19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

’யார் அதிகம் கொள்ளையடிப்பது என்பதில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையே போட்டி’– கோவையில் பிரதமர் மோடி

Date:

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நம்பிக்கையை, புதிய தொடக்கத்தை கொடுக்கும் வேளையில், தமிழ்நாட்டு அரசியலிலும் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. மேலும் அது தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளே நுழைகிறது, திமுக வெளியேறுகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது. கோவை கடின உழைப்பாளிகளையும், அன்பான மக்களையும் கொண்டுள்ள ஊர். வளர்ச்சி அரசியலுக்கும் பா.ஜ.க-வுக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் ஊர் என்பதால், இங்கு வரும்போது உங்களில் ஒருவனாக உணர்கிறேன்.

நாம் கடந்த 2023 இல் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றினோம். அதை அமல் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை கடந்த 16 ஆம் தேதி முன்வைத்தோம். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக தனிப்பட்ட முறையில் அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு கோரினேன். இதன் மூலம் கிடைக்கும் எல்லா பாராட்டுகளையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னேன். சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் சட்டப் பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

பிரதமர் மோடி

பொய் பேசும் தி.மு.க.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனது உயரிய எண்ணம் தோல்வி அடைந்துவிட்டது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெறுப்பு அரசியலுக்கு, தரம் தாழ்ந்த அரசியலுக்கு இரையாக்கிவிட்டது. இந்த மசோதா மட்டும் சட்டமாகியிருந்தால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருப்பார்கள். தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் கிடைப்பதாகவும் இருந்தது. ஆனால் திமுக இதை விரும்பவில்லை என்பது அதன் செயல்பாடுகள் மூலம் தெளிவாக அம்பலமாகிவிட்டது. தி.மு.க கருப்பு உடை அணிந்து தங்களது தீய எண்ணங்களுக்குத் திரைபோட்டுவிட முடியாது. தி.மு.க தனது கெட்ட செயல்களுக்கான பலன்களில் இருந்து தப்பிவிட முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொண்டுவிட்டனர். பொய் பேசும் தி.மு.க-வால் பொய்களை மறைக்க முடியாது.

ஆனால், இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல தொடக்கம்தான் என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். இதற்காக பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து போராடுவார்கள். இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு அது தொடர்பாக நாட்டு மக்களிடம் விரிவாக அதுபற்றி பேச இருக்கிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

இந்த மசோதா விவகாரத்தில் தி.மு.க பெருமையாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் முன்னேறினால் தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு ஏன் எரிகிறது. அவர்கள் அதிகாரம் தங்களின் ஒற்றைக் குடும்பத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு ஆதரவாக தி.மு.க இல்லை. இதற்காக தி.மு.க-வுக்கு சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள். தமிழக பெண்கள் தி.மு.க-வினரை எங்கு பார்த்தாலும் இதுபற்றி கேட்க வேண்டும். மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் பொன்னான வாய்ப்பை ஏன் மறுத்தார்கள் என்று கேட்க வேண்டும். இதற்காக வரும் 23 ஆம் தேதி அவர்களுக்கு தெளிவான, பலமான செய்தியை வாக்குகள் மூலம் அளியுங்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தியாவின் வளர்ச்சிக்கான என்ஜினாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு சாலை, ரயில்வே, விமான நிலைய விரிவாக்கம், நலத்திட்டங்கள் போன்றவற்றுக்காக மத்திய அரசு ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகமான பணத்தை வழங்கியுள்ளது. இது காங்கிரஸ், திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதைவிட பல மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு உயர்ந்ததும், தமிழ்நாட்டின் கடன் உயர்ந்ததும்தான் சாதனையாக உள்ளது. ஒரு குடும்பம் தொடர்ந்து பணக்கார குடும்பமாகிறது, தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மீதான கடன் மேலும் கூடிக்கொண்டே போகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே என்பது தமிழ்நாட்டில் குடும்பத்தால், குடும்பத்துக்காக, குடும்பத்தினரால் என்று உள்ளது. முதல்வர், துணை முதல்வர், நிரந்தர எம்.பி. ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். திரைப்படம், ஊடகங்கள் என அனைத்தும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள்கூட குடும்பத்தின் மிக இளைய உறுப்பினரிடம் தலைகுனிந்து நடக்க வேண்டியுள்ளது.

மகன், மருமகன் இடையே போட்டி

இந்தக் குடும்பத்தில் யார் அதிகம் கொள்ளையடிப்பது என்பதில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க-வுக்கும் காங்கிரஸ்க்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரு கட்சிகளிலும் மருமகன்கள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். இந்தியா ஒரு மகனால் சலித்துப் போய்விட்டது, தமிழ்நாடு ஒரு மருமகனால் சலித்துப்போயிருக்கிறது. எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல், தென்னை நார் வாரியத்தின் தலைவராக இருந்து அதை வளர்ச்சி பெறச் செய்த கோவை மண்ணின் மைந்தன் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

திமுகவின் ஊழல் மலிந்த அரசியலை கோவை மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர். இதனால் கோவையை அரசியல் பழிவாங்கும் நோக்குடன் தி.மு.க அணுகுகிறது. தி.மு.க-வின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கோவை மக்களை அண்மையில் அவமானப்படுத்தினார். இப்போது தேர்தலுக்காக டாஸ்மாக் ஊழலில் பெயர்பெற்ற ஒரு அரசியல்வாதியை கோவைக்கு அனுப்பியுள்ளனர்.

மாஃபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை

இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் ஒரு மாநிலத்தில் வேலை வேகமாக நடைபெறும். மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடையும், இதனால் மக்களுக்கு ஆதாயம் அதிகமாகக் கிடைக்கும். தி.மு.க அரசு விவசாயிகள் மீது அக்கறைகொள்ளவில்லை. ஆனால் டபுள் என்ஜின் அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த கோவை மண்ணில் இருந்து தமிழக மக்களுக்கு நான் சில உத்தரவாதங்களை அளிக்கிறேன். நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் சட்டம்  ஒழுங்கை சீர் செய்வோம். நில அபகரிப்பு, மணம் கடத்தல், மதுபான மாஃபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். இது ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும். தி.மு.க அரசு பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான ஊழல், மோசடி வழக்குகளும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நியமனங்களுக்கும் ஒளிவு மறைவில்லாமல் நடைபெறும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏப்ரல் 23 ஆம் தேதி வரலாறு காணாத அளவுக்கு அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில்...

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" – ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என...

BJP: இன்று ஈரோடு வரும் அமித்ஷா, பயணத் திட்டம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள்...