சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை எதிர்க்கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக தவெக பக்கம் சாய்ந்தது தொடங்கி பல்வேறு நிகழ்வுகளை தி.மு.க எதிர்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க முதன்மைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான ஆர்.எஸ். பாரதி அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நடந்து முடிந்த இந்தத் தேர்தல் யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை அடையாளம் காட்டுவதற்கும், எனது கண்களைத் திறப்பதற்கும் ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது.
ஒரு கட்சியின் பெயரையும், அதன் தொண்டர்களின் உழைப்பையும் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, வெறும் பத்தே நாட்களுக்குள் பேச்சை மாற்றுவது கேவலமான அரசியல். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களே மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இதற்கான அரசியல் மாற்றம் விரைவில் வரும்.
இந்தத் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. எந்தவொரு ஊடகமோ அல்லது பத்திரிகையாளரோ கணிக்காத வகையில் நடிகர் விஜய் அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார்.
எப்படியோ இந்த அதிசயம் நடந்துவிட்டது. ஆனால், இந்த அரசியல் அதிசயத்தைக் கண்டு பயந்து, அதற்குச் சில பலவீனமானவர்கள் பலியாகி வருகிறார்கள். கொள்கையில் உறுதியானவர்கள் இப்போதும் தி.மு.க கூட்டணியில் உறுதியாகவே நீடிக்கிறார்கள். மேலும், தேர்தல் முடிந்து 20 நாட்களுக்குள், ஒரு பட்ஜெட் கூட தாக்கல் செய்யாத சூழலில், திடீரென கட்சிகள் மனமாற்றம் அடைவதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய சக்தி வேலை செய்கிறது.

தேர்தல் முடிவடைந்தவுடன் வைகோ பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப் போவதாகக் கூறுகிறார். இதைக் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே செய்திருந்தால், தி.மு.க-வினர் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பார்கள். தேர்தல் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது வீரம் காட்டுவது சந்தர்ப்பவாதமே. மேலும், சிபிஎம் தலைவர் சண்முகத்தின் அறிக்கையை படித்தேன். கடந்த காலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமுறை கூட்டணி வைத்து, ராஜ்யசபா எம்பி பதவிகளைப் பெற்றுள்ளன என்பதை நாம் மறந்திருக்கமாட்டோம்.
தி.மு.க – அ.தி.மு.க ஒரே நேர்கோட்டில் சட்டசபையில் அமர்ந்திருக்கிறோம். காலப்போக்கு எங்களை அப்படி அமர வைத்துள்ளது. கொள்கை ரீதியாக எங்களுக்குப் ‘பகையாளி’ என்பது பாஜக ஒன்று மட்டும்தான். அ.தி.மு.க என்பது எங்களை விட்டுப் பிரிந்து சென்ற ஒரு ‘பங்காளி’ போன்றது. 1964-ல் பிரிந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் எப்படி ஒன்று சேர்ந்தனவோ, அதுபோல திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சில கருத்துக்களில் ஒத்துப்போவதோ அல்லது கைகோர்ப்பதோ ஒன்றும் ‘உலக மகா தப்பு’ கிடையாது. பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் வழியிலான திராவிட பாரம்பரியத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு இப்போது அ.தி.மு.க தொண்டர்களே வரத் தொடங்கிவிட்டனர்.
தி.மு.க-வின் பலமே அதன் ஒத்த கருத்துடைய கூட்டணிக் கட்சிகள்தான். கூட்டணிக் கட்சிகளின் உண்மையான பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். இருப்பினும், கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகவே எத்தனையோ சலசலப்புகளைத் தாங்கிக்கொண்டு தி.மு.க அவர்களை அரவணைத்துச் சென்றது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என யாருமே ஒரே கூட்டணியைத் தொடர்ந்து தக்க வைத்ததில்லை.
ஆனால், கடந்த ஐந்து தேர்தல்களாகக் கூட்டணியைச் சிதறாமல் பாதுகாத்து வழிநடத்திய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பதவிக்காகப் பாய்ந்து ஓடுபவர்களைப் பற்றி தி.மு.க கவலைப்படாது. கடந்த 76 ஆண்டுகாலமாக இதுபோன்ற எத்தனையோ துரோகங்களையும் மாற்றங்களையும் பார்த்துப் பழகிய இயக்கம் தி.மு.க. தொண்டர்களும் தலைவர்களும் எஃகு கோட்டையாகத் தலைவர் ஸ்டாலினுக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார்கள்” என்றார்.




