ரயில் நிலையங்கள், தபால் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு குறித்த பாஜக-வினர் விமர்சனத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில், தனது பதிலாக பதிவு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம். இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?” என்று இங்கேயுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாகத் தமிழ் மீது இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!
நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மையாக நின்றனர். சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழ்நாடெங்கும் ஆதிக்க இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகள் நடத்தப்பட்டன.
துறையூரில் 1937-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்றவர் 28 வயது இளைஞரான அறிஞர் அண்ணா அவர்கள். இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய அன்றைய இராஜாஜி அரசின் செயலை வரவேற்றதுடன், மேல்நிலை வகுப்புகளில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் தலையங்கங்கள் எழுதப்பட்டன. காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அவர்கள். “வருணாசிரம தர்மம் காப்பாற்றப்படவும், கிராம ராஜ்ஜியம் ஏற்படவும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்” என்று கூறினார்.
இவற்றையெல்லாம் எதிர்த்துதான் பெரியார் தலைமையில் போராட்டக் களம் புகுந்தனர் தமிழர்கள். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசினுடை திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.
உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், கழக மாணவரணியின் முன்னெடுப்பில், ஆர்ப்பாட்டம் நடத்திய செய்திகளைத் தொலைக்காட்சிகள் வாயிலாகப் பார்க்க முடிந்தது. ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்திய கண்டனப் பேரணி என்பது சென்னை சௌகார்பேட்டை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் 1938-ஆம் ஆண்டு ஆண்களும் பெண்களுமாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இன்றைய பதிப்பு போல இருந்தது.
அப்போது நடந்த போராட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகிய 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீத்தம்மாள் தனது மூன்று வயது மகள் மங்கையர்க்கரசி, ஒரு வயது மகன் நச்சினார்க்கினியன் ஆகியோருடன் கைதாகி சிறை சென்றார் என்பது திராவிட இயக்கத்தின் தியாக வரலாறு.
இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம். சட்டத்தின் முன்பும் நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம்.! மொழிப்போரில் தந்தை பெரியார் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட போது, நீதிமன்றத்தில் அவர் வழக்காடவில்லை. கோர்ட்டார் அவர்கள் திருப்தி அடையும் வகையில் தங்களால் எவ்வளவு அதிக சிறைத் தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வகையில் சிறையில் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இடமுண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாய்க் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் துணிச்சலாக!
"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!
தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே… pic.twitter.com/R2TltgPDR3— M.K.Stalin (@mkstalin) February 26, 2025
அன்று தந்தை பெரியார் சொன்னதைத்தான் பின்னாளில் பேரறிஞர் அண்ணா சொன்னார். அதன்பின் முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார். சொன்னபடி செய்தார்கள் நம் தலைவர்கள்.
தாழ்ந்த தமிழகத்தை நிமிர்த்தி உயர்த்தியது திராவிட இயக்கம். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வஞ்சகத்தைத் தொடர்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம்.வஞ்சகத்தை எதிர்த்திடவும், வளமான தமிழ்நாட்டைப் பாதுகாத்திடவும், மாநில உரிமைக்கான குரலுடன் தாய்மொழி காத்திடும் முழக்கத்தையும் முன்னிறுத்துவோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
