23
July, 2026

A News 365Times Venture

23
Thursday
July, 2026

A News 365Times Venture

"சி.விஜயபாஸ்கர் – வியக்கிறேன்; வைகோ – பேசுவதற்கு ஒன்றுமில்லை!" – நாஞ்சில் சம்பத் 'நச்'

Date:

அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், ‘விஜய் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார் வைகோ!’ எனப் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். இந்தச் சூழலில், த.வெ.க அரசு மீதான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் விளக்கம் கேட்டு அவரிடம் பேசினோம்…

“த.வெ.க பொதுக்கூட்டத்தில், ‘விஜய் காலடியில் வைகோ வீழ்ந்து கிடப்பதாக பேசியுள்ளீர்களே…?”

“அந்தப் பேச்சையடுத்து, எனக்கு நிறைய மிரட்டல் அழைப்புகள் வந்தன. அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து என்னை வசைபாடி வருகின்றனர். அதற்குமேல் அதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை!”

“தமிழக முதல்வராக இளைஞர் ஒருவர் பொறுப்பேற்றிருப்பதை வரவேற்கிற நீங்கள், எதிர்க்கட்சித் தலைவராக ஓர் இளைஞர் வருவதை மட்டும் எதிர்க்கிறீர்களே ஏன்?”

“ஏன்… தி.மு.க-வில் அவரை விட்டால் வேறு இளைஞர் எவரும் இல்லையா? இன்றைக்கும் உதயநிதிக்கு எல்லாமுமாக இருக்கிற, கட்சிக்கு மூன்று முறை செங்கோல் பரிசளித்த ஜோயலுக்கு ஏன் ஒரு தொகுதியில் போட்டியிடக்கூட வாய்ப்பு கொடுக்கவில்லை? இப்படியிருந்தால், இளைஞர்கள் எப்படி உங்களுக்கு ஓட்டு போடுவார்கள்; வேலை செய்வார்கள்?”

வைகோ, விஜய்

“த.வெ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனரே?”

“இதைத்தான் தி.மு.க இன்றைக்கு பிரதானப்படுத்த நினைக்கிறது. ஆக, காவல் நிலையம் செய்யவேண்டிய ஒரு வேலையை, இன்றைக்கு தி.மு.க என்ற கட்சி செய்துகொண்டிருக்கிறது.

இப்போது நடப்பவை எல்லாம், கையாலாகாத கடந்தகால ஆட்சியின் மிச்சங்கள். பொறுப்பு டி.ஜி.பி-யை வைத்துக்கொண்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு முடியாத நிலையை நீங்களே திட்டமிட்டு உருவாக்கினீர்கள்.

ஆனால், இன்றைக்கு நாங்கள் புதிய டி.ஜி.பி-யை பணியமர்த்தியிருக்கிறோம். அவருடைய முதல் உத்தரவே ‘தமிழ்நாடு முழுவதும் காவல்துறை ரோந்து போகவேண்டும்’ என்பதுதான். அதன்படி காவல்துறை ரோந்து செல்கிறார்கள். எனவே, குற்றம் செய்பவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. ‘சிங்கப்பெண் படை’ அமைக்கப்பட்டுவிட்ட பிறகு, ‘பாதுகாப்புடன் இருக்கிறோம்’ என்ற உணர்வுக்கு தமிழகப் பெண்கள் வந்திருக்கிறார்கள்.”

“குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், த.வெ.க-வில் இணைந்திருக்கிறாரே… த.வெ.க-வின் ‘தூய சக்தி இமேஜ்’ இனி என்னவாகும்?”

“த.வெ.க-வுக்கு வாருங்கள் என நாங்களாக யாரிடமும் பேரம் பேசவில்லை. ‘இனிமேல் பாலைவனத்தில் பயணிக்க முடியாது’ என முடிவெடுத்து அவர்களே எங்களை நோக்கி வருகிறார்கள். எங்கள் தலைவரும் அவர்களை வாரி அணைத்துக்கொள்கிறார். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக தங்களை நிரூபித்துக்கொள்வார்கள்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

கட்சியைக் கட்டிக் காப்பாற்றிய விதம், கொரோனா பேரிடர் காலத்தைக் கையாண்ட விதம் உள்ளிட்ட விவகாரங்களில் பெரிய ஆளுமை கொண்டவர் விஜயபாஸ்கர். அவரைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவர் இன்றைக்கு இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அவருக்குள் எவ்வளவு பெரிய வலி இருந்திருக்க வேண்டும். யோசியுங்கள்!”

“கரூர் விவகாரத்தில், இறந்துபோன 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது என்பது, இந்த சம்பவம் குறித்தான வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே?”

“கரூர் துயரத்துக்குப் பிறகு மிகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் த.வெ.க தலைவர் விஜய். பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் செல்லவில்லை என்று அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். அந்தப் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காதது, அந்த இடத்தில் சடலமாக அவர்கள் ஆனதற்குப் பிறகு அந்த இடத்தை விட்டு அவர் சென்னைக்கு வந்ததெல்லாம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாயின.

