கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலாக திமுகவினர் சந்தானபாரதியின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து யார் பெயரில் போஸ்டர் அடித்தார்களோ அந்த பாஜக பெண் நிர்வாகி, ‘எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.’ என்று விளக்கமளித்துவிட்டார். பாஜகவில் போஸ்டர் அடிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. திமுக அல்லு, சில்லுகள் இந்த வேலையை செய்துள்ளனர்.
நாங்கள் வைத்துள்ள எந்த வாதத்துக்கும் திமுகவினர் பதில் சொல்வதில்லை. இந்த போஸ்டர் மூலம் திமுகவினர் அவர்களை அவர்களே கேவலப்படுத்தி கொண்டுள்ளனர். அந்த போஸ்டரை யார் அடித்தார்கள் என்று காவல்துறையினர் கண்டறிய வேண்டும்.

2026 சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் பலம் தெரியும். 2026 தேர்தலில் திமுகவினர் மக்களிடம் இருமொழிக் கொள்கையை மட்டும் பேசட்டும். நாங்கள் மும்மொழி கொள்கையை பேசுகிறோம். இதற்கு திமுக தயாரா.
‘பாஜக நோட்டா கட்சி, பாஜக தீண்ட தகாத கட்சி, அவர்களால் தான் நாங்கள் தோற்றோம்.’ என்று கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கின்றனர். எங்கள் தொண்டர்களின் உழைப்பால் இந்த நிலையை எட்டியதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. எந்தக் கட்சியையும் சிறுமைப்படுத்தவில்லை. பாஜகவை வளர்ப்பது மட்டும் தான் எங்களின் நோக்கம். சரியான நேரத்தில் எங்கள் தலைவர்கள் கூட்டணி குறித்து பேசுவார்கள்.” என்றார்.