23
October, 2026

A News 365Times Venture

23
Friday
October, 2026

A News 365Times Venture

தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு புத்துயிரூட்டிய தொல்லியல் துறை!

Date:

காலம் எத்தனையோ வேகமான மாற்றங்களைச் சந்தித்தாலும், நமது முன்னோர்களின் பண்பாட்டுப் பெருமைகளையும் ஞானத்தையும் தன்னுள் தாங்கி நிற்கும் ஏடுகள் அழியாமல் காக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டியில், நகரத்தார் சமூக மக்கள் பல தலைமுறைகளாகத் தங்கள் வீடுகளில் பூஜித்து, பொக்கிஷமாக இராமாயணம், மகாபாரதம் போன்ற பழங்கால ஓலைச்சுவடிகளைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது அவை தமிழகத் தொல்லியல் துறையின் ‘மாநிலச் சுவடியியல் குழுமம்’ மூலமாக வெற்றிகரமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுப் புதுவாழ்வு பெற்றுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் நகரத்தார் சமூக மக்கள் வாழும் நச்சாந்துப்பட்டி, அரிமளம், கடியாபட்டி, ராயவரம், பொன்னமராவதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமையான ஓலைச்சுவடிகள் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சிதிலமடைந்த சுவடிகள்

நச்சாந்துப்பட்டியைச் சேர்ந்த சாமியாடிச் செட்டியார், கும்மஞ்செட்டியார் மற்றும் பெ.ராம செட்டியார் ஆகிய பாரம்பர்யமிக்க 3 குடும்பத்தினரின் வீடுகளில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் திருவிளையாடற்புராணம் ஆகிய காவியங்களின் கதைகள் ஓலைச்சுவடிகளாக இருந்துவந்துள்ளன.

இதில் குறிப்பிட்ட சில சுவடிகள் மட்டும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நூல் வடிவத்திற்கும் மாற்றப்பட்டிருந்தன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் இந்தப் புனித ஏடுகளைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து, சுவடிகள் கரையான் மற்றும் பூச்சிகளால் சேதமடையாமல் இருக்க எலுமிச்சைப் புல் எண்ணெய் (Lemon Grass Oil) பூசிப் பராமரித்து வந்தனர். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடிச் சுவடிகளில் உள்ள ராமாயணப் பாடல்களை வாசித்து ஆன்மிக இன்பம் காண்பதை அவர்கள் ஒரு வாழ்வியல் வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

சுவடிகள்

சுவடிகளுக்கு மறுவாழ்வு தந்த தொல்லியல் துறை!

முறையான அறிவியல் பாதுகாப்பு இல்லாததால் அழியும் நிலையில் இருந்த இந்த அரிய சுவடிகள் காலத்தின் ஓட்டத்தில் அழிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தமிழகத் தொல்லியல் துறை, தகவல் அறிந்து இவற்றை டிஜிட்டல் மயமாக்கும் வரலாற்றுப் பணியைக் கையில் எடுத்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நச்சாந்துப்பட்டியில் தொடங்கப்பட்ட இந்தப் பாதுகாப்புப் பணியில், சென்னையிலிருந்து வந்த சுவடியியல் நிபுணர்கள் குழுவினர் ஏடுகள் ஒவ்வொன்றையும் தூசு தட்டிச் சுத்தம் செய்தனர். சுவடிகள் பூச்சிகளால் சேதமடையாமல் இருக்க எலுமிச்சைப் புல் எண்ணெயைப் பூசி, பின்னர் உயர் ரக கேமராக்கள் மூலம் துல்லியமாகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

சுவடிகள் பாதுகாப்பு களப்பணி

ஓராண்டாக நடைபெற்ற இந்த நுட்பமான பணியின் மூலம் இராமாயணம்-19 கட்டுகள் – 7,266 பக்கங்கள், மகாபாரதம் : 5 கட்டுகள் – 4,812 பக்கங்கள் ஆக மொத்தம் – 12,078 பக்கங்கள். ஓர் ஏட்டுக்கு இரண்டு பக்கங்கள். ஆக ஏடுகள் கணக்கெடுப்பின்படி மொத்தம் 6039 ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சுவடிகளின் பிரதி மற்றும் பென் டிரைவ் (Pen Drive) வடிவத்தை, தமிழக அரசின் தொல்லியல் துறையின் சுவடியியல் குழும மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ. சசிகலா, சாமியாடிச் செட்டியார் வாரிசு குடும்பத்தினரிடம் அண்மையில் முறைப்படி ஒப்படைத்துச் சிறப்பித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் சுவடிப் பாதுகாப்புப் பணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சவால் நிறைந்த சாதனைப் பணி…!

