10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

Date:

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே….ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு அவ்வளவு அநாமத்தா போச்சா…’ ஆற்றாமையில் பொங்கி அழும் ஆரோக்கிய மேரி அம்மாவின் அழுகுரல் இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஆரோக்கிய மேரியின் மருமகள் மெர்ஸி சேப்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஐ.சி.யூக்கு வெளியே மெர்ஸியின் கணவர் ஸ்டீபனும் மாமியார் ஆரோக்கிய மேரியும் தாள முடியாத சோகத்தில் வெதும்பி போய் நின்றனர். அவர்களின் கதையை கேட்கும்போது நமக்கே மனம் உடைந்து போகிறது.

ஆரோக்கியமேரி

‘நாங்க பொறந்து வளர்ந்தது எல்லாமே கண்ணகி நகர்லதான் சார். என் மனைவி மெர்ஸி குழந்தை உண்டாகியிருந்தா. இது எங்களுக்கு இரண்டாவது குழந்தை. முதல் குழந்தை நார்மலான குழந்தையா இல்ல. அதுக்கு உடம்புல நிறைய பிரச்னை. அதனால் இந்த இரண்டாவது குழந்தைய குடும்பமே ஆவலா எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்துச்சு. இது 9 வது மாசம். திடீர் திடீர்னு வலி வருங்குறதால எல்லாரும் எப்பவும் அலர்ட்டாவே இருப்போம். 8 ஆம் தேதி நைட்டு அவளுக்கு தாங்க முடியாத வலி. அப்பவும் பக்கத்துல இருக்குற அந்த நகர்ப்புற சமூக நல மருத்துவமனைக்குதான் போனோம். நர்ஸூங்க வலிக்கு மாத்திரை கொடுத்து அனுப்பிட்டாங்க. நைட்டு கொஞ்சம் பரவால்ல. நேத்து காலையில நான் வேலைக்கு போன பிறகு திரும்பவும் தாங்க முடியாத வலி வந்திருக்கு. அம்மாதான் திரும்பயும் அதே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. கண்ணகி நகர்ல வேற பிரசவ ஆஸ்பத்திரியும் கிடையாது. இருக்குற அந்த ஆஸ்பத்திரிலயும் காலைல 10 மணி நேரத்துக்கும் டாக்டர் இல்ல. கொஞ்ச நேரம் நர்ஸூங்க எதோ ட்ரை பண்ணி பார்த்துருக்காங்க. மெர்ஸிக்கு வலி இன்னமும் அதிகமாகியிருக்கு. உடனே சேப்பாக்கம் கோசா ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக சொல்லிருக்காங்க

அந்த ஆஸ்பத்திரி இங்க இருந்து 20 கி.மீ தூரம். டிராபிக்ல சேப்பாக்கம் வந்து சேருறதுக்குல்ல மெர்ஸி துடிச்சுட்டா. இங்க வந்து அவசர அவசரமா உள்ள சேர்த்தா என் குழந்தை வயித்துக்குள்ளேயே இறந்துட்டதா சொன்னாங்க. எங்களுக்கு உயிரே போயிடுச்சு. மெர்ஸியும் சீரியஸாதான் இருக்காங்க. ரத்தப்போக்கு நிக்கவே மாட்டக்குதுன்னு சொன்னாங்க. ஆண்டவா என் பொண்டாட்டியை மட்டுமாச்சு காப்பாத்திடுன்னு இறந்தே பிறந்த என் குழுந்தையை கட்டப்பையில வச்சு கொண்டு போயி இறுதிச்சடங்கெல்லாம் செஞ்சுட்டு வந்தேன். எனக்கு ஆத்திரம் தாங்க முடியல சார். எங்க ஏரியால இருக்க அந்த கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில டாக்டர் இருந்திருந்தா என் குழந்தை இந்த உலகத்தையே பார்க்காம இறந்திருக்குமா? அந்த ஆஸ்பத்திரி மேல புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் போனா அங்க புகாரை வாங்காம இன்னும் அலைக்கழிச்சு மன உளைச்சலுக்கு உள்ளாக்குறாங்க. ஏழைங்க நாங்கெல்லாம் இந்த உலகத்துல வாழத் தகுதியே இல்லையா?’ என ஆற்றாமையில் பொங்குகிறார் மெர்ஸியின் கணவர் ஸ்டீபன்

