13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

'பழைய பதவியை பயன்படுத்தக்கூடாது'- எடப்பாடி போட்ட கண்டிஷன்; மீண்டும் அதிமுகவில் பிளவை உண்டாக்குமா?

Date:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் வெடித்தன.

அதிமுக உட்கட்சி பூசல்

இதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அதிருப்தி அணியுமாக அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. இந்தத் தலைமைப் போட்டியால் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் பெரும் குழப்பமும், தொண்டர்களிடையே அதிர்ச்சியும் நீடித்து வந்தது.

எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி சண்முகம்

இணைந்த வேலுமணி தரப்பு

பிறகு கட்சிக்குள் நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைக்கும் விதமாக, நேற்று முன்தினம் (27-05-2026) முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தையின் முடிவில், கட்சியின் எதிர்கால நலன் கருதி இறுதியாகச் சுமுகமான சமாதானம் எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரு அணியினரும் இணைந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்துடன்கூடிய கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் சட்டமன்றக் கொறடாவாகவும் நியமிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.

எனினும் இதில் சி.வி சண்முகமும், விஜயபாஸ்கரும் கலந்து கொள்ளவில்லை.

சலசலப்புக்கு முற்றுப்புள்ளி

அதே நேரத்தில், முன்னதாக எஸ்.பி. வேலுமணியைச் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், விஜயபாஸ்கரைக் கொறடாவாகவும் நியமிக்கக் கோரி அதிருப்தி தரப்பால் அளிக்கப்பட்டிருந்த மனு முறைப்படி வாபஸ் பெறப்பட்டது. இதற்குப் பிரதிபலனாக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பால் அளிக்கப்பட்டிருந்த கட்சித் தாவல் நடவடிக்கை மனுவும் திரும்பப் பெறப்பட்டது.

இந்த பரஸ்பர உடன்பாடுகளின் மூலம், கடந்த சில நாட்களாக அதிமுகவில் நீடித்து வந்த அரசியல் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இரண்டாகப் பிளவுபட்டிருந்த அதிமுக மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் முழுமையாக ஒருங்கிணைந்துள்ளது.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

கட்சி பதவிகள் பிரிந்து சென்றவர்களுக்கு வழங்கப்படுமா?

ஆனால் இந்தப் பிளவின்போது அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, அவர்களுக்கு பதிலாக 17 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். தற்போது ஒன்றிணைந்திருந்திருக்கும் சூழலில் மீண்டும் கட்சி பதவிகள் பிரிந்து சென்றவர்களுக்கு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிசனை போட்டிருக்கிறார்.

அதாவது, `கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்தக்கூடாது’ என உத்தரவிட்டிருக்கிறார். எடப்பாடியின் இந்த உத்தரவு மீண்டும் கழகத்தில் பிளவை உண்டாக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

அதிமுகவில் பிளவுகள் ஏற்படுவது வரலாறு தான்

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “விஜயபாஸ்கர், சிவி சண்முகம் ராஜினாமாவை நோக்கி தான் இது போகிறது. எஸ்.பி வேலுமணி சமரசம் செய்து கொண்டு அதிமுகவில் தொடர்வார். உடனடியாக எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நீக்க மாட்டார்.

ஆனால் மாவட்ட பிரிவு நடக்கும். எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அமைப்பு ரீதியான பதவிகள் கொடுத்து சமாதானம் நடந்துவிடும். தேர்தல் தோல்விகளுக்கு பிறகு அதிமுகவில் பிளவுகள் ஏற்படுவது வரலாறு தான்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

எடப்பாடி பழனிசாமி தான் ரியல் பாஸ்

1996 ஜெயலலிதா அவர்களே வெற்றி வாய்ப்பை இழந்தார். திருநாவுக்கரசு தலைமையில் போர் கொடி உயர்த்தப்பட்டது. இரண்டு போட்டி பொதுக்குழுக்கள் நடந்தன. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஜெயலலிதா கையில் பொறுப்பு வந்தது. பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு பிளவுகள் இல்லை. மீண்டும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவை பார்த்தோம். அரசியல் என்பது அதிகாரத்திற்கான யுத்தம் தான். அதே நேரத்தில் நம்மால் வெற்றி அடைய முடியாது என்று நினைக்கும் போது சமரசங்கள் ஏற்படும். அதிமுக பேனர் இரட்டை இலை சின்னம் இதை இழப்பதற்கு யாரும் தயாராக இல்லை. இன்றைய தேதிக்கு எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ரியல் பாஸ்” என்றார்.

