26
October, 2026

A News 365Times Venture

26
Monday
October, 2026

A News 365Times Venture

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா' – இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்

Date:

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) வெற்றி பெற்று 4-வது முறை அதிபராகத் தேர்வாகியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி ஆட்சிகளுக்கு எதிராகவும், குறிப்பாக குற்றச் செயல்கள் அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தியும் வலதுசாரி வேட்பாளர்கள் தீவிரமாக உருவெடுத்தனர். அர்ஜென்டீனாவில் ஜேவியர் மிலே (Javier Milei), எல் சால்வடாரில் நயீப் புக்கேலே (Nayib Bukele) போன்ற அரசியல் தலைவர்களின் வெற்றிகள் இப்போக்கின் தொடக்கமாக அமைந்தன.

லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா

குறிப்பாக 2025-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, ட்ரம்ப்பின் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்”, சட்ட ஒழுங்கு மீதான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் ஆகிய கொள்கைகளை உள்வாங்கி, அதே பாணியில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவரத் தொடங்கினர். இப்படி ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற வலதுசாரி தலைவர்கள் ஆட்சியைப் பிடிக்கும்போது, அப்பகுதியின் வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக மாறுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடதுசாரி தலைவர்கள், அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் மற்றும் தலையீடுகளை எதிர்த்துச் சுயசார்பு நிலையைக் கைகொள்ள முயற்சிக்கும் வேளையில், வலதுசாரித் தலைவர்கள் அமெரிக்காவுடன் நெருங்கிய வர்த்தக ஒப்பந்தங்களையும், பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளையும் உடனடியாக முன்னெடுக்கின்றனர். இதனால் பிராந்திய அளவில் அமெரிக்காவின் செல்வாக்கும் அதிகாரமும் விரிவடைவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய தீவிர வலதுசாரி அலைக்கு மத்தியில்தான் பிரேசிலில் ட்ரம்புக்கு எதிரான நிலைபாட்டில் இயங்கிய லூலா டா சில்வா அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து வலதுசாரி சிந்தனையாளரான செனட்டர் பிளாவியோ போல்சனாரோ (Flávio Bolsonaro) போட்டியிட்டார்.

அமெரிக்கா
அமெரிக்கா

மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வு, குற்றச் செயல்கள் குறித்த அச்சம் மேலோங்கியிருந்த நிலையில், போல்சனாரோ ‘குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன், உணவுப் பொருள்களின் விலையைக் குறைப்பேன்’ என உறுதியளித்துப் பிரசாரம் செய்தார். லூலாவோ விளிம்புநிலை வாக்காளர்களைக் கவர குடும்பங்களுக்கு உதவும் வகையிலான பெரும் செலவிலான அரசுத் திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்தார். அதேநேரம், இரு வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக போல்சனாரோ பிரேசிலின் பெரிய ஊழல் சர்ச்சை ஒன்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், அக்டோபர் 4-ம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதில் இரு வேட்பாளர்களும் பெரும்பான்மை பெறவில்லை, என்றாலும், போல்சனாரோ, லூலாவை விட 22 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். முதற்கட்டத் தேர்தலின் பின்னடைவுக்குப் பிறகு லூலா தனது பிரசார பாணியை முற்றிலும் மாற்றியமைத்தார். இளைஞர்களைக் கவர சிறப்பு உத்திகளைக் கையாண்டார், தனது ஆட்சிப் பதிவுகளையும் ஜனநாயக மதிப்பீடுகளையும் பாதுகாக்க லட்சக்கணக்கான மக்களைத் தெருக்களில் திரட்டி பேரணிகளை நடத்தினார். ‘மீண்டும் ஒரு போல்சனாரோ ஆட்சி அமைந்தால் ஏற்படும் ஆபத்துகள் பெரியது’ என எச்சரித்ததோடு, பல புதிய அரசுத் திட்டங்களை அறிவித்துத் தீவிரமாகச் செயல்பட்டார்.

லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா
லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா

இந்த நிலையில்தான் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று (25-ம் தேதி)நடைபெற்றது. வழக்கமான வாக்குப்பதிவு நேரம் முடிவடைய மூன்று நிமிடங்களே இருந்த நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்கமுடியாத சிலப் பகுதிகளில் ஏற்பட்ட சிக்கலை முன்வைத்து, இரு வேட்பாளர்களின் தரப்பும் `வாக்களிக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும்’ என தேர்தல் நீதிமன்றத்தில் முறையிட்டன. அதனடிப்படையில், உச்சநீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியானோ ஜானின் வாக்குப்பதிவை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.

அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், லூலா, மொத்த வாக்குகளில் 51.8% வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செனட்டர் பிளாவியோ போல்சனாரோவை விட சுமார் 44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 1985-ல் பிரேசிலில் ராணுவ சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, முதற்கட்டத் தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த ஒரு வேட்பாளர், இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதிபர் நாற்காலியைப் பிடிப்பது இதுவே முதன்முறை. லூலாவின் புதிய அதிபர் பதவிக்காலம் 2027 ஜனவரி 5 அன்று முறைப்படி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா
லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா

1970-களில் ஒரு தொழிற்சங்கத் தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய லூலா, பின்னர் தொழிலாளர் கட்சியை (Workers’ Party) உருவாக்கினார். அக்கட்சி சார்பில் மூன்று முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற அவர், இறுதியாக 2002-ல் வெற்றி பெற்று அதிபரானார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கழித்து 2006-ல் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010-ல் அவரது அமைச்சரவையில் இருந்த தில்மா ரூசெஃப் (Dilma Rousseff) அதிபராகப் பொறுப்பேற்றார். 2014-ல் மீண்டும் வென்ற ரூசெஃப், 2016-ல் முறைகேடு குற்றச்சாட்டுகளால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த ஊழல் விசாரணையில் லூலாவும் சேர்க்கப்பட்டார்.

2018-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்ற லூலா, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். 580 நாட்கள் சிறையில் இருந்தார் லூலா. அவருக்குத் தண்டனை அளித்த நீதிபதி நடுநிலையின்றி செயல்பட்டார் என்பதை காவல்துறையினர் கைப்பற்றிய குறுஞ்செய்திகள் உறுதி செய்ததை அடுத்து, பிரேசிலின் உச்சநீதிமன்றம் லூலா மீதான தண்டனையை ரத்து செய்தது. சிறையிலிருந்து மீண்டு வந்த லூலா, அப்போதைய அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் (Jair Bolsonaro) முதன்மை விமர்சகராக உருவெடுத்து, 2022 தேர்தலில் அவரை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா
லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா

தற்போது 80 வயதைக் கடந்துள்ள லூலா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நிகராகுவா அதிபர் டேனியல் ஓர்டேகா ஆகியோருடன் இணைந்து, அமெரிக்கக் கண்டங்களின் மிக மூத்த அதிபர்கள் என்ற வரிசையில் இணைந்துள்ளார்.

லத்தீன் அமெரிக்கப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளை விடவும் பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய இரண்டு நாடுகளுமே மிகப்பெரிய பொருளாதார பலமும், அதிக மக்கள் தொகையும் கொண்ட நாடுகளாகத் திகழ்கின்றன. இப்பிராந்தியத்தில் பிற சிறிய நாடுகள் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தாலும், இந்த இரு பெரிய நாடுகளும் இடதுசாரி தலைவர்களின் ஆட்சியின் கீழ் இருப்பது மிகவும் முக்கியமானது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவோ அல்லது ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற வலதுசாரி அமைப்புகளோ ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தால், அதற்கு இந்த இரு நாடுகளும் ஒரு பெரிய தடையாக இருக்கும் என்பதும் அவர்களின் கருத்து.

ஒருவேளை இத்தேர்தலில் லூலா தோற்று, ட்ரம்ப்பின் ஆதரவாளரான போல்சனாரோவின் கட்சி வெற்றி பெற்றிருந்தால், லத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதி அமெரிக்காவின் வலதுசாரி கொள்கைகளுக்குள் சென்றிருக்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதேநேரத்தில், லூலா வெற்றி பெற்றுவிட்டாலும் பிரேசிலுக்குள் நிலைமை இன்னும் முழுமையாக அவருக்குச் சாதகமாக மாறவில்லை. ஏனெனில், இத்தேர்தலில் லூலா கட்சி வேட்பாளர்களுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட போல்சனாரோ கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிகமிகக் குறைவாகவே இருந்தது.

இதன் மூலம், வெளிப்பார்வைக்கு இடதுசாரி ஆட்சி அமைந்திருந்தாலும், பிரேசில் நாட்டு மக்களுக்குள் இன்னும் போல்சனாரோ போன்ற வலதுசாரி தலைவர்களுக்கான ஆதரவும், இடதுசாரி கட்சிகள் மீதான அதிருப்தியும் மிக ஆழமாக வேரூன்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனாலும், 2.6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பிரேசில் பொருளாதாரம், ட்ரம்ப் விதித்துள்ள அதிகபட்ச வரிகளையும் மீறி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் சுயசார்புடன் சுதந்திரமாக இயங்க இந்த முடிவு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய லூலா, “பிரேசில் எந்த நாட்டுக்கும் கொல்லைப்புற வாசல் அல்ல என்பதை இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது” என அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டு உரையாற்றியது, அமெரிக்காவின் பின்னடைவை தெளிவாக சுட்டிக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“நாட்டை சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்" – பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய தரவு மையம்...

மோடி தந்தை குறித்து கார்கே சர்ச்சைப் பேச்சு; 'சேற்றை வாரிப் பூசும் அரசியல்…' – அமித் ஷா கண்டனம்!

பீகார் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்...

கர்நாடகா: `கன்னடர்களுக்கே முன்னுரிமை' தனியார் நிறுவனங்களுக்குத் முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை

கர்நாடகாவிலுள்ள தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு கன்னடர்களுக்கு வேலைவாய்ப்புகளை மறுத்தால், மாநில அரசு...

அம்மா குடிநீர்: “தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா...