30
July, 2026

A News 365Times Venture

30
Thursday
July, 2026

A News 365Times Venture

`முதல்வர் எங்களை கடிந்துகொண்டாலும் தவறில்லை.. அமைச்சர்களுக்கு அவர்தானே லீடர்!' – அமைச்சர் வன்னிஅரசு

Date:

நெல்லையில் ஆணவப் படுகொலைக்குப் பலியான கவினின் முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, ‘ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்படும்’ என உறுதிபட கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் அமைச்சர் வன்னிஅரசுவை சந்தித்து நடப்பு அரசியல் குறித்தான கேள்விகளை முன்வைத்தோம்..!

“ஆணவப்படுகொலை தடுப்பு சட்டம் த.வெ.க தலைமையிலான ஆட்சியிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளதே?”

“சட்டமன்றத்தில், நான் முதன் முறையாகப் பேசும்போதே ‘ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்’ என்பதைத்தான் வலியுறுத்தியிருக்கிறேன்.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்றுள்ள ஆணவப் படுகொலைகள், அதற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளேன்.

இந்த நிலையில், ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் இயற்றுவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம், இதுவரையில் ஆணவப்படுகொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளை கேட்டு முடித்துள்ளது. அடுத்தகட்டமாக இச்சட்டம் குறித்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசிக்க உள்ளது. அந்தவகையில், மார்க்சிஸ்ட் கட்சியும் வி.சி.க-வும் இதுவரையில் சட்டம் குறித்தான தங்கள் கருத்துகளை ஆணையத்திடம் பதிவு செய்துள்ளது. எனவே, நிச்சயம் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்படும்!”

“முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ், ‘ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் நிரபராதிகளை தண்டித்துவிடக் கூடாது’ என எச்சரிக்கிறாரே?”

“எத்தனை குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட, ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் சட்டங்கள் அனைத்துக்குமான அடிப்படை. நமது நோக்கமும் அதுதான். அந்தவகையில் இந்த சட்டத்தின் மூலம் கண்டிப்பாக அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

கருணாஸ்

அதேசமயம், சட்டம் குறித்தான நிறை, குறை குறித்து எழும் சந்தேகங்களை எல்லோருமே விவாதிக்க வேண்டும் என்பதில் எந்தத் தவறும் இல்லை.

சாதி வெறியைத் தூண்டுகிற வகையில் அண்ணன் கருணாஸின் செயல்பாடுகள் ஒருபோதும் இருந்ததில்லை. சட்டத்தின் நிறை, குறை குறித்து சமூக நல்லிணக்கத்தோடு அவர் எழுப்பும் கேள்விகள் நிச்சயம் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு, அவரது சந்தேகங்கள் களையப்படும்.”

“அண்மைக்காலமாக, கூட்டணி தொடர்பான வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறதே?”

“இது திட்டமிட்ட நரேட்டிவ். ‘தி.மு.க-வுடன் வி.சி.க நட்புறவோடு இருக்கிறது’ என தொடர்ச்சியாக அவர் ஒரே கருத்தைத்தான் சொல்லிவருகிறார். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் கேள்வி எழுப்புவர்களுக்குப் புரியும்விதத்தில் அவர் விளக்கிச் சொல்கிறார். ஆனால், திருமாவின் இமேஜை காலி செய்யவேண்டும் என நினைக்கிற சனாதன கும்பல், வேண்டுமென்றே இந்த செய்தியை தவறாக சித்தரிக்கின்றன.

திருமாவளவன்
திருமாவளவன்

கடந்த காலத்தில், நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும், எங்களைக் குறிவைத்து இதேபோன்று விமர்சன தாக்குதல் செய்துவந்தனர். இப்போது த.வெ.க கூட்டணிக்குள் வந்தபிறகும் இதே வேலையை அவர்கள் செய்துவருகிறார்கள். இது திட்டமிட்ட சதி வேலை!”

“த.வெ.க கூட்டணியில் இருந்துகொண்டே தொடர்ந்து அதிருப்தி கருத்துகளை வி.சி.க தெரிவித்து வருவதால்தானே, பா.ம.க-வுடனும் த.வெ.க தலைமை நெருக்கம் காட்டுகிறது?”

“ஒரு நிலைப்பாடோடு ஆக்கபூர்வமான கருத்துகளைச் சொல்வது அரசுக்கு நல்லது என்ற அடிப்படையில்தான் எங்கள் தலைவர் கருத்துகளைச் சொல்கிறார். மற்றபடி அதனால்தான் இப்படியெல்லாம் அரசியல் சூழலே மாறுகிறது என்பதெல்லாம் அரசியல் ரீதியான யூகச் செய்திகள். அவற்றுக்கு நான் பதில் சொல்ல முடியாது!”

