சென்னை மாநகராட்சியின் மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன?
சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களையும் 200 மாமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. இப்போது மாமன்றத்துக்கு 2027 ஆம் ஆண்டு வரை ஆட்சிக்காலம் இருக்கிறது. மேலும், இருக்கும் 200 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களே. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும் தோல்வி அடைந்திருந்தது. தனிப்பெரும் கட்சியாக வென்று தவெக ஆட்சியை அமைத்தது.
வழக்கமாக, ஆட்சியில் அமரும் முதல்வருக்கு சென்னை மாநகராட்சியின் மேயர் மரியாதை நிமித்தமாக வாழ்த்துகளை தெரிவிப்பார். ஜெயலலிதா முதல்வராக இருந்த அப்போது மேயர் பொறுப்பில் இருந்த ஸ்டாலினே அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியிருக்கிறார். ஆனால், இப்போதைய மேயர் பிரியா ஆட்சியமைக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்தவில்லை.
மேயர் பிரியாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டிருப்பதால் ஓய்வில் இருக்கிறார். அதனால்தான் அவர் முதல்வரை சந்திக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. காயமுற்றிருந்த மேயர் பிரியா இப்போது குணமடைந்திருக்கிறார். நேற்றிலிருந்து அலுவல் பணிகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில்தான், மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரத்தினர் மத்தியில் விசாரிக்கையில், ‘வழக்கமாக ஒவ்வொரு மாத இறுதியிலும் மாமன்ற கூட்டம் கூட்டப்படும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் பிரச்னைகளையும் தேவைகளையும் அவையில் முன்வைப்பார்கள். அதற்கான பதிலை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துவிட்டு மேயர் உடனடியாக அவையிலேயே தெரிவிப்பார்.
சாலை வசதி, கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் வசதி, கொசு ஒழிப்பு போன்ற மக்களின் அன்றாட அடிப்படை அத்தியாவசிய பிரச்னைகளை உறுப்பினர்கள் பேச மாமன்ற கூட்டம் கூடுவது அவசியம். ஆனால், இந்த முறை மாத கடைசி ஆகியும் மாமன்ற கூட்டத்துக்கான அஜெண்டா எதுவும் தயாரிக்கப்படவில்லை. எந்தத் துறை அதிகாரிகளுக்கும் மாமன்ற கூட்டத்துக்கு தயாராகும்படி உத்தரவும் செல்லவில்லை. இதனால் இந்த மாத கூட்டம் பெரும்பாலும் ரத்து செய்யப்படவே வாய்ப்பிருக்கிறது’ என்கின்றனர்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் துடிப்போடு செயல்பட வேண்டியது அவசியம். அரசியல் வேறுபாடுகளால் உள்ளாட்சி அமைப்பின் கூட்டங்கள் ரத்தாவது மக்களுக்கு நல்லதல்ல.!




