தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அரசாணை இல்லாமல் தவெக நிர்வாகிகள் நீரை திறந்து விட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சோத்துபாறை அணையில் நீர் திறக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகாமலும், அரசாணை இல்லாமலும் தேனி மாவட்ட தவெக வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக சேர்த்துப்பாறை அணையில் இருந்து நீரை திறந்து விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். இது சர்ச்சையாகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.
இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட Late ஆகும் என்பதாலோ என்னமோ, Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர். கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.
இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”! ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல.
அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம். சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல! தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