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

“எம்.சி.ராஜா விடுதியிலுள்ள குறைபாடுகளை அண்மையில் ஆய்வு செய்த முதல்வர், அமைச்சர் என்ற முறையில் உங்களைக் கடிந்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தனவே உண்மையா?”

“அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல், முதல்வர் எங்களைக் கடிந்துகொண்டாலும்கூட அதில் தவறில்லையே… ஏனெனில், அமைச்சர்கள் அனைவருக்கும் அவர்தானே லீடர். தனக்குக் கீழான அமைச்சரவை எப்படி செயல்பட வேண்டும் என்ற தொலைநோக்குடன் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆக துறை ரீதியாக அவர் சொல்கிற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்தானே.

அண்மையில்கூட, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் 20 வருடங்களுக்கும் மேலாக பேருந்து இயக்கப்படாமல் இருந்த ஊருக்கு பேருந்தை இயக்கியதைப் பார்த்து என்னை அழைத்துப் பாராட்டியதோடு, ‘அந்தப் பேருந்தில் நீங்களும் பயணித்திருக்கலாமே…’ என ஆலோசனையும் கூறினார்.”

“மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில், நிரந்தர தீர்வை எதிர்நோக்கி சமூக நீதித்துறை என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?”

“சாதிய பிரச்னை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக நமது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற விஷம். அதை ஐந்தாண்டு காலத்திற்குள்ளாகவே தீர்க்க முடியும் என எதிர்பார்க்கும்போது, இன்னும் நாம் கூடுதலாக களப்பணி செய்யவேண்டும் என்பதைத்தான் உணர்த்துகிறது.

இறுகிப்போன இந்த சாதிய மனநிலையை ஓரளவு தளர்வுப்படுத்துவதற்கான சமூக நல்லிணக்கப் பணியில்தான் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறோம்.

அந்தவகையில், இந்தத் துறையில் எனது திறனுக்கு உட்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். உதாரணமாக மனைப்பட்டா வழங்குவதில் முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறேன். ஏனெனில், நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த சூழலிலும், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இப்போதும் மனை இல்லாமல், மனை பட்டா இல்லாமல், கோயிலுக்குள் நுழைய முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நீண்டகாலமாக இந்த சமூகத்தில் இருந்துவரக்கூடிய இந்த சாதியக் கட்டமைப்பை உடைப்பதற்கு இந்த துறையிலிருந்து என்னால் எந்தளவு செயல்பட முடியுமோ அதற்கான உழைப்பை செலுத்திவருகிறேன்.”

“பட்டியலின மக்களின் நீண்டகால கோரிக்கையான ‘பஞ்சமி நில மீட்பு’ விவகாரத்தில் த.வெ.க அரசின் நிலைப்பாடு என்ன?”

“அடித்தட்டு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கான உரிமைக்காக இத்தனை ஆண்டுகாலமாகப் போராடிவரும் வி.சி.க அமைப்பின் மீது, அதன் தலைவர் மீது முதல்வரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். ‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைத்துவரும் வி.சி.க., இப்போதுதான் அந்த இடத்தை எட்டியிருக்கிறது எனும்போது, நிச்சயம் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.

மனை, பட்டா, பள்ளி, விடுதி, சாதிச் சான்றிதழ், பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான விரிவான விளக்கத்தை முதல்வரின் கவனத்துக்கு ஏற்கெனவே எடுத்துச் சென்றிருக்கிறோம். அக்கறையோடு கேட்டுக்கொண்ட முதல்வர், இதற்கான நில ஒதுக்கீட்டுக்கு கூடுதல் பட்ஜெட்டை ஒதுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.

வெளிநாட்டில் படிக்கின்ற ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்ளுக்கான ‘அம்பேத்கர் ஓவர்ஸீஸ் ஸ்காலர்ஷிப்’பில் கடந்த ஆண்டு, 213 மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறை விண்ணப்பித்தவர்களில் தகுதியான மாணவர்கள் அனைவருக்குமே கொடுக்கவேண்டும் என நிதியமைச்சரில் ஆரம்பித்து முதல்வர் வரை அனைவரிடமும் பேசி ஒப்புதல் பெற்றிருக்கிறேன். ஆக, ஆட்சி அதிகாரத்தில் வி.சி.க-வுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்னென்ன நலத்திட்டங்களை செய்ய முடியுமோ அத்தனையையும் செய்துமுடிப்போம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாத்தா தமிழகத்தின் 'ஸ்பீக்கர்', பேத்தி சர்வதேச `பெஸ்ட்' ஸ்பீக்கர்! – கலக்கும் காந்தள்

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். 'ரோம் சட்டம்'...

"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" – ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா...

"அப்போ Active-ஆ இருந்திருந்தா இப்போ Inactive Modeக்கு தள்ளியிருக்க மாட்டாங்க"- திமுகவைச் சாடும் தவெக

மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பான விவகாரம் இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாக உருவாகிவருகிறது....

“வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை...