இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும் ‘இம்மோரல் டிராஃபிக் (தடுப்பு) சட்டம்’ நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தின் விதிகள் (குறிப்பாகப் பிரிவு 17) காவல் துறையினரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. சட்டவிரோத பாலியல் விடுதிகள் மீது காவல்துறை நடத்தும் சோதனைகளின்போது, கடத்தப்பட்டுத் துயரப்படும் பாதிக்கப்பட்ட பெண்களோடு சேர்த்து, சொந்த விருப்பத்தின் பேரில் அத்தொழிலில் ஈடுபடும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, புகார்கள் எழுந்தன.
இத்தகையச் சூழலில், தாங்களாகவே இத்தொழிலைத் தேர்ந்தெடுத்த வயது வந்த நபர்களின் உரிமையும், தனிமனித சுதந்திரமும் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரணை செய்தது. விசாரணையின் போது, ஐ.டி.பி.ஏ (ITPA) சட்டத்தின் 17-வது பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து நீதிபதிகள் கடும் கவலை தெரிவித்தனர்.
சோதனையின் போது அங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் கட்டாயமாக மீட்க வேண்டும் என்றோ அல்லது மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றோ அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டப்படியானது அல்ல என்றும், பாதிக்கப்பட்டவர்களையும் சொந்த விருப்பத்தில் செயல்படுபவர்களையும் பிரித்தறியும் தெளிவான நடைமுறை அதிகாரிகளிடம் இல்லை என்றும் விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

வழக்கை முழுமையாக ஆராய்ந்த நீதிபதிகள், தங்களது இறுதித் தீர்ப்பில், “சுயவிருப்பத்தின் பேரில் பாலினத் தொழிலில் ஈடுபடும் வயது வந்த நபர்களை, அவர்கள் அந்தத் தொழிலில் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகக் குற்றவாளிகளாகக் கருத முடியாது. கடத்தல் நெட்வொர்க்குகள் மற்றும் பாலியல் விடுதிகளை நடத்துவது போன்றவை சட்டப்படி குற்றமாகவே நீடிக்கும். ஆனால், வயது வந்த ஒருவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது இந்தியச் சட்டத்தின்படி குற்றமல்ல.
காவல்துறை சோதனைகளின் போது வயது வந்த பாலியல் தொழிலாளர்களைக் காவலில் எடுக்கவோ அல்லது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மறுவாழ்வு இல்லங்களில் கட்டாயப்படுத்தி அடைக்கவோ கூடாது. மேலும், சோதனைகளுக்குப் பிறகு மீட்கப்படும் நபர்கள் மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் போது, மாஜிஸ்திரேட்டுகள் கட்டாயம் ஒரு முதற்கட்ட விசாரணையை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த நபர் சொந்த விருப்பத்தில் இத்தொழிலில் ஈடுபடுகிறாரா, பாதுகாப்பு இல்லத்திற்குச் செல்ல விரும்புகிறாரா மற்றும் அவரது வாக்குமூலம் எவ்வித மிரட்டலோ, வெளிப்புறக் கட்டாயமோ இன்றி அளிக்கப்படுகிறதா என்பதை மாஜிஸ்திரேட்டுகள் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு நபரின் உயிருக்குத் தீவிர ஆபத்து இருக்கும் பட்சத்திலோ அல்லது கடத்தல்காரர்கள் அவர்களின் சம்மதத்தைக் கையாண்டு ஏமாற்றியதற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்திலோ மட்டுமே அவர்களின் விருப்பத்தை மாஜிஸ்திரேட்டுகள் நிராகரிக்க முடியும். அவ்வாறு நிராகரித்தால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும்.
சட்ட அமலாக்கத் துறையினரின் கவனம் மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டலை ஒடுக்குவதில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, சொந்த முடிவெடுக்கும் உரிமையுள்ள வயது வந்தோரின் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பதாக இருக்கக் கூடாது.” என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர்.