அன்றைய சூழலில், பாதிக்கப்பட்ட இடத்தில் அவர் நின்றிருந்தால் தலைவரை உயிருக்கு உயிராய் நேசிக்கிறவர்கள் எட்டுத் திசையிலிருந்தும் ஓடோடி வந்து கரூரில் குவிந்திருப்பார்கள். கட்டுப்படுத்த முடியாத அளவிலான கூட்டம், கடல் தோற்கிற வகையில் அங்கே கூடியிருக்கும். அப்போது மீண்டும் ஒரு நெரிசல் ஏற்பட்டு, காவல்துறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானால், இந்த 41 என்ற எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருக்கும்.

நாஞ்சில் சம்பத்

இதை தொலை நோக்குப் பார்வையோடு உள்வாங்கிக்கொண்டதனால்தான் தலைவர் விஜய், அந்த இடத்தை விட்டு சென்னை திரும்பினார். ஆனால், இதையும் கடுமையாக விமர்சித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாக வந்து பார்க்க வேண்டுமென்று ஒரு கல்யாண மண்டபத்தில் அந்த 41 பேர் குடும்பத்தினரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால், எந்தக் கல்யாண மண்டபமும் எங்களுக்குத் தரப்படவில்லை. அதனால், பாதிக்கப்பட்டவர்களை வாகனங்களில் சென்னைக்கு வரவழைத்து அவர்களை சந்திப்பதற்கு முன்னாலேயே தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்களை விஜய் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை திரும்பத் திரும்ப சொன்னார்கள். இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து கையறுநிலையில் காலத்தால் கைவிடப்பட்ட அந்த கணவனை இழந்த, மனைவி இழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்திருப்பது, அந்தக் குடும்பத்திற்கு ஒரு நிவாரணமும் ‘நான் உங்களோடு இருக்கிறேன்’ என்பதை உலகுக்கு சொல்வதற்கு நடந்தது.

இதை வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களோடு ஒப்பிடுவதென்பது அறியாமை என்கிற அந்தகாரத்தில் இருக்கக்கூடியவர்களின் புலம்பலாகவே இதை நான் பார்க்கிறேன். இதைத் தலைவர் செய்ததின் மூலம் ஒரு காருண்யமும் கருணையும் நிறைந்த தலைவர் என்பதை விஜய் வெளிக்காட்டியிருக்கிறார்.”

” ‘அரசு நெய்யில் ஸ்வீட் செய்யலாமா?’ என்று கடந்தகாலத்தில் ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி கேட்ட விஜய், இன்றைக்கு அதே தவறைச் செய்யலாமா என்றும் கேட்கிறார்களே?”

“இல்லையில்லை… அதோடு இதை ஒப்பிடக் கூடாது. என்னைக்கேட்டால் இது தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம்.”

“கடந்த ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்களும் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்தான். ஆனால், அப்போதும் ‘சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமா’ என கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது ‘நடிகரைப் பார்க்கச் சென்று இறந்துபோனவர்களுக்கு நிவாரணமா’ என்று விமர்சிக்கிறார்களே?”

“கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோனவர்களுக்கும், கரூர் சம்பவத்தில் இறந்துபோனவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வந்தபோது நேர்ந்த விபத்துதான் அந்த சம்பவம். எனவே, நடிகரைப் பார்க்க வந்து இறந்துபோனவர்கள் என்று சொல்லக்கூடாது.

விஜய் கரூர் சம்பவம்

இந்த விபத்துக்குப் பின்னால் ஓர் அரசியலும் இருக்கிறது. முதல்வர் விஜய் இன்றைக்கு அந்த மக்களுக்கு செய்திருக்கும் உதவி என்பது, எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் அவரது நன்மதிப்பை உயர்த்தியிருக்கிறது.”

“முதல்வர் கையால் உதவியைப் பெற்றுக்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள், பிறழ் சாட்சிகளாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்களே?”

“அதற்கான வாய்ப்பே கிடையாது. நீதிமன்றம் கூறுகிற தீர்ப்புக்கு த.வெ.க-வும் அதன் தலைவரும் எப்போதுமே கட்டுப்படுவார்கள். ஆனால், இதை நீதிமன்றம் தடுத்து நிறுத்தும் என நான் நம்பவில்லை. ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி ஆணை கொடுக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கிலேயே, நீதிமன்றம் ‘முதல்வர் அரசுப் பணி ஆணை வழங்கத் தடையில்லை’ என ஏற்கெனவே உத்தரவிட்டுவிட்டது. உதவாமல் இருப்பவர்கள், உதவுகிறவனையும் விமர்சிப்பதென்பது ஒருவகையான வன்மம்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அந்த பெண்ணின் பின்னணி சந்தேகத்துக்குரியது; என்னை சிக்கவைக்க சதி நடக்கிறது’’ – தவெக மா.செ விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் அவர்...

”தவெக-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என நான் கூறவே இல்லை”- கடம்பூர் ராஜூ விளக்கம்!

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள்...

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" – திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...