திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ‘தீபத்தூண்’ பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் 17 பக்கங்கள் கொண்ட விரிவான ஆரம்பகட்ட நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
நவம்பர் 20 முதல் நவம்பர் 24, 2026 வரை நடைபெற்ற அனைத்து ஆலோசனைக் கூட்டங்கள், கடிதப் பரிமாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், உயர் நீதிமன்ற விசாரணை, தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தீர்மானம் மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கான காரணங்கள் ஆகியவை இந்த அறிக்கையில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 20, 2026: முதல் ஆலோசனைக் கூட்டம்…
உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, அது இணையத்தில் பதிவேற்றப்படுவதற்கு முன்பாகவே, நவம்பர் 20-ஆம் தேதி மாலை வருவாய்த் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உத்திகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நவம்பர் 21, 2026: கடிதம் மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம்…
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், நவம்பர் 21-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தகவல் மற்றும் மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கும் கோயில் செயல் அலுவலருக்கும் அனுப்பி வைத்தார்.
அதே நாள் இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகரக் காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவு ஒவ்வொரு பத்தியாக விளக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
நவம்பர் 24, 2026 அன்று மாலை 6.00 மணி முதல் 6.30 மணிக்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்களுக்கு மிகாத குழுவினரால் தீபம் ஏற்றப்பட வேண்டும். வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறை ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். கோயில் வழக்கப்படி தீபம் ஏற்றும் முறையைச் செயல் அலுவலர் முடிவு செய்ய வேண்டும். மத்திய ரிசர்வ் காவல் படை தேவையில்லை என்றும், பாதுகாப்புத் திட்டம் தயாராக உள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார். ஒவ்வொரு துறைக்கும் செயல் திட்டங்கள் மற்றும் அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. காலக்கெடுவுக்குள் அறிக்கை அளிக்கத் தவறினால், அது அரசுக்கும் உச்ச நீதிமன்ற இணக்க அறிக்கையிலும் தெரிவிக்கப்படும் எனக் கூட்டக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்காததால், நவம்பர் 22-ஆம் தேதி அவர்களுடன் கூடுதல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 22, 2026: மின்னஞ்சல்கள், கோயில் நிர்வாக முன்மொழிவு மற்றும் பாதுகாப்புத் திட்டம் நவம்பர் 22-ஆம் தேதி பல முக்கியக் கடிதப் பரிமாற்றங்களும், மூன்றாவது ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடைபெற்றன:
மின்னஞ்சல் கடிதங்கள்: தேவஸ்தானத்திற்கும், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கும் அனுப்பப்பட்ட முதல் கடிதத்தில், அங்கீகரிக்கப்பட்ட குழுவினரால் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. இரண்டாவது கடிதத்தில், கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு ஆணையரின் தலையீடு கோரப்பட்டது. இவ்விரு கடிதங்களின் நகல்களும் இரவு 7.28 மணிக்கு அரசுச் செயலாளர் மற்றும் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.
கோயில் நிர்வாகத்தின் முன்மொழிவு:
இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சமர்ப்பித்த முன்மொழிவில், தூணுக்கு அருகிலுள்ள சமதளத்தில் இரும்பு அல்லது மரச் சாரம் அமைத்து, தூணைப் பாதுகாக்க ஈரமான சணல் சாக்குகள் மற்றும் ஈரக் களிமண் பரப்பி, அதன் மேல் மண் கலய விளக்கு வைத்து ஏற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியத் தொல்லியல் துறை கலந்தாலோசனையில் இம்முறை ஏற்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பழனியாண்டவர் கோயில் அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை தற்காலிக மின் விளக்குகள் அமைத்தல், நவம்பர் 24 காலை 6.00 மணிக்கு 27 பேர் கொண்ட முன்னேற்பாட்டுக் குழு (திருவண்ணாமலையைச் சேர்ந்த 2 தீபத் தொழில்நுட்ப வல்லுநர்கள், 10 மின் பணியாளர்கள், 15 சாரம் அமைக்கும் பணியாளர்கள்) மலைக்குச் செல்லுதல், பிற்பகல் 2.00 மணிக்கு இரண்டு கோயில் ஸ்தானீகர்கள், அறங்காவலர் குழுத் தலைவர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர் (திருவிழாப் பிரிவு), தொழில்நுட்ப உதவியாளர், பேஷ்கார், அலுவலக உதவியாளர் மற்றும் இரண்டு தீபத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய 10 பேர் கொண்ட குழு செல்லுதல் ஆகியவை திட்டமிடப்பட்டிருந்தன. கருவறையில் பாலதீபம் ஏற்றப்பட்ட பிறகு மாலை 6.00 மணிக்குத் தூணில் தீபம் ஏற்றி 6.30 மணிக்குள் நிறைவு செய்தல், நிகழ்ச்சிக்குப் பின் பொருட்களை அகற்றுதல் மற்றும் அவசர மருத்துவக் குழு ஏற்பாடு ஆகியவையும் இதில் அடங்கும். இருப்பினும், இக்கடிதத்துடன் தேவஸ்தானத்தால் நபர்கள் அங்கீகரிக்கப்பட்டதற்கான எந்த ஆவணமும் இணைக்கப்படவில்லை.