ஸ்டீபன் - மெர்ஸி
ஸ்டீபன் – மெர்ஸி

‘மெர்ஸியை நான் தான் அந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். என் புள்ளைக்கு தாங்க முடியாத வலி. உள்ள போன உடனே கொஞ்ச நேரம் 2 வது மாடியில வச்சு நர்ஸூங்க எதோ பண்ணாங்க. டாக்டருங்க எங்கன்னு கேட்டா எந்த பதிலும் இல்ல. டாக்டர்னு யாருமே அங்க இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கீழேயே கொண்டு வந்து ஊசி போட தயார் பண்ணாங்க. அப்ப கூட அவ்வளவு அலட்சியம். நர்ஸூங்களோட குழந்தைங்க அங்க ஓடி புடிச்சு விளையாடிட்டு இருக்குங்க. ஏம்மா ஒழுங்கா என்னன்னு பாருங்கனு திட்டுன உடனே, ‘இங்க முடியாது சேப்பாக்கம் கோசாவுக்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க.’ 2 மணி நேரம் நேரத்தை ஓட்டாம முதல்லயே சொல்லிருந்தா கூட எங்க புள்ளையை காப்பாத்திருக்கலாம். ஆம்புலன்ஸ்ல மெர்ஸிய தூக்கி வச்சு கொண்டுட்டு வரோம். அந்த ஆம்புலன்ஸ்ல ஸ்ட்ரெச்சரை தவிர எதுவும் இல்லை.

மெர்ஸி அந்த வலிலையும் தண்ணி…தண்ணின்னு தவிக்குறா…ஏன்ய்யா ஆம்புலன்ஸ்ல ஒரு தண்ணி கூடவா இருக்காது? தவிக்க தவிக்க தூக்கிட்டு வந்து சேப்பாக்கம் கோசால சேர்த்தா வயித்துக்குள்ள இருந்த புள்ள செத்துப்போச்சு. எங்க மெர்ஸி இப்போ ஐ.சி.யூவுல சீரியஸா இருக்கா. கண்ண முழிச்சாலே குழந்தையை நினைச்சு புலம்புறா. நாங்க போன குழந்தைக்காக அழட்டுமா…இல்ல எங்க மெர்ஸி குணமாகணும்னு அழட்டுமா? 25 வருசத்துக்கு முன்னாடி சாந்தோம்ல நிம்மதியா இருந்த எங்களை தூக்கி கண்ணகி நகர்ல போட்டாங்க. எங்க வாழ்க்கை அத்தோட போச்சு. நாங்க ஒரு லட்சம் பேரு அந்த கண்ணகி நகர்ல வாழ்றோம். ஒரு புள்ளத்தாச்சி புள்ளைக்கு பிரசவம் பார்க்க டாக்டர் இல்ல. திங்கள், புதன், வெள்ளினு மூணு நாள்தான் டாக்டர் வருவாங்களாம். செவ்வாய் கிழமை வலி வந்த எங்க மெர்ஸிக்கு வயித்துலயே புள்ள சமாதி ஆகிடுச்சு. என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க எங்கள…ஏழைங்க உசுருன்னா உங்களுக்கு இவ்வளவுதானா?

