15
April, 2026

A News 365Times Venture

15
Wednesday
April, 2026

A News 365Times Venture

`தென்மாநிலங்களின் உரிமைக்கே உலையா?' – தொகுதி மறுவரையறை: அவசியமா… ஆபத்தா?

Date:

மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு எதிர்க்கட்சிகளுக்கு விடுத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, தொகுதி மறுவரையறைப் பணியையும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, தொகுதி மறுவரையறை திட்டம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், `தொகுதி மறுவரையறையை அமல்படுத்தினால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும்.

ஸ்டாலின்

அதன் விளைவை மத்திய அரசு எதிர்க்கொள்ளவேண்டியிருக்கும்’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டு விரிவாகப் பேசினோம்.

அவர், “பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது என்பது தற்போதைய சூழலிலேயே சாத்தியமான ஒன்றுதான். தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்பதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆனால், இதற்குப் பின்னால் ஓர் ஆழமான அரசியல் நோக்கம் மறைந்திருக்கிறது.

ஆளும் தரப்பிற்குப் பெரும் செல்வாக்குள்ள வடமாநிலங்களில், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தங்களது அதிகாரத்தை நிரந்தரமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையின் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, மக்கள் தொகை அதிகம் கொண்ட வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு, ஒட்டுமொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டு, அவை மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பிரிக்கப்பட்டால், வடமாநிலங்களில் மட்டுமே சுமார் 500 தொகுதிகள் வரை வந்துவிடும். ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும்.

அய்யநாதன்
அய்யநாதன்

இதன் மூலம், தென்மாநிலங்களின் ஆதரவே தேவையில்லாமல் வடமாநிலங்களை மட்டுமே வைத்து மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் நிலையை அவர்கள் அடையப் பார்க்கிறார்கள். தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முடியாததற்கு மற்றொரு முக்கியக் காரணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடுகளை இங்கு செய்ய முடியவில்லை.

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், முறைகேடுகள் செய்வது கடினமாக உள்ளது. ஆனால் வடமாநிலங்களில், வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் ‘படிவம் 17சி’ (Form 17C) போன்ற முக்கியமான ஆவணங்களைக் கூட கேட்டுப் பெறாத நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, வாக்குகளைத் தன்னிச்சையாக அதிகரித்து வெற்றி பெறுவது எளிதாக உள்ளது. இந்த அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை அவர்கள் தீவிரமாக முன்னெடுக்கிறார்கள்.

தேர்தல்
தேர்தல்

தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையின் அடிப்படையிலேயே அமையப்போவதால், கடந்த கால மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நாம் உற்றுநோக்க வேண்டும். 2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை உயர்வு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு Vs உத்தரப்பிரதேசம் குறிப்பாக, 1971-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் (1981, 1991, 2001, 2011 கணக்கெடுப்புகள் படி), உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் உயர்ந்து, கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவம் என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் அமையும்போது, இந்த அதீத வளர்ச்சி வடமாநிலங்களுக்குச் சாதகமாக மாறிவிடுகிறது. இதனால்தான் மத்திய அரசு இந்தத் தொகுதி மறுசீரமைப்பைத் தீவிரமாக வேகப்படுத்த முயல்கிறது. `அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்துவோம்’ என்று அவர்கள் கூறுவது வெறும் கண்துடைப்பு மற்றும் ஏமாற்று வேலை மட்டுமே. இதில் எந்தவிதமான தர்க்கரீதியான அடிப்படையும் இல்லை. ஆரம்பத்தில் இப்படிச் சொல்லி நம்மைச் சம்மதிக்க வைத்துவிட்டு, பின்னாளில் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது நாம் வஞ்சிக்கப்படுவோம்.

எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திச் சமூக முன்னேற்றத்தை அடைந்த தென்மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களது வலிமையான குரலை இழந்து வெறும் பார்வையாளர்களாக மட்டுமே எஞ்சியிருக்கும் சூழல் உருவாகும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தற்போது 207 தொகுதிகள் உள்ள வடமாநிலங்கள், மறுவரையறைக்குப் பின் 366 தொகுதிகளாக உயரும். இதன் விளைவாக, இந்திய அரசியலின் மையப்புள்ளி முற்றிலும் வடமாநிலங்களை நோக்கி நகர்ந்துவிடும்.

தென்மாநிலங்களின் ஆதரவே தேவையில்லாமல் மத்தியில் ஓர் அமைச்சரவை அமையும் சூழல் உருவானால், அது மிகப்பெரிய ஜனநாயகச் சரிவை ஏற்படுத்தும். தற்போதைய நிலையிலேயே தமிழ்நாடு 9 பைசா வரி செலுத்தினால், நமக்குத் திரும்பக் கிடைப்பது வெறும் 4 பைசாதான். ஆனால் பீகார் போன்ற மாநிலங்கள் 2 பைசா வரி செலுத்திவிட்டு 10 பைசாவைப் பெறுகின்றன. உத்தரப் பிரதேசம் 8 பைசா செலுத்திவிட்டு 16 பைசாவைப் பெறுகிறது.

