப்புக்கு எந்தவொரு அரசாங்கமும் பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும். இதில், குடித்து இறந்தார்களா, நடிகரைப் பார்க்கப்போய் இறந்தார்களா என்றெல்லாம் பிரித்துப் பார்க்கக்கூடாது.

விஜய் கரூர் சம்பவம்

கரூர் சம்பவத்தின்போது விஜய், ஒரு நடிகராக அங்கு வரவில்லை; த.வெ.க எனும் அரசியல் கட்சியின் தலைவராக, தேர்தல் பிரசாரத்துக்காகத்தான் வந்தார். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்க்கவும் மக்கள் போகத்தானே செய்கிறார்கள்.

அவர்களைவிடவும் விஜய் மீது மக்களுக்கு அதிக ஈர்ப்பு, அன்பு இருப்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் போய்விட்டார்கள். அசம்பாவிதமும் நடந்துவிட்டது. மற்ற இடங்களிலும் மக்கள் இதுபோன்ற கூட்டங்களுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அசம்பாவிதங்கள் நடைபெறாததால் அவை விவாதமாகவில்லை.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் இந்த நிகழ்ச்சியையே தங்களது முதல் அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளது தமிழக அரசு.

இந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி என்பது, அவர்களது துயரத்திற்கான முதற்கட்ட நிவாரணமாகத்தான் பார்க்கிறோம்.

விஜய் கரூர் கூட்டம்

இதுகுறித்துகூட அரசியல் விமர்சனங்கள் எழுந்தால், அந்த விமர்சனத்தையும் நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், இறந்துபோன அனைவரும் எளிய மக்கள். இந்தச் சம்பவத்தில் அந்த மக்கள் செய்த தப்பு என்ன? நமக்குப் பிடித்த ஒருவர் வந்தால், நாம் பார்க்கப் போகமாட்டோமா? அப்படிப் பார்க்கப்போனதே ஒரு கொலைக்குற்றமாகிவிடுமா என்ன… எனவே இதை மிகப்பெரிய ஒரு இழப்பாக மட்டுமேதான் பார்க்கவேண்டும்”

“’தேர்தலுக்கு முன்பு, ஊரான் நெய்யில் ஸ்வீட் செய்யாதீர்கள் என்று தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்த விஜய்யே, இன்றைக்கு அரசு நெய்யில் ஸ்வீட் செய்கிறாரே…’ என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?”

“இழப்போட வலியைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்யின் இடத்தில் இருந்து இந்தச் சம்பவத்தைப் பார்க்கவேண்டும். புதிதாக அரசியலுக்கு வந்தவர், அவர் பிரசாரத்துக்கு வந்த இடத்தில் வெள்ளமாக வந்த மக்களிடையே இப்படியொரு துயரம் நேர்ந்திருக்கிறது எனும்போது, விஜய் மட்டுமல்லாது அன்றைய முதல்வரிலிருந்து அனைவருமே இந்தப் பெருவலியின் வேதனையை மனப் பாரத்தை அனுபவித்திருக்கிறார்கள்தானே.

அதனால்தானே முதல்வர் விஜய், மேடையிலேயே அடக்கமுடியாமல் அழுகிறார். இப்படியொரு சூழலில், நிவாரணமாகக் கொடுக்கப்படும் பணமோ, பணியோ அவர்களது இழப்பை ஈடு செய்யாது; செய்யவும் முடியாது.”

“கரூர் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கவே முதல்வர் வருகை தந்ததாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முதல்வரோ ‘இடைத்தேர்தலில் தி.மு.க-வை வெளுத்துவிடுங்கள்’ என்று நிவாரணம் வழங்கும் கூட்டத்திலும் தேர்தல் பிரசாரம்தானே செய்கிறார்?”

