அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை தலைவர் ராகுல் காந்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை…
“மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தாங்கள் அறிந்ததே.
தங்களின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை, முழு நம்பிக்கை மற்றும் பக்தியோடு நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருட்டுத்தனத்தால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்படுவதை நாடாளுமன்றத்தில் தாங்கள் அறிவித்தீர்கள், ஆனால் இதன் உறுப்பினர்கள் முழுக்க முழுக்க உங்களது அரசாங்கத்தால் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் (RSS), வி.ஹெச்பி (VHP) மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்த விஷயமே.
மேலும், இதன் அவப்பெயர் பெற்ற முன்னாள் பொதுச் செயலாளர் தங்களின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இப்படிப்பட்ட ஒரு குற்றத்திற்குப் பின்னரும் தாங்கள் மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வையும், உரிய தீர்வையும் உறுதி செய்வது தங்களது கடமையாகும்.
பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளையும் கையாண்ட விதம் உட்பட, இந்த அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து உடனடியாக ஒரு சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பக்தர்கள் தங்களின் காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த விசாரணையின் முடிவுகளும், அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தாங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும் விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்களது அரசாங்கத்தின் மற்றும் இந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கியுள்ளது. இந்திய மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்”.




