கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டில் இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் கடந்த 2025-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதாரை தாக்கிய அடிதடி வழக்கில், பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பரான கோட்டூர் பகுதியில் பார் நடத்தி வந்த அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், பார் நாகராஜ் த.வெ.க-வில் இணைந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த கூட்டத்தோடு கூட்டமாக பார் நாகராஜூம் வந்து சென்றிருக்கிறார். அவருடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை த.வெ.க-வில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.
இது குறித்து பார் நாகராஜிடம் கேட்டபோது, “த.வெ.க-வில் நான் இணையவில்லை. பொள்ளாச்சியில் இருந்து நண்பர்கள் சென்றதால், கூட போனேன். அதைவைத்து த.வெ.க-வில் இணைந்ததாக வதந்தியை கிளப்பி விட்டார்கள். செங்கோட்டையனை நான் பார்த்தபோது, அங்கு குறைந்தது ஐநூறு பேர் இருந்திருப்பார்கள். அதில் நான் யாரென்று அவருக்கு தெரியாது. அடிதடி வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாலியல் வழக்கில் எனக்கு தொடர்பில்லை என சிபிஐ-யே விடுவித்துவிட்டது. ஆனாலும் சிலர் வேண்டுமென்றே பெரிது பண்ணுகிறார்கள்” என்றார்.




