பா.ம.க-வில் தந்தையும் மகனும் இணைந்துவிட்ட நிலையில், ‘ஜி.கே.மணி, சேலம் அருள் உள்ளிட்ட ஒரு சிலரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதில்லை’ எனத் தீர்மானமாக இருக்கிறாராம் அன்புமணி.
ராமதாஸுக்கு ஆதரவாக ம.க.ஸ்டாலின், திருக்கச்சூர் ஆறுமுகம், பேராசியர் தீரன் என பலர் நின்றபோதும் அன்புமணியைப் பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால், அருள் மிகக் காட்டமாக தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல், ராமதாஸின் திருமண விவகாரம் உள்ளிட்ட சில விஷயங்கள் வெளிவந்ததற்கும் அருள்தான் காரணம் என கோபத்தில் இருக்கிறாராம் அன்புமணி.
அதனால், பா.ம.கவில் மட்டுமல்ல, த.வெ.கவில் இணைய முயன்ற அருளின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறாராம். இதுநாள்வரை பொறுமை காத்த அருள், கடந்த ஜூலை 16-ம் தேதியன்று பா.ம.க அதிருப்தி நிர்வாகிகளை சேலத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
பிறகு, ‘அய்யா ராமதாஸை சந்திக்க முடியவில்லை’ என புது குண்டை வீசியிருக்கிறார்கள். அன்புமணிக்கு சிக்கல் கொடுக்கும் வேலையில் அருள் தலைமையிலான டீம் இறங்கவுள்ளனராம்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பை அடுத்த ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளி இளைஞரான இவரை விசாரணை கைதியாக நாகர்கோவில் சிறையில் அடைத்த நிலையில், கடந்த 13-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் சிறையில் சபரிவர்மன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். பிரேத பரிசோதனை முடிவில் 19 இடங்களில் அவருக்கு காயம் இருப்பது தெரியவரவே விவகாரம் பூதாகரமாகிவிட்டது.

‘லாக்கப் மரணம்’ என கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்களும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கொலை குற்றத்தை காவல்துறை விசாரித்தால் பல விவகாரங்கள் மூடி மறைக்கப்படும் என சந்தேகிக்கிறார்கள் உறவினர்கள். ஆகவே, உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு பணியிலிருந்து மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார் டி.ஐ.ஜி விக்ரமன். அவரை, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனராகவோ கிழக்கு இணை கமிஷனராகவோ பணியமர்த்த தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், சென்னையில் பணியாற்றும் ‘அயோத்தி’ கடவுள் பெயர் கொண்ட அதிகாரி அதற்கு முட்டுக்கட்டை போட்டதால், சி.பி.சி.ஐ.டி-யில் போஸ்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதன்காரணமாக சென்னை கிழக்கு இணை கமிஷனர் பதவி மாதக்கணக்கில் காலியாகவே இருக்கிறதாம்.
அதேபோல, பூட்டு மாவட்டத்தில் டி.ஐ.ஜி-யாக இருந்த ஒரு அதிகாரி மத்திய அரசு பணிக்கு வழி தேடுகிறாராம். இதற்கிடையில், ஆலோசனைக் கூட்டத்தின்போது எஸ்.பி ஒருவரை தரக்குறைவான வார்த்தைகளால் அவர் திட்டியதாக, ஒரு புகார் டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்திருக்கிறது. அதை விசாரிக்காமல், டி.ஐ.ஜி கேட்டுக்கொண்டபடி அவரை டெல்லிக்கு அனுப்ப க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்களாம். ‘தவறு செய்தால் தண்டனை கொடுக்காமல் கேட்டதை கொடுக்கிறார்களே…’ என புலம்புகிறார்கள் காக்கி அதிகாரிகள்.
த.வெ.கவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவர் கோவில்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர் சம்பத்குமார். இவர், சட்டமன்றத் தேர்தலிலேயே ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.பொருளாதார ரீதியான காரணங்களால் அவருக்கு சீட் வழங்கவில்லை கட்சித் தலைமை. ஆனால், சம்பத்குமாரால் கட்சியில் சேர்க்கப்பட்ட மதன்ராஜாவுக்கு சீட்டை ஒதுக்கியதோடு, அவர் அமைச்சராகவும் ஆகிவிட்டனர். இந்தநிலையில், முனைவர் பட்டம் பெற்றிருப்பதால் பாடநூல் கழகத் தலைவர் பொறுப்புக் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்திருக்கிறார் சம்பத்குமார்.

அதுவும் லயோலா மணிக்குக் கொடுத்துவிட, கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் சம்பத்குமார். ‘கட்சிக்காக எவ்வளவோ உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. லயோலா மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார். எனக்காகப் பரிந்துரை செய்ய யாருமில்லை, எனக்கு பொதுச் செயலாளரைத் தவிர யாரையும் தெரியாது…’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்படுகிறாராம்.
பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றிடம் 1000 ஸ்வீட் பாக்ஸுகளை கொடுத்து சிக்கிக் கொண்டார் தேனிக்காரர். அதனை ‘நாங்கள் மீட்டுத் தருகிறோம்’ என்று சொல்லிதான், அவருக்கு தூண்டில் போட்டு இழுத்துக்கொண்டது சூரியக் கட்சி. ஆனால், இதுவரை ஒரு பாக்ஸ்கூட திரும்பி வரவில்லை. இதனால் வெகுண்டெழுந்த அவரது வாரிசு, ‘நாம் ஆளும்கட்சிக்கு போய்விடலாம்… இங்கிருந்தால் கதைக்கு ஆகாது’ என அழுத்தியிருக்கிறார்.
கடைசி வாய்ப்பாக, சூரியக் கட்சித் தலைமையை அணுகி, ‘எனக்கொரு முடிவு சொல்லுங்க’ எனக் கேட்டிருக்கிறாராம் தேனிக்காரர். ஆனால், எந்த பதிலும் வரவில்லையாம். ‘சூரியக்கட்சியில் எதுவும் நடக்கவில்லையென்றால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சிக்கு போய்விடலாம். ஸ்வீட் பாக்ஸுகளை மீட்டுத் தரும் கட்சியில் இருப்போம்’ என தந்தையும் மகனும் முடிவெடுத்துவிட்டார்களாம்.!




