2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

`தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' – துரை வைகோ ஓப்பன் டாக்

Date:

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம்.

“தவெகவின் ஆதரவு கட்சிகளின் முதல் கூட்டம் இது. இதை ஆலோசனை கூட்டமென எடுத்துக் கொள்ளலாமா? இல்லை ஒரு புதிய கூட்டணி உருவாகிவிட்டதா?”

“நிச்சயமாக புதிய கூட்டணி உருவாகிவிட்டது. அதை வெளிக்காட்டும் கூட்டம்தான் இது. தவெக-வை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் மட்டும்தானே அவர்களின் அழைப்பை ஏற்று இங்கே கூடியிருக்கிறோம்.”

“திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தீர்கள். முடிவுகளுக்கு பிறகு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மதிமுக முகாமில் உற்சாகம் அதிகமாக இருக்கிறதே?”

“கண்டிப்பாக, குறிப்பாக நான் ரொம்ப ரொம்ப உற்சாகமாக இருக்கிறேன். `அரசியல் ஒரு நச்சு. இங்கே நேர்மைக்கு இடம் இருக்காது’ எனும் கருத்தை கொண்டிந்தவன் நான். எங்கள் கட்சியின் நிர்வாகிகளின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டேன். அரசியல் மொத்தமும் ஊழலால் புரையோடியிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இருபெரும் கட்சிகளின் மீது மக்களுக்கு பெரிய சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனில், நீங்கள் ஏன் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தீர்கள் என கேள்வி கேட்பீர்கள்.

பணமயப்பட்ட அரசியல் சூழல் எங்களை போன்ற சிறிய இயக்கங்களுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. பெரிய கட்சிகள் ஒரு எம்.எல்.ஏ தொகுதிக்கு 15 கோடியும் எம்.பி தொகுதிக்கு 40 கோடியும் செலவு செய்கின்றனர். இதற்கு மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றுதான் ஐயா மூப்பனார், வைகோ போன்றவர்கள் மூன்றாவது அணி கட்டினார்கள்.

ஆனால், அந்த அணிகளால் மக்களின் நம்பிக்கையை முழுமையாக பெற முடியவில்லை. ஆனால், விஜய் இன்றைக்கு அதை சாதித்து காட்டியிருக்கிறார். விதிகளுக்கு புறம்பாக ஒரு பைசா கூட செலவளிக்காமல் தவெக வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக சொன்னதைப் போலவே மிக நேர்மையான ஒரு ஆட்சியை விஜய் நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை போன்றவற்றில் கமிஷன் கலாசாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச லாவண்யம் இல்லாத நிலையை கண்டு மக்களே மனம் மகிழ்ந்து போயிருக்கின்றனர். நாங்களும் அதனால்தான் உற்சாகமாக இருக்கிறோம்.”

“தேர்தலுக்கு முன்பாக அறிவாலயம் வாசலில் நின்று ‘உயிருள்ள வரை தளபதிக்கு துணையாக நிற்பேன்!’ என முழங்கிய வைகோ, இப்போது சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார் என்கிற விமர்சனம் எழுகிறதே?”

“அது திமுகவினரின் பொய் கருத்துருவாக்கம். அவர்களால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு 20 கோடி என பல்லாயிரம் கோடிகளை களத்தில் இறக்கினார்கள். 25 கட்சிகளோடு கூட்டணி வைத்தார்கள். ஆனாலும் மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள். அந்த வேதனையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எங்களை போன்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.”

“நீங்களும்தானே அந்தக் கூட்டணியில் இருந்தீர்கள்?”

“எங்களை போன்ற சிறு இயக்கங்களுக்கு வேறு வாய்ப்பு என்ன இருந்ததென சொல்லுங்கள். இப்போதுதான் நாங்கள் விரும்பிய மாற்றம் நடந்திருக்கிறது. அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐ.யூ.எம்.எல், மதிமுக என அத்தனை பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறோம். மக்களுக்கு நன்மை விளைவிக்கும் மாற்றத்தை ஆதரிப்பதில் என்ன பிரச்னை?”

“ஆட்சியமைந்து 40 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக ரொம்பவே அதீதமாக தவெக ஆட்சியை மதிப்பிடுவதை போல இருக்கிறதே?”

“மக்கள் ஊழலால் வெறுத்து போயிருந்தனர். இந்த 40 நாட்களில் நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா? நீங்களே வெளியே போய் தனியார் பள்ளி உரிமையாளர்களை கேளுங்கள். பத்திரப்பதிவு அலுவலங்களுக்கு செல்பவர்களை கேளுங்கள். உங்களுக்கே உண்மை புரியும். இது நல்ல மாற்றம். இது நீடிக்குமா நீடிக்காதா என்பதை பற்றியெல்லாம் இப்போதே பேச வேண்டிய தேவை இல்லை. இந்த மாற்றம் அப்படியே தொடரும் என்றே நம்புகிறேன்.”

“நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?”

“ஊழலற்ற மக்கள் விரும்பும் நல்லாட்சியை கொடுக்கிறீர்கள் என முதல்வரை அத்தனை கட்சியினரும் ஒருமித்தமாக பாராட்டினோம். இதே நிலை தொடர வேண்டும் என்றோம். அவரும் கடைசி வரை மதச்சார்பற்ற சமூகநீதி என்கிற விஷயத்தில் உறுதியாக நிற்பேன் நம்பிக்கையோடு கூறினார். நல்ல புரிதல்மிக்க கூட்டமாக நடந்து முடிந்திருக்கிறது.”

“மதச்சார்பின்மை, சமூகநீதி எல்லாம் சரிதான். ஆனால், மாநில சுயாட்சி, மாநில உரிமை விவகாரத்தில் தவெக அரசு சறுக்க தொடங்கியிருக்கிறதே. பல மாநிலங்கள் எதிர்க்கும் VBG – RAM – G திட்டத்தை அமல்படுத்திவிட்டார்களே?”

“வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. நானே அந்த மசோதாவை எதிர்த்து பேசியிருக்கிறேன். மாநிலங்கள் இந்த திட்டத்துக்காக 40% நிதியை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. ஆனால், அதற்காக முரண்டு பிடித்து கொண்டு நின்றால் அவர்கள் தருகிற நிதியையும் தரமாட்டார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாகும்? அதையெல்லாம் மனதில் வைத்துதான் அந்த திட்டத்தை தவெக அரசு அமல்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மட்டுமில்லை மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் கூட்டணியாக ஒன்றாக நின்று எதிர்ப்போம்.”


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு: என்ன காரணம்? – இந்திய பெட்ரோலை வாங்குகிறதா ரஷ்யா?

சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்...

`ஹார்ட்டின் இட்லி, மட்டன் பிரியாணி, பீட்ரூட் அல்வா' – தவெக 'இணைப்பு விழா'வில் காலை, மதிய மெனு லிஸ்ட்! | Live Updates

சாத்தூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ விலகல்! சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாநில அம்மா...

VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும்…' – துரை வைகோ

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து...