நாடெங்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் தெரு நாய் கடி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான, அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் அதே இடத்தில் நாய்களை விட வேண்டும் என்ற விலங்குகள் நல ஆர்வலர்களின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லியில் தெரு நாய் கடி விவகாரம் பெரும் பிரச்னையாக மாறிவந்த நிலையில், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்த அமர்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், “பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து, அவற்றிற்குத் தடுப்பூசி செலுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில், “நாய்களைப் பிடித்து தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு, மீண்டும் அதே இடத்திலேயே கொண்டு வந்து விட வேண்டும்” என வலியுறுத்தி, மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்த நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெரு நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கக் கூடாது என்ற தங்களின் முந்தைய உத்தரவை மாற்ற முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் போது, நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெரு நாய் கடி சம்பவங்கள் குறித்து நீதிபதிகள் தங்களது ஆழ்ந்த கவலையையும், அதிகாரிகளுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவுசெய்துள்ளனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் :
2026-ஆம் ஆண்டு தொடங்கி இந்த முதல் நான்கு மாதங்களுக்குள்ளாகவே, நாடு முழுவதும் 2 லட்சம் தெரு நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சிறுவர்களும், முதியோர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தெரு நாய் கடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை நீதிமன்றம் உற்றுநோக்குகிறது.
உயர்தர பாதுகாப்பு உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில்கூட நாய்கடி சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில்கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் சூரத் நகரில் தெரு நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் நாய் கடி சம்பவங்கள் நிகழ்வது அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தைக் காட்டுகிறது.
விலங்குகள் நலவாரிய விதிமுறைகளை அரசுகள் உரிய முறையில் செயல்படுத்தவில்லை. கருத்தடை மற்றும் தடுப்பூசி விதிமுறைகளை முறையாகச் செயல்படுத்தாததே தற்போதைய நிலைக்குக் காரணம் என, நீதிபதிகள் சாடினர்.

நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க, முந்தைய உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
“பொதுவெளியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து, உரிய தடுப்பூசி செலுத்தி, காப்பகங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கேற்ப உரிய உள்கட்டமைப்புகளை உருவாக்கி, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மாநில அரசுகளுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். நெடுஞ்சாலைகளில் நாய்கள் அலைந்து திரிவதைத் தடுக்கத் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் இந்தத் தீர்ப்பை உரிய முறையில் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்” என்றும், “இதில் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாநில அரசுகள் இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