எடப்பாடி தலைமை

இதனைத்தொடர்ந்து அதிமுக குறித்த நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் நாதன், ” எடப்பாடி இப்படி ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு காரணம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பெரும் பிளவு ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இதனால், அவர்கள் தனியாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ மற்றும் தனது தலைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. இருப்பினும், அந்த அணியினரிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவரால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

ஊடகவியலாளர் நாதன்
ஊடகவியலாளர் நாதன்

தவெக – வேலுமணி தரப்பு பேச்சுவார்த்தை

இதற்கிடையில், அதிமுகவின் கே.சி. வீரமணி தங்களுக்குப் பத்து அமைச்சர் பதவிகள் கேட்கப்பட்டதாக வெளிப்படையாகக் கூறினார். லீமா ரோஸ் போன்றோரும் அதிமுக மற்றும் தவெக இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் குறிப்பிட்டனர். ஆனால், சில காரணங்களால் விஜய் தரப்பு அவர்களுக்கு அமைச்சர் பதவிகளையோ அல்லது வாரியப் பதவிகளையோ வழங்கவில்லை. மேலும், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் விஜய் தரப்பு கருதியிருக்கலாம்.

ஓங்கிய எடப்பாடி கை!

குதிரை பேரமும் சட்டமன்ற உறுப்பினர்களின் விலகலும் திட்டமிட்டபடி பதவிகள் கிடைக்காததாலும், கட்சித் தாவல் தடைச் சட்டம் தங்களுக்கு எதிராக இருப்பதாலும், தவெக தரப்பைக் கைவிட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாகச் செல்வதே நல்லது என்று வேலுமணி தரப்பு முடிவு செய்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

“என்னை எதிர்த்துச் சதி செய்துவிட்டு, இப்போது மீண்டும் என்னிடமே வந்துவிட்டீர்கள்” என்று தனது அதிகாரத்தை நிலைநாட்ட எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். இதனால் அவர்களின் பழைய அதிகாரத்தை விடக் குறைவான அதிகாரத்தையே அவர் வழங்க முன்வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தொடர் தோல்வி

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் அதிமுகவினர் தங்களது தலைவருக்கு மட்டுமே முழுமையாகக் கட்டுப்பட்டு இருந்தனர்; அங்குத் தலைவரே முதன்மையாக இருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை என்று கூறிக்கொண்டாலும், அவரால் கட்சியை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை.

கடந்த பத்து தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். தற்போதைய தோல்விக்குப் பிறகு கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதால், கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நாள்தோறும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அழிவை நோக்கி அதிமுக

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இரட்டை இலை சின்னத்தின் மதிப்பை வைத்து கடந்த தேர்தல்களில் கூட்டணி அமைத்து வெற்றி பெற முயன்றனர். ஆனால், விஜய்யின் வருகைக்குப் பின் அந்த முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. எனவே பாஜக அழிக்காமலேயே அதிமுக தானாகவே அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

பலவீனம்…

எடப்பாடி பழனிசாமியும் தனது அதிகார எல்லைகளை உணர்ந்துள்ளார். அதே வேளையில், வேலுமணி தரப்பினரும் சிலர் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் தங்களது பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, இரு தரப்புமே பலவீனமாக இருப்பதால், தங்களுக்குள் ஏதேனும் ஒரு சமரசத்திற்கு வர மட்டுமே வாய்ப்புள்ளது. இதில் எவருமே தனித்து வலுவாக இல்லை என்பதே தற்போதைய கள நிலவரமாகும்” என்று முடித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" – உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல,...

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது...

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" – தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர்...

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" – உதயநிதி சாடல்

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க...