இந்த விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்து பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அல்லது சீமான் எனத் தலைவர்கள் இன்று இருப்பார்கள், நாளை மாறலாம். ஆனால், தமிழ்நாடு என்பதும் அதன் நிலமும் மக்களும் நிரந்தரமானவர்கள்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இது ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவின் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா) வாழ்வுரிமைப் போராட்டம். மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, ஒரு கட்டத்தில் `மரியாதை இல்லாமல் நாம் ஏன் இருக்க வேண்டும்? தனியாகப் பிரிந்து சென்றால் நாம் இன்னும் சிறப்பாக வாழலாமே’ என்கிற எண்ணம் மக்களிடையே தோன்றும். இது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே வேட்டு வைக்கும் பிரிவினைவாதச் சிந்தனைகளுக்கு வித்திடும்.

அதேநேரம், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை ஒன்றிய ஆளும் தரப்பு முன்னெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர்களின் சித்தாந்தமே இந்தி மற்றும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி, அதன் மூலம் ‘இந்து ராஷ்டிரம்’ எனும் இலக்கை அடைவதே ஆகும். எனவே, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சமமான திட்டங்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது இயலாத ஒன்று. தென்னகத்தின் ஆற்றலையும் திறமையையும் ஒடுக்கும் இத்தகைய போக்கு நீடித்தால், அது தேசத்தின் அமைதிக்கே பெரும் சவாலாக முடியும்.” எனப் பேசினார்.

எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் `தொகுதி மறுவரையரை’ குறித்து தெரிவிக்கும் ஐயப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.க தரப்பில், தமிழ்நாடு பா.ஜ.க வழக்கறிஞர் அணித் தலைவர் குமரகுருவிடம் பேசினோம். அவர், “தொகுதி மறுவரையறை என்பது இப்போது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது 2001-ம் ஆண்டிலேயே வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணியில் இருந்த காலத்திலேயே எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவு. மக்கள் தொகைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விகிதாச்சாரம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, 2026-ம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அப்போதே தீர்மானிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அன்று உடன்பட்டுவிட்டு, இப்போது அதை எதிர்ப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

மக்கள் தொகை வளர்ச்சியும் நிர்வாகத் தேவையும்

தற்போதைய நிலவரப்படி, இந்தியா 150 கோடி மக்கள் தொகையை எட்டியுள்ளது. ஆனால், நாம் இப்போதும் 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவான 543 தொகுதிகளைக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்தி வருகிறோம். இதன் விளைவாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் தொகையை ஒருவரால் கவனிப்பது நிர்வாக ரீதியாகச் சாத்தியமில்லை. எனவே, தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதன் மூலம், ஒரு எம்பி-க்கு 15 முதல் 18 லட்சம் மக்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்து, நிர்வாகத்தைச் சீர்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

தமிழ்நாடு பா.ஜ.க வழக்கறிஞர் அணித் தலைவர் குமரகுரு

தி.மு.க-வின் பயமுறுத்தல் அரசியலும் பிம்பக் கட்டுமானமும்

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருக்காது என்பதாலேயே, முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை விவகாரத்தைக் கையில் எடுத்துப் பயமுறுத்தப்பார்க்கிறார். ‘பா.ஜ.க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்துத் தமிழ்நாட்டை வஞ்சிக்கப் பார்த்தது, நான்தான் தடுத்து நிறுத்தினேன்’ என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கவே இப்படிப் பேசுகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் உத்தரப் பிரதேசத்திற்கு 220 சீட்கள் வரும், தமிழ்நாட்டிற்கு 30 சீட்கள்தான் வரும் என்று பரப்பப்படும் தகவல்கள் தவறானவை. இது தேவையற்ற அச்சத்தை விதைக்கும் முயற்சி.

விகிதாச்சார அடிப்படையில் தொகுதி உயர்வு

முக்கியமாக, மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகள் பிரிக்கப்படாது என்பதை அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளனர். தொகுதிகள் ‘விகிதாச்சார அடிப்படையில்’ மட்டுமே அதிகரிக்கப்படும். அதாவது, ஒட்டுமொத்த தொகுதிகள் 543-லிருந்து 850-ஆக உயரும்போது, அனைத்து மாநிலங்களிலும் அதே சதவிகிதத்தில் தொகுதிகள் உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து 56 அல்லது 58 ஆக உயருமே தவிர, குறைய வாய்ப்பில்லை. அதேபோல் உத்தரப் பிரதேசத்திலும் இடங்கள் உயரும். இது சமமான வளர்ச்சியாகவே அமையும்.

கொள்கை முடிவில் மாற்றமில்லை

2026 என்பது வாஜ்பாய் காலத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட ஓர் இலக்கு. `அன்று அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதன் பின்விளைவுகள் தெரிகிறது’ என்று கூறுவது ஒரு நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரு மாநிலத்திற்காக மட்டும் தேசிய அளவில் எடுக்கப்பட்ட பாலிசி முடிவை மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றினால், மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களும் கேள்வி எழுப்பும். எனவே, இது ஒரு முறையான நிர்வாக நடவடிக்கை மட்டுமே; இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் பறிக்கப்படாது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நேரமிருந்தும் பிரச்னைகளை பேச மறுத்த விஜய்; ஏமாற்றமடைந்த தவெக தொண்டர்கள்!' – என்ன நடந்தது?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தி.நகர் தொடங்கி...

Delimitation: "அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இபிஎஸ் என்ன ஒலிபெருக்கியா?" – ப.சிதம்பரம் கேள்வி

கோவை தனியார் ஹோட்டலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச்...

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது…'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,...