கண்ணகி நகர் மருத்துவமனை
கண்ணகி நகர் மருத்துவமனை

இத்தனை வருசத்துல ஒரு நல்ல ஆஸ்பத்திரி கூட எங்களுக்கு கட்டிக் கொடுக்கலயே நீங்க. ஊருக்கே சுதந்திரம் கிடைச்சிடுச்சு. எங்க கண்ணகி நகருக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கல. எங்களை இன்னும் கசக்கி தூக்கிப் போட்ட குப்பையாவும் அடிமையாவும்தான் அரசாங்கமே பார்க்குது. உயிர் வாழ்ற அடிப்படை உரிமை கூட எங்களுக்கு இல்லையா? எங்களுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது’ ஓங்கிய குரலில் வெடித்து அழுகிறார் மெர்ஸியின் மாமியார் ஆரோக்கிய மேரி.

இத்தனைக்கும் காரணமான அந்த கண்ணகி நகர் நகர் நகர்ப்புற சமூக நல மருத்துவமனைக்கு நேரில் சென்றோம். வெளியிலேயே 24 மணி நேர மருத்துவ சேவை எனப் போடப்பட்டிருந்தது. மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் போடப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இரண்டாம் தளத்தில் இருப்பதாக போர்டும் மாட்டியிருந்தார்கள். இன்று பணியில் இருந்த மருத்துவரிடம் பேச முயன்றோம். அங்கிருந்த செவிலயர்கள் நம்மை தடுத்து யாரையும் பார்க்க முடியாது மண்டல அலுவலர் எங்களை பேசக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார் என்றார். உடனே மண்டல அலுவலரை அழைத்தோம். அவரின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு வெளியே கண்ணகி நகர்வாசிகளிடம் பேச்சு கொடுத்தோம். ‘போன வருசமே ஒரு குழந்தை இப்படித்தான் டாக்டர் இல்லாம இறந்து போச்சு. இந்த கண்ணகி நகருக்குள்ள இந்த ஆஸ்பத்திரிதான் பெருசு.

கண்ணகி நகர் மருத்துவமனை
கண்ணகி நகர் மருத்துவமனை

எதுவா இருந்தாலும் இங்கதான் வரணும். ஆனா, இங்க எந்த மருந்து மாத்திரையும் ஸ்டாக் இருக்காது. இரத்தம், யூரின் கூட வெளியதான் போயி டெஸ்ட் பண்ணனும். பேருக்குதான் 24 மணி நேர ஆஸ்பத்திரி. ஆனா மதியத்துக்கு மேல டாக்டருங்க இருக்க மாட்டாங்க. இருக்குற நர்ஸூங்களை வச்சுக்கிட்டு கடமைக்கு ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இங்க இருக்குறது எல்லாம் ஏழை ஜனங்க. இவங்க எப்படி தனியார் ஆஸ்பத்திரிக்கு போக முடியும். ஆத்திரம் அவசரம்னா கூட உசுர கையில புடிச்சுக்கிட்டு இராயப்பேட்டை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் ஓடணும். எந்த ஆட்சியும் இந்த துயரத்துக்கு ஒரு முடிவை கட்டலை…எங்க மக்கள் மேல ஒரு குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்திருந்தா கூட இப்படி அலட்சியமா இருந்திருப்பாங்களா?’என கேள்வி எழுப்புகிறார் கண்ணகி நகர் மணிகண்டன்.

மருத்துவ கட்டமைப்பில் முன்னிலையில் இருக்கிறோம். குழந்தை பிறப்பு இறப்பு விகிதத்தில் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கிறோம் என வெற்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தலைநகரான சென்னையில் டாக்டர் இல்லாததால் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்திருக்கிறது. கண்ணகி நகர் என்கிற ஏரியாவை கசக்கி தூக்கி போட்ட குப்பையாக பார்க்கின்றனர் அதிகார வர்க்கத்தினர். மெர்ஸியின் அவஸ்தையும் அவரின் குழந்தையின் இறப்பும் அரசியலர்களின் மனசாட்சியை உலுக்க வேண்டும். இனியும் இப்படி நடக்காமல் இருக்க தேவையான அத்தனையையும் அரசு முன்நின்று செய்ய வேண்டும். மெர்ஸியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? – காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்...

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் தவெக! விரைவில் கட்சி மாறும் தமாகா யுவராஜா?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, தமிழக வெற்றிக்...