விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி நேற்று மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விகடன் ப்ளஸ் இதழில் வெளியான ஒரு கார்ட்டூன்தான் விகடன் தளத்தின் முடக்கத்துக்கு காரணமாக இருந்தால் அதை கண்டிக்கிறோம் என அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். விகடன் இணையதளம் முடக்கப்பட்டதில் நேற்றிலிருந்து இப்போது வரை என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பற்றிய விளக்கம் இங்கே.
‘அண்ணாமலையின் புகார்!’
On behalf of @BJP4TamilNadu, we have submitted two separate representations today: one to the Chairperson of the Press Council of India and another to our Hon MoS Thiru @Murugan_MoS avl, seeking prompt action against Vikatan magazine for being a mouthpiece of the DMK and for… pic.twitter.com/1PZjr9CClC
— K.Annamalai (@annamalai_k) February 15, 2025
நேற்று மதியம் X தளத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விகடனை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதாவது, பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலும் அவரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் உன்னத நோக்கத்துக்கு தீங்கிழைக்கும் வகையிலும் விகடன் இதழ் ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறது. இது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிகளை மீறிய செயல் எனக் கூறி தகவல் தொடர்புத்துறை அமைச்சர் எல்.முருகனுக்கும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருப்பதை X தளத்தில் பதிவிட்டிருந்தார். அத்தோடு, விகடன் இதழில் இதுவரை மோடியை விமர்சித்து வரையப்பட்டிருந்த கார்ட்டூன்களையும் பதிவிட்டிருந்தார்.
‘கமலாலய காட்டம்!’
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கமலாலயத்தில் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி போன்ற தமிழக பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்திருந்தனர். அண்ணாமலை எழுப்பிய கார்ட்டூன் விவகாரம் பற்றி கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி இருவருமே கொந்தளித்திருந்தனர். கரு.நாகராஜன் ஒருபடி மேலே சென்று, ‘எல்லா ஊரிலும் விகடன் பத்திரிகையை வாங்கி கொழுத்த ஒரு செகண்ட் ஆகாது. மாவட்டத் தலைவர்களுக்கு செய்தி சொன்னவுடனேயே, வாருங்கள் விகடன் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார்கள். நாங்கள்தான் எங்களின் தலைவர் அண்ணாமலையின் உத்தரவுப்படி பொறுமையாக பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறோம்.’ என ஆவேசம் காட்டினார்.
இதே சமயத்தில் விகடன் அலுவலகத்திலும் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர். இதெல்லாம் மாலை வரை நடந்தவை.

‘விகடன் இணையதளம் முடக்கம்!’
மாலை 6 மணிக்கு மேல்தான் விகடன் இணையதளம் வேலை செய்யவில்லை என்கிற தகவல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வர தொடங்கியது. அலுவலகத்தில் இருக்கக்கூடிய கணினிகளில் விகடன் இணையதளம் இயங்கிய போதும், வெளியே பலராலும் விகடனின் தளத்தில் செய்திகளை படிக்க முடியவில்லை. பெரும்பாலான மொபைல் நெட்வொர்க்களில் விகடன் ஆப்பும் க்ரோமில் விகடனின் தளமும் வேலை செய்யவில்லை. சிலருக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல் விகடன் தளம் செயல்பட்டிருக்கிறது.
இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பதை விகடனின் தொழில்நுட்பக் குழு அறிந்தவுடனேயே துரிதமாக வேலைகளில் இறங்கிவிட்டனர். மாலை 6:30 மணியிலிருந்து தளத்தில் என்ன பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய தீவிரமாக முயன்று வந்தனர். சர்வீஸ் ப்ரொவைடர்களிடமும் கலந்தாலோசித்து வந்தனர். இறுதியில், நம்முடைய தரப்பில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
‘சமூகவலைதள அட்டாக்’
அதேவேளையில், சமூகவலைதளங்களில் சிலர் பிரதமரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதால் விகடன் தளத்தை முடக்கிவிட்டோம் என பதிவிட்டு கொண்டிருந்தனர். ‘பாரத பிரதமர் உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களை அவதூறாக சித்தரித்த விகடன் டிஜிட்டல் சைட் முடக்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும்.’ என கமலாலயத்தில் பொங்கியிருந்த பா.ஜ.க துணைத்தலைவர் கரு.நாகராஜன் பதிவை வெளியிட்டிருந்தார்.
இவற்றையெல்லாம் வைத்து செய்தி சேனல்களும் பிரதமரை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதால் மத்திய அரசால் விகடன் தளம் முடக்கப்பட்டதாக பிரேக்கிங் நியூஸ் அடித்தனர். ஆனால், மத்திய அரசுதான் விகடன் தளத்தை முடக்கியது என்பதற்கான எந்த செய்தியும் அரசு தரப்பிலிருந்து விகடனுக்கு கிடைக்கவில்லை.