இந்த அரிய பொக்கிஷமான ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அதைப் பாதுகாத்து டிஜிட்டல் வடிவமாக்கிய தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மாநிலச் சுவடியியல் குழுமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ. சசிகலாவிடம் இதுபற்றிப் பேசினோம்.

சுவடிகள் பாதுகாப்பு களப்பணி

“தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் 2019-ஆம் ஆண்டு அரசாணையின்படி ‘மாநிலச் சுவடியியல் குழுமம்’ உருவாக்கப்பட்டது. தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று ஆர்க்கியாலஜிஸ்டாகப் பணியாற்றும் எனக்கு, கல்வெட்டுகளையும் பழைய கோயில்களையும் தேடிச் செல்வது எத்தகைய சிலிர்ப்பைத் தருமோ, அதே போன்றதொரு வரலாற்றுப் பணியாகத்தான் இந்தச் சுவடித் தேடலும் அமைந்துள்ளது.

எங்களது தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கினாலும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் கோவை என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 15 பேர் கொண்ட எங்களது நிபுணர் குழுவினர் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து கள ஆய்வு செய்து வருகிறோம். இதில் ‘மதுரை மண்டல’த்தில்தான் அதிகமான ஓலைச்சுவடிப் பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சுவடிகள்

கிராமப்புறங்களில் குறிப்பாக ஊருக்கு இரண்டு சிவனடியார்கள் அல்லது ஜோதிடர்கள் வீடுகளில் இது போன்ற சுவடிகள் பொக்கிஷமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. நச்சாந்துப்பட்டியில் நகரத்தார் குடும்பங்கள் ஒரு கூடைக்குள் வைத்துப் பாதுகாத்து வந்த அந்த ராமாயண ஏடுகளை நாங்கள் முதன்முதலில் பார்வையிட்டபோது, அவை காலத்தின் கோலத்தால் தூளாக உதிர்ந்துபோகும் மிக மோசமான நிலையில் இருந்தன; ஆனால், இன்று அதே சுவடிகளுக்கு உரிய அறிவியல் முறையான ‘கன்சர்வேஷன்’ மற்றும் மின்னூக்கம் (Digitization) செய்துள்ளோம். அவற்றை புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரியவர்கள் பூஜித்து வாசிக்கும் முகத்தில் தெரியும் அந்த நிம்மதியும் பெருமிதமும்தான் எங்களது உழைப்புக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும்.

இந்தப் பணியில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமாக இல்லை. பல்லாண்டுகளைக் கடந்துவிட்டதால் சுவடிகள் பூச்சிகளாலும், ‘ராமபாணம்’ உள்ளிட்ட பலவகைப் பூஞ்சைகளாலும் அரிக்கப்பட்டுப்போய் சிதிலமடைந்து கிடக்கின்றன. அதையெல்லாம் மீட்டுக்கொண்டு வருவது ஒரு பெரும் தவம் போன்றது. அதைவிடப் பெரிய சவால், மக்களிடம் இருக்கும் பயமும் விழிப்புணர்வற்ற தன்மையும் ஆகும். பலரும், ‘அரசு வந்து இதைப் பிடுங்கிட்டுப் போயிரும்’ என்றோ அல்லது ‘டிஜிட்டல் செய்தால் எங்களது பரம்பரைச் சொத்து எங்களை விட்டுப் போய்விடும்’ என்றோ தவறான அச்சத்தில் உடனடியாகத் தர முன்வருவதில்லை.

சில வியாபார நோக்கம்கொண்ட கும்பல்களோ, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் குறைந்த விலை கொடுத்து அந்தப் பொக்கிஷங்களை ஏமாற்றி வாங்கிச் செல்லும் அவலமும் நடக்கிறது. அதனால்தான் மக்களிடம் பலமுறை நேரில் பேசி, ‘இது உங்கள் பரம்பரைச் சொத்து; இதை இழந்துவிடாதீர்கள், அரசு உங்களிடமிருந்து அதைப் பறித்துக்கொள்ளாது, மாறாக உங்களுடைய வீட்டிலேயே அதைப் பாதுகாத்து உங்கள் கைகளிலேயே ஒப்படைக்கும்’ என்று ஆழமாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

புலவர் கு.ம.திருப்பதி

தமிழகத்தின் எந்த மூலையில், எந்தக் கிராமத்தில் உங்களது வீடுகளிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீடுகளிலோ பழைமையான ஓலைச்சுவடிகள் (அது ஒரு கட்டாக இருந்தாலும் சரி, அல்லது ஐந்து சுவடிகள் மட்டுமே இருந்தாலும் சரி) இருந்தால், தயவுசெய்து அவற்றை அப்புறப்படுத்தவோ அல்லது அந்நியர்களிடம் கொடுத்து ஏமாறவோ வேண்டாம். தனியார் நபர்களோ அல்லது இடைத்தரகர்களோ டிஜிட்டல் செய்து தருவதாகக் கூறி அணுகினால் எச்சரிக்கையாக இருங்கள். சுவடிகளின் பழைமை (Antiquity) மதிப்பை உணர்ந்து தவறான நபர்களிடம் சிக்கிவிடாதீர்கள். மாறாக, தமிழக அரசின் தொல்லியல் துறைச் சார்ந்த ‘மாநிலச் சுவடியியல் குழுமத்தை’த் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு அதன் பிரதியை பென் டிரைவ் வடிவில் சாமியாடி செட்டியார் வாரிசு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தல்

அரசு உங்கள் சொத்தைக் காக்க மட்டுமே கரம் கோக்கிறது; உங்களுக்கான பாதுகாப்பை வழங்கி, அதில் உள்ள அரிய வரலாற்றுச் செய்திகளையும் உங்களது பரம்பரை அடையாளமாக உங்களிடமே மீண்டும் சேர்ப்பிக்கும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட எங்களது அனைத்துச் சுவடிகளும் ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ (Tamil Virtual Academy) மற்றும் அரசு கீழ்திசை சுவடிகள் நூலகம் போன்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கங்கள் வழியாக இன்றைக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களின் பார்வைக்காகவும் எதிர்கால சந்ததியின் அறிவுச் சொத்தாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.”

நமது பாரம்பர்யம்… நம்மைக் காக்கும் பேராயுதம்!

இந்த டிஜிட்டல் பணி தொடங்க காரணமானவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற தமிழாசிரியர் புலவர் கு.ம. திருப்பதி நம்மிடம்,

“நமது தமிழ்ப் பாரம்பர்யத்தையும் இலக்கியச் செறிவையும் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் இந்த முயற்சிகளுக்குப் பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். வீடுகளில் பழைமையான சுவடிகள் வைத்துள்ளவர்கள் தயங்காமல் தொல்லியல் துறையிடம் வழங்கிப் பாதுகாக்க முன்வர வேண்டும். இது போன்ற அரிய பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

தமிழ்நாடு அரசு பாடத்திட்டக் குழுவில், பாடங்கள் தயாரிப்பு பணியில் நான் இருந்ததால் தொல்லியல் துறையின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர்கள் மூலம் இது சாத்தியமானது. கூழிபிறை மா.இளங்கோவும் இப்பணிக்கு உதவி செய்தார். நாங்கள்தான் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து இந்தப் பழம்பெரும் இலக்கியச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டுகோள் வைத்தோம். அதன்படி டிஜிட்டல் வடிவமாக்கி அதன் பிரதியை ஒப்படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் பெருமையுடன்.

பொதுமக்களிடம் ஓலைச்சுவடிகள் இருந்தால் அரசிடம் ஒப்படைக்க கீழ்கண்ட தொடர்பு எண்களிலோ முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் முனைவர் கோ. சசிகலா.

தொடர்பு முகவரி:

முனைவர் கோ. சசிகலா

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மாநிலச் சுவடியியல் குழுமம்,

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,

தமிழ் வளர்ச்சித் துறை வளாகம், தமிழ்ச் சாலை,

எழும்பூர், சென்னை – 600 008.

செல்: 8838173385, 9944035740.

சுவடிகளில் உறங்கிக் கிடந்த நம் முன்னோர்களின் ஞானமும் இலக்கியச் செறிவும், இப்போது டிஜிட்டல் வடிவில் இணையத்தின் வழியே என்றென்றும் அழியா வரம் பெற்றுள்ளது…!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained

இஸ்ரேலில் இதுவரை ஒரு கட்சி கூட தனியாக ஆட்சி அமைத்ததில்லை. காரணம்...

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ்

"பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து...

`Meta AI Glass அணிந்து என்னை பார்க்க வந்தார் அந்த நபர்…' – Sting Operation குறித்து DK சிவக்குமார்

கர்நாடகா அரசு மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடப்பதாக...

"பெண்களே, சிறுமிகளே… உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!"- எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த...