கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில், தற்போது 3 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளோம். வரும் தேர்தல்களில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் இந்த அரசு அமைந்தவுடன்தான் புதிதாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டதைப் போல செய்தி வெளியிடுகின்றன. உள்ளதை உள்ளபடி செய்திகளை மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.
தி.மு.க ஆட்சியில் 500 மதுக் கடைகள் குறைக்கப்பட்டன, அதற்கு முன்பு அதிமுக ஆட்சியிலும் மதுக் கடைகள் குறைக்கப்பட்டன. தற்போது பூரண முழு மதுவிலக்கைக் கொண்டு வந்ததைப் போல சொல்ல கூடாது.
ஒரு ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்து. உண்மையான மாற்றம் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
பொதுவாக மாற்றம் என்றால் இந்தியாவில் தொழில்துறை, உயர்கல்வி துறை, மருத்துவத்துறையில் நம்பர் ஒன். பொருளாதார அளவில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதில் என்ன மாற்றம் கொண்டு வரப் போகிறீர்கள்? மாற்றம் என்று சொன்னால் அதில் கொள்கை ரீதியாக ஒரு முடிவு இருக்க வேண்டும்.
மாற்றம் இதில் எல்லாம் கொண்டுவர போகிறோம் என வாக்குறுதிகளில் த.வெ.க-வினர் எதுவும் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாகக் கொண்டு வந்ததை இந்த அரசு தக்க வைத்தாலே போதும். இந்த நிலையை விட அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றால் பாராட்டுக்குரியது.
இதிலிருந்து தமிழகத்தைப் பின் நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகளை இந்த அரசு எந்த அளவுக்குப் பூர்த்தி செய்கிறதா என்பதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து பேசியதாக அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றச்சாட்டியது குறித்து கேள்விக்கு, “தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அரசியல் சம்பந்தமாகப் பேசவில்லை.
கையெழுத்து போடும் இடத்தில் எதார்த்தமாகச் சந்தித்து பேசியதுதான். அவர்களிடம் அரசியல் பேசும் அவசியம் இல்லை” எனப் பதிலளித்தார்.




