வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டச் செயலாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,
“விக்சித் பாரத்-ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]’ திட்டத்தின் செயலாக்கம் 01.07.2026 அன்று முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக தாம் இக்கடிதத்தை எழுதுவதாகத் தெரிவித்து, இப்புதிய திட்டத்தின் நிதிப்பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டு ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துமென்பதால், ‘VBGRAMG சட்டம், 2025’-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியமாகிறது.
அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை கள அளவில் தடையின்றியும் திறம்படவும் செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள கிராமப்புற மக்களையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிதிப்பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் (Material) மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற வீதத்தைக் கட்டாயமாக்குகின்றன என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்தத் திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன் பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடரவேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகளில், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையினைக் (Micromanagement) கொண்டுவருவதுடன் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது தொடர்புடைய மாநிலத்தின் சமூகப் பொருளாதாரப் பன்முகத் தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறுவதுடன், அடிமட்ட அளவில் சமச்சீரற்ற நிதி ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முக்கிய வேளாண் பருவங்களை (Peak agricultural seasons) அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவததால் இச்சட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும், அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்குவதை சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ‘எல் நினோ’ (El Nino) போன்ற கணிக்க இயலாத காலநிலை மாற்றங்கள், விவசாயக் கால அட்டவணையை அடிக்கடி மாற்றும் தன்மையுடையதாய் உள்ளதால், எதிர்பாராத காலங்களில் தொழிலாளர் தேவையை ஏற்படுத்துவதுடன் முன்பே அறிவிக்கப்பட்ட முதன்மைப் பருவங்களின்போது வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பின் அவசியத்தை ஏற்படுத்தும் என்பதால், கால அட்டவணையை முன்னரே அறிவிப்பதற்குப் பதிலாக, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த 60 நாட்கள் முதன்மைப் பருவத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாற்றி (Dynamically) அறிவிப்பதற்கான அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தில், மாநில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை நீட்டிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாக அமைந்துள்ளது என்றும், இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க (Convergence) அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாகக் கொண்டு, “அனைவருக்கும் வீடு” என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவிடுமாறும் மாண்புமிகு பிரதமர் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பணிகளை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்கு திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த ஒப்புதல்களைப் பரவலாக்குவது அவசியமானதென்றும், இச்சட்டத்தின்படி, ஒருங்கிணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய, மாநில அல்லது உள்ளூர் திட்டங்களும் ஒன்றிய அரசால் தனித்தனியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் திட்ட ஒருங்கிணைப்பு வாய்ப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் மாறிவரும் நிதி நிலைமை மற்றும் மாநில அரசின் புதிய முன்முயற்சிகளைப் பொறுத்து அமைவதால், இத்தகைய தனித்தனி அறிவிப்புகள் நிர்வாகத் தாமதங்களை உருவாக்கும் என்பதால் ஒன்றிய அரசுக்குத் தகவல் தெரிவித்து, திட்டங்களை ஒருங்கிணைக்கும் அறிவிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவது, மிகவும் பயனுள்ளதாகவும் திட்டச் செயலாக்கத்தை உறுதி செய்யவும் ஏதுவாக அமையும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, மகாத்மா காந்தி அவர்களின் மாண்பைப் போற்றும் வகையிலும், இத்திட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை மேலும் உயர்த்தும் வகையிலும் இத்திட்டத்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இந்த முக்கிய மாற்றங்களுடன், மேலும் சிறப்பாக இத்திட்டத்தை தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும் என்று குறிப்பிட்டு, இந்த முன்மொழிவுகளை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.”




