மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார்.
வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவிற்கும் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் நீண்டகாலமாகவே முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு நாளிதழான ‘எல் பெயிஸ்’ (El Pais) இதழுக்கு அளித்த பேட்டியில், ட்ரம்ப் மற்ற நாடுகளை மிரட்டும் போக்கைக் கையாளுவதாக லூலா குற்றம் சாட்டியிருக்கிறார். அதில் அவர்,
“ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதும் உலகை அச்சுறுத்தி போர்களை அறிவிக்கும் ஒரு நாட்டின் அதிபர் உடன் நம்மால் வாழ முடியாது.
மக்கள் பட்டினியால் வாடும் வேளையில், உலகம் $2.7 ட்ரில்லியனை ஆயுதங்களுக்காகச் செலவிடுகிறது. பூமியை கார்பன் உமிழ்வில் இருந்து மீட்பது பற்றிப் பேசிக்கொண்டே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடுகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன.

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. உலகத் தலைவர்கள் அனைவரும் அமைதியைப் பேணவும், ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.