காவல் துறை பாதுகாப்புத் திட்டம்: ‘திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பாதுகாப்புத் திட்டம்’ காவல் துறையால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி தீபத்தூண், தர்கா, காசி விஸ்வநாதர் கோயில், நெல்லித்தோப்பு, மோட்ச தீபம் சந்திப்பு, பழனியாண்டவர் மற்றும் காசி விஸ்வநாதர் படிகள், மலைப் பாதைகள், அடிவாரம் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் 11 துணை ஆணையர்கள், 61 உதவி ஆணையர்கள், 130 காவல் ஆய்வாளர்கள் உட்பட ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த மொத்தம் 5,797 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். 20 இடங்களில் செயல் நடுவர்களும், மலையிலும் அடிவாரத்திலும் மருத்துவக் குழுக்களும் நியமிக்கப்பட்டன. கோயில் சரக உதவி ஆணையர் காவல் பார்வையாளராகவும், இந்தியத் தொல்லியல் துறை சார்பில் 4 அதிகாரிகள் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மூன்றாவது கூட்டம்: பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை காவல் ஆணையர், மதுரை தெற்கு காவல் துணை ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர்/செயல் அலுவலர், திருச்சி வட்ட இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் 3 அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்ற மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.

நவம்பர் 23, 2026: தடை உத்தரவு பிறப்பிப்பு: பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டத் தீயணைப்பு அலுவலர் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் திரள்வதற்கும், போராட்டங்கள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163-ன் கீழ் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி நவம்பர் 23 இரவு 9.00 மணி முதல் நவம்பர் 25 காலை 10.00 மணி வரை கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும், எவரும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறவும் தடை விதிக்கப்பட்டது. அதே சமயம், மதச் சடங்குகளின் போது நடக்கும் கூட்டம் அல்லது ஊர்வலம், கோயில் நிர்வாகம் அங்கீகரித்த பணியாளர்கள் நடத்தும் திருவிழா நிகழ்வுகள், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மற்றும் தர்கா உள்ளிட்ட பிற மத நிறுவனங்களின் வழக்கமான சட்டப்பூர்வ வழிபாடுகளுக்கு இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
நவம்பர் 24, 2026: திருவிழா நாள் நிகழ்வுகள் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு: காலை 9.30 – 12.30: காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய ஆட்சியர், காவல் ஆணையருடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையில் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். வருவாய், காவல், இந்தியத் தொல்லியல் துறை பார்வையாளர்கள், செயல் நடுவர்கள் மற்றும் தீயணைப்புக் குழுவினர் பணியில் இருப்பதை உறுதி செய்ததுடன், மாவட்ட வருவாய் அலுவலரை நாள் முழுவதும் அங்கிருக்க நியமித்தார்.