ஆசிரியரின் விளக்கம்!

விகடன் ஊழியர்கள், வாசகர்கள் உட்பட பலரும் குழப்பத்திலிருந்த சமயத்தில்தான் விகடனின் ஆசிரியரிடமிருந்து நடப்புச் சூழலைப் பற்றி ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. `கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்”
விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.
நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த கார்ட்டூன் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’ என மிகத்தெளிவாக ஆசிரியர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.
‘விகடன் ப்ளஸ் கார்ட்டூன்!’
பா.ஜ.கவினர் புகார் கூறும் குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் ‘விகடன் ப்ளஸ்’ இதழில் வெளியானது. ‘விகடன் ப்ளஸ்’ என்பது விகடன் குழுமத்தின் இணைய இதழ். ஒவ்வொரு திங்கள் கிழமையும் அந்த இதழ் வெளியாகும். அப்படி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான விகடன் ப்ளஸ் இதழில்தான் அவர்கள் புகார் கூறும் அந்த கார்ட்டூன் வெளியாகியிருந்தது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற இந்தியர்களை அமெரிக்க அரசு இராணுவ விமானங்களில் கை விலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வருகிறது. அமெரிக்காவின் இந்தச் செயலை மத்திய அரசு தரப்பில் யாருமே கண்டிக்கவில்லை. மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகள் தங்களின் பிரஜைகளுக்காக எடுத்த பிரயத்தனங்களை கூட இந்தியா எடுக்கவில்லை. இதை சுட்டிக்காட்டும் வகையில்தான் அந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டது.
இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் @vikatan-னின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு…— M.K.Stalin (@mkstalin) February 16, 2025
மத்திய அரசு விகடனின் தளத்தை முடக்கியதாக செய்திகள் வெளியான நிலையில் அரசியல் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். ‘கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.’ என முதல்வர் ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்றோரும் விகடனின் இணையதளம் முடக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். ஆசிரியரிடமிருந்து அறிக்கை வெளியான உடனேயே நடு இரவிலேயே சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கருத்துச் சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தது.
‘அதிகாரத்துக்கு எதிரான குரல் இனியும் ஒலிக்கும்!’
இந்த விவகாரத்தில் விசிக எம்.பி.ரவிக்குமார் மத்திய அமைச்சரவைக்கு எழுதியிருக்கும் கடிதம் மிக முக்கியமானது. ‘உரிய விளக்கம் இல்லாமல் விகடன் தளம் முடக்கப்பட்டது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை குலைக்கும் வேலை’ என்பதை குறிப்பிட்டிருக்கும் ரவிக்குமார், ‘விகடன் தளத்தை முடக்கும் உத்தரவை மத்திய அரசு வழங்கியதா என்பதில் தெளிவான விளக்கம் தேவை, சட்டப்பிரிவு 69 A யின் படி எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்காமலும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை உறுதிப்படுத்தாமலும் ஒரு கருத்தை முடக்க முடியாது. மத்திய அரசு இதில் வெளிப்படைத்தன்மையொடு நடந்துகொள்ள வேண்டும்.’ எனவும் மிகத்தெளிவாக கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாக பாய்ண்டுகளை அடுக்கியிருக்கிறார் ரவிக்குமார். விகடனின் ஆசிரியர் தரப்பிலிருந்து கேட்பதும் எம்.பி ரவிக்குமார் கேட்கும் அதே விளக்கம்தான்.
நேற்று மாலையிலிருந்து பலராலும் விகடன் தளத்தை படிக்க முடியவில்லை. விகடனின் தொழில்நுட்பக் குழுவின் முயற்சியில் இன்னொரு டொமைன் உருவாக்கப்பட்டு (https://www.anandavikatan.com/) அதில் இன்று காலை முதல் செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(a) ஒவ்வொரு தனிமனிதனுக்குமான பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரத்தை உறுதிச் செய்கிறது. அந்த அடிப்படை உரிமைகளின் குரல்வளையை நெறிக்கும் வேலையை விகடன் எப்போதுமே எதிர்த்திருக்கிறது. விகடன் ஒரு நூற்றாண்டை கடக்கவிருக்கிறது. இந்த நூறாண்டில் எத்தனையோ அவதூறு வழக்குகளையும் முடக்கங்களையும் எதிர்ப்புகளையும் விகடன் சந்தித்திருக்கிறது. பல அடக்குமுறைகளை கடந்தும் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் குரலாகவே எப்போதும் ஒலித்து வருகிறது. இனியும் ஒலிக்கும். ஆசிரியர் கூறியிருப்பதை போல அந்த ‘விகடன் ப்ளஸ்’ கார்ட்டூன் காரணமாக மத்திய அரசால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம்.!