கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டங்கள், குற்றச்சாட்டுகள், வாக்குவாதம், சண்டை, சச்சரவு என முடிந்துள்ளது… கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை விசாரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 36 பேர்கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் அந்த ஆய்வுக்குழுவை எதிர்கொள்ளவும், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துகளை கேட்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தை நடத்தவும் திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.
அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான மதியழகன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இக்கூட்டம் கடந்த 18 ஆம் தேதி காலை கிருஷ்ணகிரியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இன்னும் பல நிர்வாகிகள் கெடுபிடிக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அப்போது கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள் வெளியற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கூற, அதனால் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏவும் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநிலச் செயாளாருமான செங்குட்டுவன், “எல்லோரையும் வெளியேற்றிவிட்டு யாரை வைத்து கூட்டம் நடத்தப் போகிறீர்கள்” என்று கேள்வி எழுப்ப, “தலைமை உத்தரவின்படிதான் செய்கிறேன், நீங்களும் வெளியேறலாம்” என்று மதியழகன் கூற… முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கும், மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பின்பு செங்குட்டுவன் அங்கிருந்து வெளியேற, “உங்கள் கருத்துகளை ஆய்வுக்குழு வரும்போது தெரிவியுங்கள்” என்று கூறிவிட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மதியழகன் அறிவித்தார்.
கிழக்கு மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர் தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்ததன் காரணம் குறித்து கூற வந்திருந்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தார்கள்.

இதுபோலவே கடந்த 17 ஆம் தேதி ஓசூரில் நடந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், “மாவட்டச் செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பிரகாஷ்க்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் மேயர் சத்யாவை வேட்பாளராக அறிவித்த பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியும் பென் நிறுவனமும்தான் தோல்விக்குக் காரணம்” என்று குற்றம்சாட்டிப் பேசிய நிர்வாகிகள், “தன் தொகுதியில் வெற்றி பெற பணத்தை வாரி வாரியிறைத்த சேகர் பாபு, முதல்வர் போட்டியிட்ட தொகுதியை கவனிக்கவில்லை” என்று குற்றம்சாட்டிப் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோலவே தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்திலும் யாரையும் பேச விடாமல் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான மணி மட்டும் பேசிவிட்டு, ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கூட்டத்தை முடித்துவிட்டு சென்றதையும் தருமபுரி மாவட்ட திமுக-வினர் விமர்சித்து வருகின்றனர்.