“முதலமைச்சராக இருக்கும் விஜய், த.வெ.க என்ற கட்சியின் தலைவரும்கூட. இந்த நிலையில், முதல்வராக அவர் மீது தினமும் வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் ஏதும் கூறாமல் அவர் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? விமர்சனம் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ… அதேபோல் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் எதிர் விமர்சனம் வைக்க முதல்வருக்கும் உரிமை இருக்கிறதுதானே! முதல்வராக இருக்கும்போது முதல்வர் வேலையைப் பார்க்கிறார். த.வெ.க தலைவராக இருக்கும் இடத்தில், ஓர் அரசியல் கட்சித் தலைவராக எதிர் விமர்சனத்தையும் முன்வைக்கிறார் அவ்வளவுதான்.”

“கரூர் துயரத்துக்கு அன்றைய ‘தி.மு.க அரசும் காவல்துறையும்தான் காரணம்’ என இன்றைக்கு காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளுங்கட்சியான த.வெ.க-வே குற்றம் சாட்டலாமா?”

“முதல்வராக இருப்பதாலேயே, ஒரு தரப்பைக் குற்றம் சாட்டக்கூடாது என்றில்லையே. பெரம்பலூரில், ‘கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் திரும்பிப் போய்விடுங்கள்’ என காவல்துறை அதிகாரிகள் கூறியதால், திரும்பிப் போய்விட்டேன். அதேபோல் இங்கும் கூறியிருந்தால், திரும்பிப் போயிருப்பேனே…’ என்றுதானே முதல்வர் சொல்கிறார். இது ஒரு ஸ்டேட்மென்ட்; யாரையும் குற்றச்சாட்டுவது அல்ல.

ஜோஸப் விஜய்

விசாரணை நடந்துகொண்டிருக்கிறது என்பதை மனதில் வைத்துத்தான் முதல்வருமே இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். கரூருக்கு வந்துவிட்டு, அந்தச் சம்பவம் குறித்து கருத்து ஏதும் சொல்லாமலேயே அவர் கடந்துபோய்விட முடியாதல்லவா! கரூர் விவகாரத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் தரப்பு நியாயம் என்ற ஒன்று இருக்கிறதுதானே… அதை அவர் இங்கேதானே பதிலாக சொல்லியாக வேண்டும். வேறு எங்காவது அவர் இதைப்பற்றிப் பேசியிருக்கிறாரா… இல்லையே!”

“கரூர் சம்பவத்தின்போது, தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸின் கருத்துக்கும் தற்போது த.வெ.க கூட்டணியில் இருக்கிற காங்கிரஸின் கருத்துக்கும் இடையே தலைகீழ் மாற்றம் தெரிகிறதே?”

“அப்போதும் இப்போதும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடைய நிலைப்பாடு ஒன்றுதான். இந்தச் சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தி நீதி வழங்கியாக வேண்டும். ஏனெனில், இறந்துபோன 41 பேரும் தற்கொலை செய்து இறந்துபோகவில்லை. பெருந்துயர நிகழ்வில் மரணமடைந்திருக்கிறார்கள்.

கரூர் சம்பவம்
கரூர் சம்பவம்

அவர்களது இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் இழப்புக்கு முன்பாக, ஆட்சிகளைப் பற்றியோ, கட்சிகளைப் பற்றியோ, கூட்டணிகளைப் பற்றியோ நாம் கவலைப்பட முடியாது. கரூர் எம்.பி என்பதைத்தாண்டி, இந்த ஊரைச் சேர்ந்த பெண் நான். இந்தத் துயரத்தில் நானும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறேன். எனவே, சம்பவத்தன்றைக்கு என்னிடம் கருத்து கேட்டிருந்தாலும் இதே கருத்தைத்தான் நான் சொல்லியிருப்பேன்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க – ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள்...

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான...

சிறையில் கவுன்சிலராகப் பதவியேற்ற பா.ஜ.க பிரமுகர்; கேரள அரசியல் வரலாற்றில் முதன் முறை நிகழ்வு!

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. மாநகராட்சி...

"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" – பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100...