காலை 10.08: முன்னேற்பாட்டுக் குழு இன்னும் மலைக்குச் செல்லாததால், உடனடியாகக் குழுவை அனுப்புமாறும், தாமதத்திற்கான எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறும் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர்/செயல் அலுவலருக்கு ஆட்சியர் மின்னஞ்சல் அனுப்பினார். காலை 11.30: தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்களுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின்னரே முன்னேற்பாட்டுப் பணிகளும் தீபம் ஏற்றும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் செயல் அலுவலர் தரப்பில் இரு கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.15 – 3.30: உயர் நீதிமன்ற விசாரணையில் ஆட்சியர் ஆஜரானார். இதற்கிடையே பிற்பகல் 3.00 மணிக்கு, அனைத்துப் பார்வையாளர்களும், பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழுவினரும் மலையில் தங்கள் இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், சட்டம்-ஒழுங்கு இயல்பாக உள்ளதாகவும் வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை அளித்தார். பிற்பகல் 3.47: தேவஸ்தான அங்கீகாரம் இன்னும் வராததால், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய ஒப்புதலை உடனடியாக வழங்குமாறு ஆட்சியர் நினைவூட்டல் கடிதம் அனுப்பினார். மாலை 4.00 – 4.45 (உயர் நீதிமன்றத் தீர்ப்பு): காணொளி காட்சி மூலம் ஆட்சியர் பங்கேற்ற விசாரணையில், மாலை 4.30 மணியளவில் உயர் நீதிமன்றம் பொது உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி நடப்பதாக ஆட்சியர் அளித்த வாக்குறுதியைப் பதிவு செய்த நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 144-ன் கீழ் ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பொறுப்பானவர் எனத் தெரிவித்தது. மறுஆய்வு மனு நிலுவையில் இருப்பது உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பதற்கான காரணம் அல்ல என்றும், ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் உத்தரவை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறியது. மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்லவோ அல்லது கீழிருந்து தீப தரிசனம் காணவோ தடை உத்தரவைப் பயன்படுத்தக் கூடாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கத் தடை விதித்தும் உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தது. மாலை 5.03: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், எவ்வித நிர்வாகத் தடைகளும் இன்றி உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட குழுவுடன் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறும் ஒருங்கிணைப்பு அதிகாரி என்ற முறையில் ஆட்சியர் மின்னஞ்சல் அனுப்பினார். மாலை 6.00 – 6.30: நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தக் குழுவும் வரவில்லை; நேர நீட்டிப்பும் கோரப்படவில்லை. இரவு 7.32 – 8.30: இரவு 7.32 மணிக்கு கோயிலின் செய்திக்குறிப்பு வெளியானது. ஆட்சியர் தொடர்பு கொண்டபோது, அறங்காவலர் குழுவின் தீர்மானத்தால் தன்னால் முன்னேற இயலவில்லை எனச் செயல் அலுவலர் தெரிவித்தார்.
இரவு 8.21 மணிக்கு இத்தகவல் ஒருங்கிணைப்பு வழக்கறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்குச் செயல் அலுவலர் அளித்த அறிக்கையில், அறங்காவலர் குழுவின் தீர்மானப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டதாகவும், அதன்படி மாலை 6.00 மணிக்கு உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டதாகவும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. தேவஸ்தானம் அங்கீகரிக்கும் நபர்களுக்குப் பதிலாக வேறு யாரையும் அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திற்கு இல்லை என்பதையும் ஆட்சியரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அறங்காவலர் குழுத் தீர்மானம் எண். 1-ன் முக்கிய அம்சங்கள்… நவம்பர் 24-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அறங்காவலர் குழுத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் பழமையான வழிபாட்டுத் தலமாகும். இதன் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் மத மரபுகள் மற்றும் ஆகம விதிகளின்படியே நடத்தப்படுகின்றன. தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் வழக்கப்படி, கார்த்திகை மகா தீபம் மூலவரின் தலைக்கு நேர் மேலே மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் ஏற்றப்படுகிறது.
இத்தகைய மரபுகள் கோயிலின் தனித்துவமான மத அடையாளமாகும். வரலாற்றுத் தொடர்ச்சி ஆவணங்கள், ஆகமச் சான்றுகள் மற்றும் ஸ்தானீகர்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றுவது என்றும், பின்னர் கோயில் மரபுகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது என்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தின்படியே மாலை 6.00 மணிக்கு உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான எந்த நபர் அங்கீகாரத்தையும் தேவஸ்தானம் எந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சியரின் இறுதிச் சமர்ப்பிப்பு மற்றும் வருத்தம்: நவம்பர் 20 மாலை முதல் நவம்பர் 24 மாலை வரை தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு உட்பட்டுத் தொடர்ந்து நல்லெண்ணத்துடன் செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறும் நோக்கம் தமக்கு எதுவும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளின் மீது மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதாகவும், நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவுக்கும் இணங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தையும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதையும் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்தபோதிலும், அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்ததால் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு மாவட்ட ஆட்சியர் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், துணை ஆவணங்களுடன் கூடுதல் நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், இந்த ஆரம்பகட்ட அறிக்கையைப் பதிவில் ஏற்குமாறும் அவர் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.




